இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா செய்தது என்ன?–மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு

முன்னுரை

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எனக்கு பெரிய மதிப்பு என்பது இல்லை. ஆனால் மத்திய அமைச்சர் திரு. ப.சிதம்பரம் குறித்து ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு. அவர் எங்கள் ஊர்க்காரரும் கூட. மேலும் நான் முதன்முதலில் நேரில் பார்த்த அரசியல்வாதியும் அவர்தான். குறிப்பாக அவரது பேச்சுத்திறன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் பேசுவதில் வல்லவர். ஆனால் அவரது சில கருத்துக்கள் எனக்கு பிடித்தமானவை அல்ல. அவர் சார்ந்த கட்சிக்காக அவ்வாறு பேசுகிறார் என்று நினைக்கிறேன்.

பொதுவாகவே இலங்கை பிரச்சனை குறித்து ஒருவர் கருத்து சொல்ல வந்தார் என்றால், முதலில் காங்கிரஸை ஒரு காய்ச்சு காய்ச்சிவிட்டுத்தான் மற்றவற்றை ஆரம்பிப்பார். பலர் அதனூடாக இந்திய அரசையே காய்ச்சுவார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழலில் உண்மையில் இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு செய்தது என்ன? வேறு என்னென்ன செய்திருக்க முடியும் என்பதைக் குறித்து சென்னையில்  நவம்பர் 30, 2013 அன்று ஒரு கூட்டத்தை தானே ஏற்பாடு செய்து, பேசியிருக்கிறார். அவரது பேச்சை துக்ளக் தனது சென்ற வார இதழில் வெளியிட்டுள்ளது. அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இங்கு முழுமையாக வெளியிடுகிறேன். முக்கியமான சில இடங்களை highlight செய்துள்ளேன்.

இதன் மூலம் திரு. ப. சிதம்பரம் மீதான மதிப்பு மீண்டும் ஓரளவு வலுப்பட்டிருக்கிறது. இதை வெளியிட்ட துக்ளக்கை நினைத்தும், அதன் நெடுநாள் வாசகனாக இருப்பது குறித்தும் வழக்கம் போல் பெருமை கொள்கிறேன். இனி கட்டுரை….

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா செய்தது என்ன?–மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு

இலங்கைத் தமிழர் பிரச்சனையில், காங்கிரஸ் கட்சியும், மத்திய ஐ.மு. கூட்டணி அரசும் தொடர்ந்து கடும் விமரிசனங்களுக்கு ஆளாகி வரும் நிலையில், அந்த விமர்சனங்களுக்கு விரிவான பதில் தரும் வகையிலான ஒரு கூட்டம் கடந்த சனிக்கிழமை (நவம்பர்-30) அன்றூ சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, சிறப்புரை நிகழ்த்தியவர் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். ‘நாடாளுமன்றத்தில் இது பற்றி விவாதம் நடந்திருந்தால், அங்கு பதிலளித்திருக்க முடியும் அல்லது காங்கிரஸ் கட்சி மேடை அமைத்திருந்தால், இந்த விமர்சனங்களுக்குத் தகுந்த விளக்கங்களைச் சொல்லி இருக்க முடியும். இந்த வாய்ப்புகள் கிடைக்காததால், இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அமைப்பாளரும் நான்தான்; அழைப்பாளரும் நான்தான்; பேச்சாளரும் நான்தான். இது யாருக்கும் எதிரான கூட்டம் அல்ல…” என்ற பீடிகையுடன் சுமார் ஒரு மணி நேரம் தமது வாதங்களை சிதம்பரம் முன் வைத்தார்.

”இலங்கைத் தமிழர்கள் உரிமை பெற்ற வாழ்வு பெறுவதற்கும், ராஜீவ் காந்தியின் பெருமுயற்சியால் இலங்கை அரசுடன் உருவான ஒப்பந்தம் செயலுக்கு வந்திருக்குமானால், அங்கு ஒரு தமிழர் தொடர்ந்து ஆட்சியிலே இருந்திருப்பார். தமிழர்கள் வாழ்க்கை உயர்ந்திருக்கும். இத்தனை சோகங்கள் அங்கு நடைபெற்றிருக்காது. அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாததன் விளைவாக, அங்கு ஒரு உள்நாட்டுப் போர் மூண்டது. அந்த போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, இந்தியாவில் ஒரு பெரிய நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்திலும், போரை நிறுத்த முயற்சி எடுத்தோம். அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்த போர் முடிவுற்ற போது ஏறத்தாழ 65 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள்.

“இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது.. இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பழிச் சொல் வீசப்படுகிறது. அது நியாயமா என்பது பற்றி சிந்திக்க வைப்பதற்குத்தான் இந்தக் கூட்டம். இந்தப் பிரச்சனையை மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.

“ஒன்று – இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், அரசியல் உரிமைகள், சம அந்தஸ்து பெற்றுத் தருவது; இன்னொன்று – அங்கு நடந்த இனப்படுகொலை பற்றி விரிவாக ஒரு விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்களைத் தண்டிப்பது; மூன்றாவது – புலம் பெயர்ந்தவர்கள், வீடு இழந்தவர்கள் ஆகியோருக்கு அவர்கள் காலங்காலமாக வாழ்ந்த இடத்தில், மீண்டும் அவர்களுக்கு வாழ்க்கையை அமைத்துத் தருவது. இதில் நமது அரசு என்ன செய்திருக்கிறது, என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

”இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தருவது என்றால் அதை எப்படிச் செய்வது? உலகிலுள்ள 190 நாடுகளில் இலங்கையும் ஒரு இறையாண்மை பெற்ற நாடு. அது எந்த நாட்டினுடைய காலனியாகவும் இல்லை. அங்கு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது; நாடாளுமன்றம் இருக்கிறது. அந்த இறையாண்மை பெற்ற நாட்டில் தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள். இந்தியாவிலும் சிறுபான்மை மக்கள் வாழ்கிறார்கள். நமது நாட்டில் இஸ்லாமிய சமூகத்தினர், கிறிஸ்துவ சமூகத்தினர், வடகிழக்கில் வாழும் நாகா அல்லது மிஸோ மக்கள் அவர்களுக்கென ஒரு பார்வை, ஒரு அணுகுமுறை இருக்கிறது. இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு, இறையாண்மை பெற்ற அந்த நாட்டுக்கு, இன்னொரு நாடு உரிமைகளைப் பெற்றுத் தருவது எளிதான விஷயம் அல்ல.

