கும்பகோணத்திலிருந்து…

சமீபத்தில் என் அலுவலகத்தில் நடந்தது. அலுவலகத்தில் காஃபி வாங்குமிடத்தில் நின்றுகொண்டிருந்தபோது அருகில் வந்த ஒருவர், காஃபி போடுபவரிடம் ‘காஃபி ஃபரெஷ்ஷாக போடுகிறீர்களா?’ என்று கேட்டார். நானும் அருகிலிருந்த சிலரும் எங்களை கட்டுப்படுத்தமுடியாமல் திரும்பி அவரை பார்த்தோம். காஃபி அங்கே ஃரெஷ்ஷாக போடுகிறார்கள் என்பது பார்த்தாலே தெரியும். இவர் என்னடா இப்படி கேட்கிறார் என்று பார்த்தோம்.

காஃபி போட்டுத்தரும் பணியாளரும் சற்று எரிச்சலடைந்தாலும், பொறுமையாக ‘ஆமாம் சார்’ என்றார். அந்த நபர் ‘இல்ல சார், நான் ஏன் கேக்கிறேன்னா நான் கும்பகோணத்துக்காரன், காஃபி ஃரெஷ்ஷா இல்லேன்னா சட்டுன்னு கண்டுபிடிச்சுடுவேன், அதான், ஃரெஷ்ஷா போடுறதுன்னா சொல்லுங்க, இல்லேன்னா நான் டீ எடுத்துக்குறேன். ‘ என்றார். காஃபிக்காரரும் விடாமல் ‘நானும் கும்பகோணம்தான் சார். இது ஃரெஷ் காஃபிதான். இருந்தாலும் நீங்க இவ்வளோ கவலைப்படுறதாலே டீயே எடுத்துக்குங்க’ என்றார். மேற்கண்ட இரு சொற்றொடர்களை திரும்ப ஒருமுறை இருவரும் கூறிக்கொண்டனர். பின் அவர் ‘இருங்க இதோ வர்றேன்’ என்று சொல்லி, ஏழு டோக்கன்களை வைத்துவிட்டு பின்னாலிருப்பவர்களிடம் எதோ பேசத்தொடங்கினார். கடைக்காரரும் சரி ஏழு டோக்கன் இருப்பதால் எப்படியும் சில காஃபிகளாவது வாங்கி விடுவார் என்ற நம்பிக்கையில் மூன்று காஃபிகளை போட்டுவிட்டு காத்திருந்தார்.

பின்னர் திரும்பிய அந்த நபர் ‘சரி சார். இது ஒத்துவராது. நான் டீயே எடுத்துக்குறேன்’ என்று சொல்லி டீ இருக்குமிடம் நோக்கி நகர ஆரம்பித்தார். காஃபிக்காரர் வெறுத்து போய் பரிதாபமாக ‘சார், உங்களுக்குதான் சார் 3 காஃபி போட்டுருக்கேன், மீதி நாலு டோக்கனுக்கு டீ எடுத்துக்குங்களேன்’ என்றார்.

நம்மவர் லட்சியமே செய்யாமல் திரும்பி டீ எடுப்பதில் மும்முரமாக, காஃபிக்காரர் நொந்துபோய் நிற்க, அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் (எனக்கு காஃபி வந்துவிட்டதால்) நானும் கிளம்பிவிட்டேன். கும்பகோணத்தில் இப்படியெல்லாம் செய்தால் செவுளை திருப்பிவிட மாட்டார்களா? ஆச்சரியம்தான்.

Advertisements

உடல் ஒருபோதும் தவறு செய்யாது – எனது மகள் பிறந்த கதை

என்னைப்பற்றிய ஒரு சிறு அறிமுகம். கணிணி மென்பொருள்துறையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிவருகிறேன். திருமணமாகி விட்டது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தைக்கு 5 வயதாகிறது, இரண்டாவது குழந்தை பிறந்து சில வாரங்களாகியுள்ளன. இந்த பதிவு என்னுடைய கடந்த ஒரு வருட கால அனுபவக்குறிப்புகள். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது என்று முடிவெடுத்ததிலிருந்து குழந்தை பிறந்தது வரையிலான நிகழ்ச்சிகளின் சுருக்கமான நாட்குறிப்புகள். இந்த ஒரு வருடத்தில் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான சிலவற்றை கற்றுக்கொண்டேன் என நம்புகிறேன்.

1-மே-2014:. என் மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதியை ஒட்டி மாதப்போக்கு ஏற்படும். அவளுக்கு கொஞ்சம் நாளாக கொஞ்சம் அசதி மற்றும் ஜலதோசம் இருந்து வந்தது.