“நம் நாட்டிலும் தனிநாடு கோருகிறார்கள்; மறந்து விடாதீர்கள். காஷ்மீரிலும் தனி நாடு கோருகிறார்கள். நாகாவிலே தனி நாடு கோருகிறார்கள். சீக்கியர்கள் ஒரு காலத்தில் தனி நாடு கோரினார்கள். மணிப்பூரில், “நாங்கள் என்றுமே பிரிட்டிஷ் காலனியில் இருந்ததில்லையே, நாங்கள் தனி நாடுதானே” என்று கூறுகிறார்கள். அந்த பிரச்சனைகளை எப்படி நாம் அணுகுகிறோம்? தனி நாடு கோரிக்கை சரி என்றா சொல்கிறோம்?

“ஆகவே இறையாண்மை பெற்ற இன்னொரு நாட்டில் சிறுபான்மை மக்களுடைய பிரச்சனையில் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது. அறிவுப்பூர்வமாகத்தான் அவர்களுக்கு உரிமைகள் பெற்றுத் தர முயற்சிக்க வேண்டும். அதைத்தான் நாம் செய்கிறோம். அதற்காகத்தான் இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் பல ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இலங்கை அரசியல் சாஸனத்தில் 13 – ஆவது ஷரத்து கொண்டு வரப்பட்டது. அந்த 13 – ஆவது ஷரத்தில் முக்கியமான அம்சங்கள் மூன்று. ஒன்று – சிங்கள மொழிக்கு இணையாக தமிழும் அரசு மொழியாக இருக்கும். இரண்டு – ஒவ்வொரு மாகாணத்திலும், மாகாண அரசு அமையும். மூன்று – வடக்கு மாநிலத்தையும், கிழக்கு மாநிலத்தையும் இணைத்து ஒரு மாகாண அரசு அமைப்பது. இதை நிறைவேற்றித் தருவதாக ஜெயவர்த்தனே நமக்கு வாக்குறுதி தந்தார். அதன் பிறகு வந்த அரசுகளும் அந்த வாக்குறுதியைத் தந்தன. 13- ஆவது திருத்தத்தை உண்மையாக, முழுமையாக நிறைவேற்றித் தருவோம் என்று சொன்னார்கள். ராஜபக்‌ஷவை ஒரு முறை சந்தித்தபோது, ‘13 – ஆவது திருத்தம் என்ன, 13 – ப்ளஸ் (அதாவது மேலும் தருகிறேன்)’ என்று சொன்னார். ஆனால் அந்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறிவிட்டது.

13-ஆவது திருத்தத்தை மேலும் சீர்குலைக்க வேண்டும் என்று ஒரு முயற்சி நடைபெறுகிறது. அதற்காக அங்கு நாடாளுமன்ற நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழர் கூட்டமைப்பு, இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. பல்வேறு ஷரத்துக்களை சிதைக்க ராஜபக்‌ஷ அரசு முயற்சி எடுக்கிறது. இதை நமது அரசு கடுமையாக எதிர்க்கிறது. 13-ஆவது ஷரத்தை எந்த வகையிலும் நீர்த்துப் போக செய்யக் கூடாது. முழுமையாக அதை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

“இறையாண்மை பெற்ற ஒரு நாட்டுக்கும், அதன் அண்டை நாட்டுக்கும் இடையே விவாதப் பொருளாக 13- ஆவது திருத்தம் மாறியுள்ளது. மிகுந்த சாதுர்யத்துடனும், ராஜதந்திரத்துடனும் இதை அணுகி, வடக்கு மாகாண தேர்தலில் வெற்றி பெற்ற விக்னேஸ்வரனையும் பயன்படுத்திக் கொண்டு, 13 – ஆவது திருத்தம் சிதைக்கப்படாமல் செயலாக்கப் படுவதற்கு இந்திய அரசு முயற்சிகளை எடுத்துள்ளது. இது சரியா, தவறா? இதற்கு வேறு மாற்று வழி இருக்கிறதா? இந்த பிரச்சனை தீரவேண்டும் என்றால், தமிழர்களுக்குச் சம உரிமைகள் பெற்றுத் தரவேண்டும் என்றால், ராஜதந்திரமான அணுகுமுறையைப் பின்பற்றி, 13 – ஆவது திருத்தத்தை செயல்படுத்த இந்திய அரசு எடுத்து வரும் பெரும் முயற்சிக்கு இந்திய மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

”அடுத்தது, அங்கு நடந்த இனப் படுகொலைக்கு உரிய விசாரணை. அந்தப் போர் ஏன் நடந்தது, யாரால் நடந்தது என்று இப்போது பேசுவதில் பயனில்லை. 2009- ஆம் அண்டு நாம் எடுத்த முயற்சிக்கு எல்லோரும் செவி சாய்த்திருந்தால் பிரபாகரனே கூட உயிரோடு இருந்திருப்பார். ஆனால், இரு தரப்பிலும் செவி சாய்க்கவில்லை. அந்தப் போருக்குப் பிறகு இலங்கை எல்.எல்.ஆர்.சி என்று ஒரு கமிஷனை அமைத்தது. ஆனால், தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; யாரும் தண்டிக்கப்படவில்லை.

“தொடர்ந்து இந்தியா கடந்த நான்கு ஆண்டுகளாக உலக அளவில் குரல் கொடுத்து வருவதால் பல நாடுகள் விழித்துக் கொண்டன. காமன்வெல்த் மாநாட்டில் கனடா பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றால், அதற்குக் காரணம் இந்தியா எழுப்பி வந்த குரல். ஐ.நா.வில் மனித உரிமைகள் அமைப்புக் கூட்டத்தில் 2012 –ல் மார்ச் மாதத்தில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைக் கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. அது கொஞ்சம் நீர்த்துப் போன தீர்மானம்தான். ஆனால், அதைத்தான் உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. 40,45 நாடுகள் கூடுமிடத்தில் எல்லோரும் ஏற்றுக் கொள்வதைத்தான் நம்மால் செய்ய முடியும். நாம் நினைத்ததையெல்லாம் செய்து விட முடியாது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக, இந்திய அரசு வாக்கு அளித்ததில் ராஜபக்‌ஷவுக்கு கடும் கோபம்.

”இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கூறியுள்ள கருத்துக்கள் பற்றி இங்கே பலர் சிலாகித்துப் பேசுகிறார்கள். இங்கிலாந்து பிரதமர் செய்ததை நமது பிரதமர் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள். இவர்களேதான் நமது பிரதமர் போகக் கூடாது என்றும் சொன்னார்கள். இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்திய பிரதமர் செல்லாதது ஒரு அதிர்ச்சி வைத்தியம். அதே சமயம், அந்த மாநாட்டை நாம் முழுமையாக புறக்கணிக்க முடியாது. இலங்கையையே புறக்கணித்து விட்டால், அங்குள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் நமது மீனவர்களின் பிரச்சனையை, யாரிடம் பேச முடியும்? மாகாண அரசுக்கு அதிகாரம் பெற்றுத் தர வேண்டாமா?

“இலங்கையைப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்தால், நமது அமைச்சருக்கு விசா கிடையாது என்று அந்த அரசு சொல்லிவிட்டால், என்ன செய்வீர்கள்? எங்கே போய் பேசுவீர்கள்? அப்படி விசா தரமாட்டோம் என்று அவர்கள் சொல்ல முடியுமா என்று கேட்கலாம். மோடிக்கு விசா கிடையாது என்று அமெரிக்கா சொல்லவில்லையா? ஆகவே இலங்கைத் தமிழர்களுக்காக இலங்கை அரசுடன் நாம் தொடர்ந்து பேச வேண்டும், மல்லுக் கட்டத்தான் வேண்டும். தொடர்பை அறுத்துக் கொள்ள முடியாது. நாம் எடுத்தது விவேகமான முடிவு. அங்குள்ள தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுத்த சரியான முடிவு.

“தொடர்ந்து நமது அமைச்சர்கள், அதிகாரிகள், ஏன் ஒரு கட்டத்தில் நமது பிரதமரும் இலங்கைக்கு செல்வார். பிரதமருக்கு விக்னேஸ்வரனுடைய அழைப்பு உள்ளது. யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் சென்றாலும், இலங்கைக்குச் செல்வதாகத்தான் பொருள். ஒரு கட்டத்தில் ராஜபக்‌ஷ தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் சென்று, விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இலங்கை தனது நிலையை மாற்றிக் கொண்டு, மனித உரிமை மீறல் பற்றி விசாரணை நடத்த உலக அரங்கில் தொடர்ந்து வலியுறுத்தி, இலங்கை இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரை நமது முயற்சி ஓயாது.

“கடைசியாக, அங்குள்ள தமிழர்களுக்கு என்ன செய்தோம் என்று கேட்கப்படுகிறது. இது பற்றி இந்திய வெளியுறவுத் துறை மூலமாக ஏடுகளில் ஒரு பக்க விளம்பரம் தந்துள்ளோம். கடைசியாக ராஜபக்‌ஷே இந்தியா வந்தபோது ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிற நிலையில் அதை நான் படித்துப் பார்த்தேன். எனக்கு திருப்தியில்லை. எத்தனை தமிழர் குடும்பங்கள் அங்கே வீடின்றி இருக்கிறார்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்து, ‘50 ஆயிரம் வீடுகள கட்டித் தரப்படும் என்ற ஒரு அம்சத்தைச் சேர்க்கலாம்’ என்று அப்போது நிதியமைச்சராக அந்த கூட்டத்தில் இர்ந்த பிரணாப் முகர்ஜியிடம் கூறினேன். ‘ராஜபக்‌ஷவிடம் இதை நீயே சொல்’ என்றார். பிரதமருடைய அனுமதி பெற்று நான் ராஜபக்‌ஷவிடம், ‘இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தரும் செலவை இந்தியா ஏற்றுக் கொள்ளும் என்ற ஷரத்தை இதில் சேர்த்தால், இன்னும் நன்றாக இருக்கும்’ என்றேன். ராஜபக்‌ஷ இதை எப்படி மறுக்க முடியும்? தமது அமைச்சர்களை உடனே கேட்டுவிட்டு சரி என்றார். அப்படி கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டது 50 ஆயிரம் வீடுகள்.

—————–

இதைத் தொடர்ந்து இலங்கை வாழ் தமிழர்களுக்கு இந்திய அரசு அளித்த பல்வேறு உதவிகளை பட்டியலிட்டுள்ளார். சுமார் 628.76 கோடி ரூபாய்கள் இதுவரை செலவழிக்கப்பட்டிருப்பதாகவும், நடப்பாண்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லியுள்ளார். மேலும்

“இவ்வளவும் இந்திய அரசு தன்னுடைய செலவில் செய்து வருகிறது. இவ்வளவையும் அந்த நாட்டில் செய்யும் போது, அந்த நாட்டுடனான தொடர்பை எப்படி அறுத்துக் கொள்ள முடியும்? இலங்கையுடன் முழுமையாக தொடர்பை துண்டித்துக் கொண்டால், அங்குள்ள தமிழர்களுக்கு இந்த காரியங்களை யார் செய்வது? இந்தியா செய்யாவிட்டால் வேறு எந்த நாடு செய்யும்?” என்றும் கேட்டுள்ளார்.

 

இவருடைய இந்த உரையில் குறைகள் இல்லாமலில்லை.

1. இவ்வளவு சொல்பவர், 2009ல் போரை நிறுத்த என்னென்ன முயற்சிகள் இந்திய அரசு செய்தது என்று தெளிவாக்கியிருக்கலாம்!

2. ஏதோ இந்தியப் பிரதமர் போயிருந்தால், கேமரூன் போல பேசியிருப்பார் (!!) என்று சொல்வது கொஞ்சம் அதீத நம்பிக்கைதான்!