21-மே-2014: என் மனைவிக்கு வழக்கம்போல் மாதப்போக்கு ஆகவேண்டிய தேதி கடந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது. அவளுக்கு கொஞ்சம் நாட்களாக உடல் வலி மற்றும் ஜலதோஷமும் இருந்தது. இவையெல்லாம் கரு தரித்திருப்பதற்கான அறிகுறிகள் என்று நினைத்தோம். நாம் எப்போதும் ஒரு  கருவியை வைத்தோ அல்லது ஒரு  மருத்துவரிடமோ பரிசோதித்து ’நீங்கள் கர்ப்பமாக  இருக்கிறீர்கள்’ என்று சொன்னால்தான் நம்புவோம். அவ்வழக்கத்தையொட்டி நாங்களும் ’Pregnancy test stick’ வாங்கி  சிறுநீர் சுயபரிசோதனை செய்து கரு உருவாகியுள்ளது என்று உறுதிப்படுத்திகொண்டோம். அதன் பின் நாங்கள் யோசித்த ஒரே விஷயம் எவ்வாறு எங்கே குழந்தை பெற்றுக்கொள்வது என்று.

நாங்கள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தோம். எங்களுடைய முதல் குழந்தை பிறந்த விதம் என் மனைவிக்கு ஒரு பெரிய கசப்பான அனுபவமாக மட்டுமே இருந்தது. அதனால் நாங்கள் அதே மருத்துவரிடம் செல்வதற்கு தயாராக இல்லை. எங்கள் முதல் குழந்தை நம் ஊரில் ’Normal delivery’ என்று சொல்லக்கூடிய முறையில்தான் பிறந்தாள். ஆனால் எங்களால் அதை ’Normal delivery’ என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அவள் பிறக்கும் சமயத்தில் என் மனைவிக்கு மருத்துவர்களால் கணக்கிடப்பட்ட ’குழந்தை பிறக்கும் தேதி’ நெருங்கும் வேளை வரை பிரசவ வலி  வராமலே இருந்தாள். அதனால் பதட்டம் அடைந்த மருத்துவர் எங்களையும் பதட்டப்படுத்தி உடனடியாக மருத்துவமனையில் சேருமாறு கேட்டுக்கொண்டார். நாங்களும் அவர் கூறியதே தெய்வவாக்கு என்று நம்பி மருத்துவமனையில் சேர்ந்தோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் நாள் காத்திருந்தால் பிரசவ வலி இயற்கையாக கண்டிப்பாக வந்திருக்கும். மருத்துவமனையில் சேர்ந்த பின் கர்ப்பப்பை வாய் எவ்வளவு தூரம் திறந்துள்ளது என்று மருத்துவர் அடிக்கடி சோதனை செய்துகொண்டே இருந்தார் (cervix dilation test). ஒவ்வொரு பரிசோதனையும் மரண வலி என்று மட்டும் அன்றைக்கு எனக்கு தெரிந்தது. என் மனைவியின் அலறல் சத்தம் வெளியே நின்றுகொண்டிருந்த எங்களுக்கு நன்கு கேட்டது. பிரசவ வலி வரவைப்பதற்கு பிறப்பு உறுப்பில் ஒரு ஜெல்லை (gel) வைத்தார்கள். அதற்கும் வலி வரவில்லை என்று வலியை தூண்டும் மருந்தை (drips to induce labor) உட்செலுத்தினார்கள். இதற்கு முன்னதாக எனிமா (enema) கொடுத்து குடலை சுத்தம் செய்து வைத்திருந்தார்கள். வலி தூண்டும் மருந்து உள்ளே சென்ற  சிறிது நேரத்தில் வலி எடுக்க ஆரம்பித்துவிட்டது. என் மனைவியை பிரசவ அறைக்கு கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் குழந்தையும் பிறந்துவிட்டது. குழந்தை எளிதாக வரவேண்டும் என்பதற்காக பிறப்புறுப்பின்  துவாரத்தை பெரிதாக்க கத்தியை வைத்து லேசாக கிழித்திருக்கிறார்கள். இதற்கு ஆங்கிலத்தில் episiotomy என்று பெயர். குழந்தை பெற்ற பிறகு அதை தைத்து விடுவார்கள். இது நம் ஊரில் மிகவும் சாதரணமாக நடைமுறையில் உள்ள ஒன்று. அந்த நேரத்தில் எனக்கு இதை பற்றி எதுவும் தெரியாமல் ஒரு மூடனாக நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தேன்.  முதல் குழந்தை பிறந்து சில வருடங்களுக்கு பிறகு தான் இதைப்பற்றி எல்லாம் தெரிந்து கொண்டோம். அதனால் இந்த முறை, செய்த தவறை திரும்ப செய்யக்கூடாது என்று முடிவெடுத்தோம். இம்முறை நாங்கள் இயற்க்கை முறையில் குழந்தையை பெற்றுக்கொள்வது என்று தீர்மானித்தோம். நாங்கள் தேடிப்பார்த்ததில் கொச்சியில் ‘BirthVillage natural birthing centre‘ எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையளித்தது. .