3. மேலும் இந்தியா குரல் கொடுத்ததால்தான் உலகநாடுகள் விழித்துக் கொண்டன என்பதையெல்லாம் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் மன்னிக்க வேண்டும்.

4. மேலும் இலங்கை அரசின் செயல்பாடுகள் குறித்த இந்திய அரசின் அதிருப்தியை இன்னமும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம். எனினும், ஒரு அயல்நாட்டின் மேல் எவ்வளவு தூரம் நம்மால் அழுத்தம் கொடுக்க முடியும் என்பதும் முக்கியம்.

 

மொத்தத்தில் சொல்வதானால், அவருடைய உரை பெருமளவு தர்க்கரீதியாக சரியாகவே இருக்கிறது என்று எண்ணுகிறேன். சோ அவர்கள் “இலங்கையைப் பொறுத்தவரையில் இந்திய அரசின் செயல்பாடு எனக்கு திருப்தியளிக்கிறது” என்று எப்போதும் சொல்வார். அதற்கான காரணங்களை சிதம்பரம் நன்றாகவே விளக்கியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

Advertisements

“Sadhana–A network that connects learners”–அறிமுகம்

அறிமுகம்

சில வாரங்களுக்கு முன்பு, சாதனா – Sadhana என்னும் புதிய அப்ளிகேஷனை எனது இந்த இணையதளத்தில் தொடங்கியுள்ளேன். ஜூம்லா (Joomla) என்ற பிரபலமான content management system-ன் உதவியுடன் இதைத் தொடங்கியுள்ளேன். கணிப்பொறியியல் படிக்கும் மாணவர்கள் மற்றும் கணினி மென்பொருள் துறையில் பணியாற்ற விரும்பும் அனைவருக்கும் தேவையான தகவல்களை இதன் மூலம் பகிர்ந்து கொள்வது இதன் நோக்கம். மேலும் மாணவர்கள் உள்ளிட்ட இதன் பயனாளர்கள், தங்களுக்குள் செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் வசதிகள் அறிமுகப் படுத்த உள்ளேன்.

பதிவு செய்து கொள்ள

இதன் இணையதள முகவரிக்கு செல்லுங்கள். உங்களைப் பற்றிய சில விவரங்களை கொடுத்து உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். மின்னஞ்சல் மூலமாக உங்கள் விவரங்களை நாங்கள் சரிபார்த்துக் கொள்வோம். (குறிப்பு : இதில் சில பிரச்சனைகள் உள்ளதாக அறிகிறேன். உறுதிப்படுத்துதலில் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில், தயவு செய்து nallenthal@gmail.com என்னும் முகவரிக்கு தெரிவியுங்கள். ஆவன செய்கிறேன்)

அதன் பின், உங்களால் இந்த இணையதளத்தை பயன்படுத்த இயலும். தற்போது, கணினித் துறையில் வேலைக்கு சேர முயன்று கொண்டிருக்கும் புதியவர்களுக்கு, அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தலைப்புகளை தொகுத்து இந்த இணைய தளத்தில் அளித்திருக்கிறேன். மேலும் நானும் எனது சகா ஒருவரும் இந்த தலைப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறிய அறிமுகக் கட்டுரை என்னும் வீதம் எழுதிக் கொண்டிருக்கிறோம். வெகுசிலவற்றை மட்டுமே இதுவரை எழுத முடிந்திருக்கிறது. எனினும் கூடிய விரைவில் முடிக்க முயற்சிக்கிறோம்.

நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பதிவு செய்தவர்கள் அனைவருமே கட்டுரைகளை சமர்பிக்கும் வழிகள் ஜூம்லாவில் இருப்பதாக அறிகிறேன். இப்போதைக்கு அவற்றை நிறுத்தி வைத்துள்ளேன். எனவே உங்களது பங்களிப்பை தயவு செய்து nallenthal@gmail.com க்கு மின்னஞ்சல் செய்யுங்கள். பரிசீலனைக்குப் பிறகு உங்களுடைய பெயரிலேயே அவற்றை பதிப்பிக்கிறோம்.

இது ஒரு இலவச சேவை மட்டுமே. எந்த வித நிபந்தனைகளும் இல்லை. இந்த இணையதளத்தை பயன்படுத்திப் பார்த்து உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்!

நன்றியுடன்,
நல்லேந்தல் குழு.

பழைய பேப்பர் – துக்ளக்

முன்னுரை

துக்ளக் இதழின் மீது பெரும் நம்பிக்கையும், விருப்பமும் கொண்டவன் நான். துக்ளக் இணையதளத்தில் அதன் பழைய இதழ்களும் (2006ம் வருடம் வரை) கிடைப்பதால், அவற்றில் கிடைக்கும் சுவையான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் இந்தத் தொடர் பதிவுகளை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிக்கைகளின் பழைய செய்திகளையும் (கிடைக்கும் பட்சத்தில்) சேர்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். தமிழனின் “பழைய பேப்பர் படிக்கும் பண்பாட்டின்” மீது நம்பிக்கை வைத்து இதைத் தொடங்குகிறேன்.

2006ம் ஆண்டு மே 2ம் தேதியிட்ட துக்ளக்கில் இருந்து ஆரம்பிக்கிறேன். இதில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை வந்துள்ளது. அந்த மாதத்தில் தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடந்து தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அந்த சமயத்தில் (வாக்குப் பதிவு முடிந்து எண்ணிக்கை தொடங்குவதற்கு முன் என்று நினைக்கிறேன்) வந்த கட்டுரை இது.

யார் ஜெயிப்பார்கள் என்று ஜோதிடர்கள் சிலரிடம் கருத்துக்கள் பெறப்பட்டு அவை அச்சாகியுள்ளன.

கோட்டையூர் சிவசுப்ரமணியம் (ஆசிரியர், ஜோதிட முரசு).

 

எஸ்.ஆர். வைகை வளன்

 

கா.அறிவழகன் (ஜோதிடர், மதுரை)

ஆகிய மூவரின் கருத்துக்களும் வெளியாகி உள்ளன. இவற்றில் கா. அறிவழகன் தவிர மற்ற இருவரும் அ.தி.மு.க. வே ஜெயிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்! சோ அவர்களை அதிமுக ஜால்ரா என்று சொல்லி புறப்படுபவர்களுக்கு நல்ல தீனியாக இக்கட்டுரை இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜோதிடம் குறித்து எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தாலும், இந்த மாதிரி ஜோதிடங்கள் எவ்வாறு கணிக்கப்படுகின்றன என்பதே தெரியவில்லை. இதைக் கூட பொறுத்துக் கொள்வேன். சிலர் பங்கு வர்த்தகம் குறித்தும் ஜோதிடக் கருத்துக்களை வாரியிறைக்கின்றனர். அவையெல்லாம் எப்படி மக்கள் நம்புகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. யாராவது விஷயம் தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

இந்தக் கட்டுரைக்கான இணைப்பு இதோ.

http://www.thuglak.com/thuglak/main.php?x=archive/02_05_2006/yaar16_17.php&startpos=1

இந்தத் தளத்தில் நுழைய நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டியிருக்கும். பதிவு இலவசம்தான். ஆனால் சமீபத்திய இதழ்களை மட்டும் படிக்க முடியாது (கடைசி 12 இதழ்கள் என்று நினைக்கிறேன்). ஆனால் பழைய இதழ்களைப் படிக்க முடியும். எழுத்துரு பிரச்சனையால் என்னுடைய இந்தத் தளத்தில் இக்கட்டுரையை பதிவேற்ற முடியவில்லை. வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

ஸ்மார்ட்ஃபோன் எல்போ அல்லது ஆங்க்ரி பேர்ட்ஸ் எல்போ (Smartphone Elbow or Angry Birds Elbow)

2012ம் வருட இறுதியில் என் மனைவிக்கு முழங்கை மூட்டில் சிறிய அளவில் வலி வந்தது. அப்போது நாங்கள் ஜெர்மனியில் வசித்து வந்தோம். பனிக்காலம் ஆரம்பித்த நேரம். கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகரித்துக் கொண்டே வரவே, அங்கிருந்த மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனைக்கு சென்றோம். அவர் “இம்மாதிரி வலிகள் பொதுவாக இரண்டு காரணங்களால் வரலாம். ஒன்று, பனிக்காலத்தில் தசைகளின் இறுக்கம் காரணமாக. இரண்டு, அதிகமாக சிரமப்படுத்திக் கொள்வதால். மற்றபடி பயப்பட ஒன்றுமில்லை” என்று கூறினார். அவர் கூறிய மருந்துகளை எடுத்துக் கொண்டபோதும் வலி சரியாகவில்லை. பின் சில மாதங்களில் இந்தியாவுக்கு திரும்பிவிட்டோம். சரி வலி இதோடு விடும் என்று பார்த்தால் அதற்கான அறிகுறிகளே இல்லை.

இங்கு என் அம்மாவுக்கு மூட்டுவலிக்கு ஒரு மருத்துவரிடம் (அவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் பிரபலமானவர்) சென்றபோது, என் மனைவியின் கை வலிக்கும் ஆலோசனை கேட்டோம். அவர் “அம்மா… இந்த மாதிரி வலிகள் பெண்களுக்கு ரொம்பவே சாதாரணமாக வரும். கை மூட்டில் நீர் கோர்த்துக் கொள்வதால் இவ்வாறு வலி வரும். இதற்கு சில மாத்திரைகள் கொடுக்கலாம். மீறிப் போனால் மூட்டில் ஒரு ஊசி போடலாம். ஆனால் ஊசி போடுவதை நான் பரிந்துரைக்க மாட்டேன். ஏனென்றால் அதற்கு எளிதில் அடிமையாகி விடுவீர்கள். வீட்டு வேலைகளை மிகவும் குறைத்துக் கொண்டு நன்கு ஓய்வெடுங்கள். உங்கள் கணவரை நன்கு சம்பாதிக்க சொல்லி, வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் நல்ல தீர்வு” என்றார். இருபதுகளில் இருக்கும் என் மனைவி எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும்? வீட்டு வேலைகள் இல்லாவிட்டாலும் மற்ற வேலைகள் செய்ய வேண்டும்தானே? எனவே இது அவ்வளவு உசிதமான முடிவு இல்லை என்று விட்டுவிட்டோம். மருத்துவம் தொடர்ந்தது.

சென்னை அசோக் பில்லர் அருகில் உள்ள அந்த பிரபலமான மூட்டு வலி சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு உள்ள தலைமை மருத்துவர் என் மனைவியை பரிசோதித்து விட்டு ஒரு ரத்த பரிசோதனைக்கு சிபாரிசு செய்தார். அதற்கான கட்டணம் சுமார் ரூ.3000/- !!! சரிதான் என்று அதையும் எடுத்து கொடுத்தோம். அதைப் பார்த்த அந்த மருத்துவர் “இது ஒருவகையான வாதம். ஆரம்ப நிலைதான். பயப்பட வேண்டாம். மருந்துகளிலேயே குணப்படுத்தி விடலாம்” என்று நம்பிக்கையளித்தார். மருந்துகளும் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார் என் மனைவி. வலி நன்றாகவே குணமடைந்தது. இடையில் சொந்த ஊருக்கு செல்ல நேர்ந்தபோது, சில வேளைகள் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளமுடியாத நிலை வந்தபோது, வலி திரும்பவும் வர ஆரம்பித்தது. என் மனைவி கொஞ்சம் அதிருப்தியடைந்தாள். “இந்த மருந்துகள் வெறும் வலி நிவாரணி போன்றே உள்ளது. 2 வேளைகள் எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும் வலி வருகிறது. எனவே இது சரிப்படாது” என்ற முடிவுக்கு வந்தார். (நுண்ணுயிரியல் படித்தவர் என்பதால் மருந்த் மாத்திரைகள் குறித்து நிறையவே அறிவுள்ளவர் என் மனைவி!)