24-மே-2014: BirthVillage – யை நான் தொடர்புகொண்டு சில தகவல்களை பெற்றேன். அதன் பிறகு நான் என் மனைவிடம் பேசினேன். அவளுக்கு எப்படி நாம் கொச்சி சென்று தங்கி பிள்ளை பெற்றுகொள்வது, சிரமமாக இருக்குமே என்று யோசித்து, விருப்பமில்லை என்று கூறிவிட்டாள். நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பலனில்லை.

25-மே-2014: BirthVillage ல் இருந்து பிரியங்கா என்பவர் என் மனைவியிடம் பேசினார். அவர் பேசிய பின்பு என் மனைவி கொச்சி சென்று குழந்தை பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தாள்.

27-மே-2014: நாங்கள் BirthVillage என்று முடிவெடுத்த பின்பு கூட எங்களுக்கு ஒரு குழப்பம் இன்னும் இருந்தது. மாதம் ஒரு முறை நாம் மகப்பேறு மருத்துவர் ஒருவரை சந்தித்து அவரிடம் ஒரு ஆலோசனை செய்யவேண்டும் என்று பிறரைப்போல் நாங்களும் எண்ணினோம். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒரு மூட நம்பிக்கை என்றே தோன்றுகிறது. நாங்கள் எங்கள் வீட்டினருகிலுள்ள ஒரு மருத்துவரை அணுகினோம். அவர் கரு சரியாக உருவாகியுள்ளது என்பதை உறுதி செய்ய ‘dating scan’ எடுக்க பரிந்துரைத்தார் (கட்டாயப்படுத்தினார்). அவருடைய மருத்துவமனையில் அதற்கான வசதியும் இருந்தது. நாங்களும் scanசெய்துகொண்டோம். எங்களுக்கு அந்த மருத்துவர் பேசிய விதம் மற்றும் எங்களை ஸ்கேன் செய்ய கூறிய விதம் அனைத்தும் எங்களுக்கு எரிச்சலை உண்டாகியது. விட்டால் போதும் என்று வீட்டுக்கு சென்றுவிட்டோம். அவர் எங்களுக்கு சில வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைத்தார். நாங்கள் எதையும் வாங்கவில்லை. மீண்டும் அவரிடம் செல்லக்கூடாது என்று முடிவெடுத்தோம்.

31-மே-2014: நான் முறைப்படி BirthVillage ல் அவர்கள் கேட்ட முன் பணத்தை கட்டி எங்கள் குழந்தை அங்கே பிறப்பதற்கு பதிவு செய்துகொண்டேன்.

9-ஜூன்-2014: இணையத்தில் கொஞ்சம் அலசியதில் ஒரு மருத்துவமனை பற்றி கேள்விப்பட்டோம். அங்கே உள்ள மகப்பேறு மருத்துவர் சென்னையில் மிகவும் பிரபலமானவர். அவரிடம் ஆலோசனைக்காக சென்றோம். அவரை சந்திப்பதற்குமுன் அவருடைய உதவியாளர் எங்களுடைய விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். எங்களுடைய பழைய ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்த பிறகு மீண்டும் அதுபோல் இன்னொரு ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறினார். ”பழைய ஸ்கேனில் குழந்தையின்  இதயத்துடிப்பு பதிவாகவில்லை, அதனால் மீண்டும் எடுங்கள்” என்று பரிந்துரைத்தார். எனக்கு ஸ்கேன் எடுப்பதிலேயே உடன்பாடு இல்லை. என்னைப் பொறுத்தவரையில் அது தேவையில்லாத ஒன்று. அதைவைத்து எதை சரிபார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே ஏதாவது சரியில்லை என்றால் அவர்களால் என்ன செய்துவிட முடியும்? ஸ்கேன் செய்வதால் கருவுக்கு பாதிப்பு இல்லை என்றும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஸ்கேன் எடுத்து பார்ப்பது நமக்கெல்லாம் ஒரு மூடநம்பிக்கையாகவே உள்ளது  என்று நினைக்கிறேன். மறுபடியும் அதே ஸ்கேன் எடுக்க சொன்னதால்  என் மனைவிக்கும் அதில் உடன்பாடு இல்லாமல் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறினோம்.