பின் மேலும் விசாரித்ததில், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோமியோபதி மருத்துவர் இவ்வாறான மூட்டு வலிகளுக்கு நன்றாகவே மருத்துவம் பார்க்கிறார் என்று தெரியவந்தது. அவரிடம் சென்றபோது, அந்த 3000 ரூபாய் ரத்த பரிசோதனை அறிக்கையை பார்த்துவிட்டு “இது டென்னிஸ் எல்போ. டென்னிஸ் விளையாடுபவர்களுக்கு வரும். இவர் எதோ பளு நிறைந்த வேலைகளில் ஈடுபட்டதால் இது வந்திருக்கிறது என்று யூகிக்கிறேன். 45 நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும். வலி நிச்சயமாக நிற்கும்” என்று உறுதியளித்தார். அந்த ஹோமியோபதி மருந்தை எடுத்துக் கொள்ள ஆரம்பித்ததிலிருந்து வலி சுத்தமாக விட்டுவிட்டது. இப்போதெல்லாம் அரிதாகவே அந்த வலி வருகிறது.

இதற்கிடையில் என் மனைவி “ஸ்மார்ட்ஃபோனை தொடர்ந்து உபயோகித்தால் வலி வருகிறது” என்று கண்டுபிடித்தாள். 2012 இறுதியில்தான் ஸ்மார்ட்ஃபோனும் வாங்கியிருந்தோம். மேலும் என்னைக் காட்டிலும் என் மனைவிதான் அதிகமாக அதைப் பயன்படுத்தி வந்தாள். எனவேதான் எனக்கு வலி வரவில்லை போலும்.  பிடிவாதமாக சில நாட்கள் உபயோகிக்காமல் இருந்தபோது வலி சுத்தமாகவே இல்லாமல் இருந்தது. இது குறித்து இணையத்தில் தேடியபோது கிடைத்த தகவல்கள் ஆச்சரியமாக இருந்தன்.

 • ஸ்மார்ட்ஃபோன் உபயோகிப்பவர்கள் நிறைய பேர் இம்மாதிரி வலிகளால் பாதிக்கப் படுகிறார்கள்.
 • இவ்வலி ஏறத்தாழ டென்னிஸ் எல்போ வலியை ஒத்தது.
 • வெளிநாட்டு மருத்துவர்கள் இவ்வலியை “டென்னிஸ் எல்போ” என்று அழைப்பதை விட்டுவிட்டு, கிண்டலாக “ஸ்மார்ட்ஃபோன் எல்போ அல்லது ஆங்க்ரி பேர்ட்ஸ் எல்போ” என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் மல்லாந்து படுத்துக் கொண்டு ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தும்போது இவ்வலியை அதிகமாக நாங்கள் உணருகிறோம் (ஆம். எனக்கும் இப்போதெல்லாம் இந்த வலி சிறிய அளவில் வருகிறது!!). மேஜையில் அல்லது சமதளமான இடத்தில் ஃபோனை வைத்து விட்டு பயன்படுத்தும்போது வலி ஏற்படுவதில்லை.

ஹ்ம்ம் நம் மருத்துவர்களை நினைத்தால் கோபமும் வருத்தமும் ஒரு சேர வருகின்றது. எங்களுடைய இந்த விஷயத்தில் (அந்த ஜெர்மனி மருத்துவரையும் சேர்த்து) மூன்று மருத்துவர்களுக்கு என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. மேலும் தவறாகப் புரிந்து கொண்டு சிகிச்சையும் அளிக்கிறார்கள். அந்த ஹோமியோபதி மருத்துவர் நல்லவேளை சரியான சிகிச்சை கொடுத்தார், என்றாலும் சரியான காரணத்தை அவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

என்னதான் இணையத்தில் வரும் தகவல்களை ஒன்றுக்கு பலமுறை சரிபார்க்க வேண்டும் என்றாலும், இந்த வகையிலான தகவல்களை நாம் நிச்சயம் நம் மருத்துவர்களிடமிருந்து பெறமுடியாது. அந்த வகையில் இணையத்திற்கு நாம் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்பு சென்னை பல்லாவரத்திலிருந்து குரோம்பேட்டைக்கு செல்லும் வழியில் உள்ள அந்த பிரபலமான மருத்துவமனைக்கு சென்றபோது அங்கிருந்த ட்யூட்டி டாக்டர் ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.  “இது ஒண்ணும் பெரிய பிரச்ச்னை இல்லை அம்மா. நீங்கள் வீட்டு வேலைகளை நிறைய குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு ரத்தப் பரிசோதனைக்கு எழுதிக் கொடுக்கிறேன்……..

மூங்கில் குடில்

ஒரு Update : இந்த உணவகம் மூடப்பட்டுவிட்டது

நேற்று இரவு போருர் சிக்னல் அருகே கடைகளுக்கு சென்றுவிட்டு, அப்படியே இரவு உணவை முடித்துக் கொள்ளலாம் என்று மூங்கில் குடில் என்று பெயரிடப்பட்டிருந்த உணவகத்திற்கு சென்றோம். மூங்கில் என்ற கருப்பொருளை வைத்து முழு உணவகத்தையும் வடிவமைத்திருக்கிறார்கள். உணவின் தரம் மற்றும் சுவை நன்றாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. மேலும் நிறைய, நிறைய உணவு வகைகள். கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. சில அரேபிய உணவு வகைகள் கூட இருந்தன!

ஆனால் உணவை பரிமாற எடுத்துக் கொள்ளும் நேரம் கொஞ்சம் அதிகம்தான். மேலும் பில் தொகையை செலுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஒருமுறை சென்று பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

நிற்க. இதில் முக்கியமான விஷயம் அவர்களுடைய உணவு வகைப் பட்டியல்தான். நிறைய எழுத்துப் பிழைகள். சில சிரிக்கவும், சிந்திக்கவும், பயப்படவும் வைக்கின்றன. உதாரணத்திற்கு சில.

Mutton Papper soup : காகிதத்தை papper என்று ஸ்வீடிஷ் மொழியில் குறிக்கிறார்கள். ஒருவேளை காகிதம் தின்ற ஆட்டின் சூப்பாக இருக்குமோ?

Sexy chicken Fried (Half/Full) : கோழியிலும் கவர்ச்சியா? பாதி மற்றும் முழு என்று வேறு சொல்கிறார்கள்.