17-ஜூன்-2014: என்னுடைய மனநிலை என்னவென்றால் கர்ப்பம் என்பது நோய் கிடையாது. இதற்கும் மருத்துவருக்கும் சம்பந்தமும் இல்லை. இது அனைத்து பெண்களுக்கும் நடக்கும் ஒரு இயல்பான விஷயம். குழந்தை வரும் வரை நாம் காத்துக்கொண்டிருப்பது மட்டும்தான் நாம் செய்யும் வேலை. ஆனால் என் மனைவி மாதம் ஒருமுறை ஒரு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை செய்து மூன்றாவது மாதத்தில் ஒரு NT ஸ்கேன் செய்து கொண்டால்தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்க முடியும் என்று நம்பினாள். அதனால் நாங்கள் எங்கள் வீட்டின் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அங்கே உள்ள மருத்துவர் எங்களுக்கு ஒரு ரத்தப்பரிசோதனை செய்ய பரிந்துரைத்தார். அவர்கள் மருத்துவமனையில் உள்ள பரிசோதனை மையத்திலே அதை செய்துகொண்டோம். ரத்தப்பரிசோதனை அறிக்கை கிடைத்தது. மருத்துவர் அதை பார்த்துவிட்டு அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறினார்.

30-ஜூன்-2014: என் மனைவிக்கு பிறப்புறுப்பின் வெளிப்புறத்தில் ஒரு கட்டி ஒன்று உருவாகியிருந்தது. இது அவளுக்கு கடந்த ஒரு வருடத்தில் நான்காவது முறை. இதற்கு ஆங்கிலத்தில் Bartholin’s cyst என்று பெயர். அவளுக்கு முதன்முறையாக இந்த கட்டி 2013 நவம்பர் மாதம் வந்தது. அப்பொழுது கட்டி அதுவாக உடையும் வரை பொறுமையாக இருக்கமுடியவில்லை. ஏனென்றால் அவளுக்கு ஒரு பயங்கரமான வலி இருந்தது. அந்த வலி வந்தால் கட்டி பழுத்துவிட்டது என்று பொருள். அந்த வலி வந்து எட்டு அல்லது பத்து மணி நேரத்தில் கட்டி அதுவாக உடைந்துவிடும். வலி தாங்க முடியாமல் அப்போது நாங்கள் வேறு வழி இல்லாமல் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுவிட்டோம். அவர்கள் அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து கட்டியை அறுத்து வடியச் செய்தார்கள். அலோபதி மருத்துவர்கள் எப்போதுமே இந்த வலியையும் பிரச்சனையையும் தற்காலிகமாக தீர்ப்பதில் வல்லவர்கள். அவர்களிடம் இந்த கட்டி ஏன் வருகிறது என்பதற்கு பதில் இல்லை. அது மீண்டும் வராமல் இருப்பதற்கு தீர்வும் இல்லை. மறுபடியும் அவளுக்கு 2013 டிசம்பரிலும் 2014 பிப்ரவரியிலும் வந்தது. இந்த இரண்டு தடவையும் அவள் வலியை பொறுத்துக்கொண்டு காத்திருந்தாள். கட்டி அதுவாக உடைந்தது. இப்பொழுது (2014 ஜூனில், கர்ப்பமாக இருக்கும்போது) மீண்டும் வந்துள்ளது. பொதுவாக இதற்கு முன் வந்த கட்டிகள் மிக வேகமாக வளர்ந்து நான்கு அல்லது ஆறு நாட்களில் பழுத்து வடிந்துவிடும். இம்முறை கட்டி மிகவும் மெதுவாக வளர்ந்து வருவதாக தோன்றியது. என் மனைவி இரு ஹோமியோபதி மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து மருந்துகளும் எடுத்து கொண்டாள்.