Panner & panner tikka : அவரை 65 என்றால்? என்ன செய்வார்களோ? இதில் டிக்கா வேறு

Noodless (!?) – சில உணவுகளை மட்டும் வெகு தாமதமாகக் கொண்டுவந்ததன் காரணம் இப்போது புரிகிறது. அவையும் Noodless போல. ஆனால் அதை ஏன் குறிப்பிடவில்லை?

Gopi manchurian – ”கோபிநாத்”கள் தங்களுடைய “உடமைகளை” பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். “தவறினால்” நிர்வாகம் பொறுப்பல்ல

Kashmier naan – என்னை இந்த அரசியல் விளையாட்டுக்கெல்லாம் இழுக்காதீர்கள்!!

சில புகப்படங்கள் உங்கள் பார்வைக்கு

விடாது கறுப்பு

தினமும் அலுவலகம் செல்லும்போது, குப்பை மூட்டையைக் கொண்டு சென்று வீதி முனையில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்வது வழக்கம். வழக்கமான என் மறதியின் காரணமாக, அடிக்கடி குப்பையைக் கொட்ட மறந்து, அலுவலகம் வரை அந்த குப்பை மூட்டையை கொண்டு சென்று விடுவேன் 🙂 அன்றும் அப்படித்தான் ஆனது.

சரி, வரும் வழியில் குப்பையை போட்டுவிடலாம் என்று திரும்ப கொண்டு வந்தபோது, சாலையில் ஒரு வேக உடைப்பானில் வண்டி ஏறியபோது குலுக்கலில் குப்பை மூட்டை கீழே விழுந்துவிட்டது. நானும் கவனிக்கவில்லை. பின்னால் வந்த ”அன்பர் நெ.1” என்னைக் கூப்பிட்டு “நீங்க எதுவும் பிளாஸ்டிக் பை வண்டில மாட்டியிருந்தீங்களா? அது அங்க வுழுந்துடுச்சு” என்றார். நான் “ஆமா.(அவர் குப்பை மூட்டையைத்தான் சொல்கிறார் என்பதை உணர்ந்து) ஓ. அது பரவாயில்லை. தாங்க்ஸ்” என்றேன்.

பின் சிறிது தூரம் வந்த பிறகு பின்னாலிருந்து மறுபடியும் ஒரு குரல். இப்போது “அன்பர் நெ.2”. சரி அவரும் குப்பை மூட்டையைப் பற்றித்தான் சொல்லப் போகிறார் என்று பார்த்தால்……

..

..

..

மனுஷன் குப்பை மூட்டையை சிரத்தையாக எடுத்துக் கொண்டு என் பின்னாலேயே வந்து வழியை மறித்து, கையில் கொடுத்துவிட்டார்!!! நான் சிரிப்பை அடக்கிக் கொண்டு “ரொம்ப தாங்க்ஸ் ஸார். பை தெ வே அது குப்பை மூட்டைதான். இருந்தாலும் ரொம்ப தாங்க்ஸ்” என்றேன். 

பாவம். அவர் முகம் தொங்கிப் போய்விட்டது 😦 இருந்தாலும் நான் அதை சொல்லியிருக்க வேண்டாம் என்று அப்புறம் தோன்றியது. anyways damage has happened 🙂 பின் வாயும் சிரிப்புமாக அந்த மூட்டையை ஞாபகமாகக் கொண்டு வந்து குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வந்தேன். 

moral of the story : தமிழ்நாட்டில் இன்னும் கூட நிறைய நல்ல உள்ளங்கள் இருக்கின்றன். 

பி.கு : இந்தப் பதிவுக்கும், இந்தத் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு : அந்தக் குப்பை மூட்டையின் நிறம் ”கறுப்பு”.

சாப்பிடும் முறையில் கவனம் தேவை

சமீப காலமாக என் அம்மாவுக்கு, தாடை மற்றும் காதை ஒட்டிய பகுதியில் வலி இருந்து வருகிறது. ENT மருத்துவரிடம் ஆலோசித்தபோது, காதுகளில் பிரச்சனை இல்லை என்பது தெரிய வந்தது. பின் மேலும் சில ஆய்வுகளுக்குப் பிறகு, தாடையில் உள்ள எலும்புகளின் தேய்மானமே இதற்குக் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நாம் சாப்பிடும் முறையில் செய்யும் தவறுகளே இம்மாதிரியான தேய்மானங்களுக்குக் காரணமாக அமைவதாக அம்மருத்துவர் கூறினார். மேலும் என் அம்மாவிடம் அவர் உணவை உட்கொள்ளும் முறையைப் பற்றி கேட்டபோது வினோதமான ஒரு தகவலை சொன்னார். அதாவது என் அம்மா உணவை பற்களால் மெல்லும்போது ஒரு பக்கமாக மட்டும் (இடப்பக்கம்) கடித்து மெல்லுவாராம். தன்னுடைய சிறுவயதில் ஒருமுறை கடினமான ஒரு சீடையை வாயின் வலப்புறம் மூலம் கடிக்க முற்பட்டு, அதனால் ஏற்பட்ட வலி காரணமாக, சில காலம் தன்னுடைய இடப்புற பற்களால் மட்டுமே உண்ணுவதற்கு உபயோகித்து வந்திருக்கிறார். நாளடைவில் அதுவே பழக்கமாகியிருக்கிறது.

வலுக்கட்டாயமாக உணவை வலப்புறம் தள்ளினாலும், சில நொடிகளில் தானாகவே இடப்புறம் உள்ள பற்களாலேயே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட எலும்பு தேய்மானத்தால், வாயைத் திறக்கும் போது தாடை மற்றும் காதை ஒட்டிய எலும்புகளில் வலியாக உருவெடுத்திருக்கிறது. ”நல்லவேளையாக ஆரம்ப கட்டத்திலேயே வந்துவிட்டீர்கள். இந்தத் தேய்மானம் அதிகமாகும் பட்சத்தில் சிலருக்கு வாயைத் திறப்பதே கடினமாகிவிடும். பேச்சு, மற்றும் உணவு உட்கொள்ளுதல் மிகச் சிரமமான ஒன்றாக இருந்திருக்கும்” என்று மருத்துவர் கூறியுள்ளார்.

தற்போது, வலிநிவாரணிகள் மற்றும் சில மருந்துகளால் வலி குறைந்துள்ளது. உணவை சாப்பிடும்போது எச்சரிக்கையாக வாயின் இருபுறத்தையும் உபயோகித்து சாப்பிட்டால் நாளடைவில் இப்பிரச்சனை தீர்ந்து விடும் என்று மருத்துவர் ஆறுதலளித்துள்ளார்.

ஹ்ம்ம் சாப்பிடும் முறையிலும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இப்போதெல்லாம் நானும், வாயின் இருபுறங்களும் உணவை சம அளவில் அரைக்கிறதா என்று கவனித்து உணவை உட்கொள்கிறேன். Smile

பொதுவாகவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் நம்முடைய பற்களை சோதனை செய்து கொள்ளவேண்டும் என்று சொல்வார்கள். குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது செல்லவேண்டும் என்று கருதுகிறேன். குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்த உடனேயே குழந்தை மருத்துவரிடம், regular checkupல் பற்களின் நிலை பற்றி கேட்டுக் கொள்ளுதலும் நலம். நல்ம்

Munich-ல் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது

இந்த வலைப்பூவின் தொடக்கப் பதிவாக இது அமைந்தது துரதிருஷ்டம்தான். இருப்பினும் செய்தியின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு இச்செய்தி பதியப்படுகிறது.

நான் வேலை நிமித்தமாக ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இங்கு சென்ற திங்கட்கிழமை (28/08/2012), இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்டு, வெடிக்காமல் பூமியில் அமிழ்ந்து போன ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப் பட்டது!

அந்த குண்டு…
நன்றி : www.dailymail.co.uk

நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், தற்போது ஒரு கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்போது இந்த வெடிகுண்டு தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அந்தப் பகுதியில், போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அங்கு வசிக்கும் சுமார் 2500 மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜெர்மனி தலைநகர் பெர்லினிருந்து, வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். எனினும், வெடிகுண்டை செயலிழக்க வைப்பது மிகக் கடினம் என்று ஆனதால், பாதுகாப்பான முறையில் 29/08/2012 இரவு 9.54 மணியளவில், வெடிக்க வைக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவை இங்கு காணலாம்.

இருப்பினும் அருகில் இருந்த கட்டடங்களுக்கு சிறிய அளவில் சேதங்கள் இருந்தன. கண்ணாடி ஜன்னல்கள் உடைந்திருப்பதை இந்த வீடியோவில் காணலாம். இது தொடர்பாக இணையத்தில் தேடிய போது கிடைத்த தகவல்கள்.

 • 250 கிலோ எடையுள்ளது இந்த வெடிகுண்டு.
 • எந்த நாட்டால் இது வீசப்பட்டது என்று தெரியவில்லை. அமெரிக்கா மற்றும் ப்ரிட்டன் ஆகிய இருநாடுகளும் இவ்வகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளன.
 • ஒவ்வொரு வருடமும் ஜெர்மனியில் 600 டன் எடையுள்ள இம்மாதிரி வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டெடுக்கப் படுகின்றன.
 • இருப்பினும் பொதுவாக இம்மாதிரி குண்டுகள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் கண்டெடுக்கப் பட்டதில்லை.
 • 2010 வருடம், இது போன்ற ஒரு வெடிகுண்டை செயலிழக்கச் செய்த முயற்சியில் 3 வெடிகுண்டு நிபுணர்கள் உயிரிழந்தனர்.
 • இந்த வெடிகுண்டு ரசாயனப் பொருட்களை கொண்டிருந்ததால் இதை செயலிழக்கச் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
 • இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வீசப்பட்ட குண்டுகளில் 8ல் ஒன்று இம்மாதிரி வெடிக்காமல் பூமியில் அமிழ்ந்து போயுள்ளது.
 • ம்யூனிக் நகரின்மீது மட்டும் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சுமார் 50,000 குண்டுகள் வீசப்பட்டுள்ளன!
 • இன்னமும் 2500 வெடிகுண்டுகள் (மொத்த எடை 2,85,000 டன்), இது போன்று வெடிக்காமல் பூமியில் புதைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
 • மேலும் இவை கண்டெடுக்கப் படும் முன்னரே வெடிக்கும் அபாயமும் உள்ளது!
 • கடந்த 2006ம் ஆண்டு ஒரு கட்டடம் கட்டும் தொழிலாளி இப்படிப்பட்ட விபத்தால் உயிரிழந்துள்ளார். அவர் பயன்படுத்திய புல்டோசர் இவ்விபத்தில் சுமார் 60 அடி உயரத்திற்கு தூக்கி எறியப்பட்டுள்ளது!

நேற்று (29/08/2012) நான், இந்த வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்தேன். மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இது குறித்து என்னிடம் பேசிய ஒருவர் “ஜெர்மனி செய்தது மன்னிக்க முடியாத ஒரு தவறுதான். அதற்காக இவ்வளவு பெரிய பழிதீர்த்தலா?” என்று நொந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை சாதாரணமாக தாண்டிப் போனவர்களையும் காண முடிந்தது. போர் முடிந்து 60+ ஆண்டுகள் கழிந்தும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்போது சம்பந்தப்பட்ட அனைவரது துயரங்களும் மீண்டும் மீண்டும் கிளரப்படுகின்றன என்றே தோன்றுகிறது.

வெடிகுண்டை வீசியவர்களும் இல்லை. வெடிகுண்டை வீச ஆணையிட்டவர்களும் இல்லை. வீசப்படுவதற்குக் காரணமானவர்களும் இல்லை. வெடிகுண்டுகள் மட்டும் இருக்கின்றன. 60க்கும் மேற்பட்ட வருடங்கள் கழிந்தும் பழிதீர்க்கின்றன. என்னிடம் பேசிய அந்த நபர் கூறியது போல் “மீண்டும் இது போல் ஒரு கொடுமை உலகத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும்”.

நன்றி:

http://www.dailymail.co.uk
http://media.brisbanetimes.com.au

Create your website at WordPress.com
Get started