10-ஆகஸ்ட்-2014: ம.செந்தமிழன் அவர்களின் செம்மை கூடல் சென்னையில் நடத்தும் முதல் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பு என் நண்பன் மூலம் கிடைத்தது. மருந்திலா வாழ்கை முறை பற்றிய கருத்தரங்கு. எனக்கு இந்த கருத்தரங்கு ஒரு பெரிய கண்திறப்பாக இருந்தது. மருந்திலா மரபுவழி மருத்துவம் (தொடுசிகிச்சை/acupuncture) பற்றிய அறிமுகம் கிடைத்தது. கருத்தரங்கு முடியும் வேளையில் சிலர் அவரவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள். இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்த அனுபவங்களை கலாநிதி மற்றும் சந்தோஷ் ஆகியோர் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களின் ‘இயற்கை வழியில் இனிய பிரசவம்’ என்ற புத்தகமும் கிடைத்தது. கருத்தரங்கு முடிந்தபின் எனக்குள் ஒரே சிந்தனை, ஏன் நாமும் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்ள கூடாது என்று. இதற்கு என் மனைவியை எப்படி சம்மதிக்க வைக்க முடியும் என்ற யோசனையுடன் வீடு சென்று அவளிடம் இது பற்றி பேசினேன். ஆனால் அவளுக்கு இதில் உடன்பாடு இருப்பதாக தெரியவில்லை. நானும் என் முயற்சியை கைவிடுவதாக இல்லை. ‘இயற்கை வழியில் இனிய பிரசவம்’ படித்த பின்பு எனக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்தது.

12-ஆகஸ்ட்-2014: என் மனைவி எனக்கு சில நாட்களுக்கு முன் அருள்ராஜ் என்பவரை அறிமுகம் செய்து வைத்தாள். அவர் கொட்டிவாக்கத்தில் ஒரு இயற்கை அங்காடி நடத்திவருகிறார். அவரும் மரபுவழி மருத்துவர்தான் என்று பின்னர் தெரியவந்தது. செந்தமிழன் அவர்களின் கருத்தரங்கு மூலம் எனக்கு மரபுவழி மருத்துவத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் பிறந்த்தது. என் மனைவிக்கு மருந்திலா மருத்துவத்தில் பெரிய நம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை. என்னுடைய வற்புறுத்தலின் பேரில் அருள்ராஜ் அவர்களிடம் தனது கட்டிக்கு சிகிச்சை எடுப்பதற்கு ஒத்துகொண்டாள். கட்டி இப்பொழுது கொஞ்சம் நன்கு வளர்ந்து வலி வர ஆரம்பமாகி இருந்தது. அருள்ராஜ் அவளுக்கு தொடுசிகிச்சை அளித்தார். அவர் உணவு முறைகளில் சில மாற்றங்களை கூறினார். பால் மற்றும் பாலினால் ஆன பொருட்களை உட்கொள்ள கூடாது, பசிக்கும்போது மட்டும் பிடித்ததை சாப்பிடவேண்டும், சத்து என்பதற்காக சுவை பிடிக்காத உணவுகளை சாப்பிட தேவையில்லை என்று கூறினார்.

21-ஆகஸ்ட்-2014: அருள்ராஜிடம் மீண்டும் தொடுசிகிச்சைக்காக சென்றோம். இம்முறை வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கு உதவி செய்ய இங்கே யாராவது உள்ளார்களா என்று விசாரித்தோம். நாங்கள் வீட்டிலேயே எளிதாக பிரசவம் பார்த்துக்கொள்ள முடியும் என்றும், அவருடைய நண்பர்கள் சிலர் கண்டிப்பாக உதவி செய்வார்கள் என்றும் அவர் உறுதி அளித்தார்.

1-செப்டம்பர்-2014: அருள்ராஜ் அவர்கள் மூலம் எங்களுக்கு மரபு வழி மருத்துவர் வஜிர் சுல்தான் பற்றி தெரியவந்தது. நாங்கள் வஜிர் சுல்தான் அவர்களை அவருடைய acupuncture home ல் சந்தித்தோம். எங்களுடைய சந்திப்பு வெறும் பத்து நிமிடங்கள் தான் நீடித்தது. அவர்  அக்கட்டிக்கு அவர் தொடு சிகிச்சை அளித்தார். நாங்கள் கட்டியை பற்றி அவரிடம் விளக்க முற்பட்டு ஆங்கில மருத்துவத்தில் உபயோகிக்கும் ’Bartholin Cyst’ பற்றி கூறினோம். அவர் அப்போது குறுக்கிட்டு ‘இது பிறப்பு உறுப்பில் வந்திருக்கும் ஒரு கட்டி என்று குறிப்பிட்டால் போதும். Medical terminology எல்லாம் உபயோகித்தால் அதுவே நமக்கு கொஞ்சம் பயத்தை உண்டு பண்ணும்’ என்றார். ”கட்டி உடலினுடைய  பிரச்சனை அதை உடல் சரி செய்துவிடும் அதை பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்றும் கூறினர். பிறகு பிரசவத்தைப் பற்றி அவரிடம் கேட்டோம். ”இப்போதைக்கு பிரசவத்தை பற்றி அதிகம் யோசிக்காதீர்கள். வீட்டிலேயே சுகப்பிரசவம் நடக்கும். தொடு சிகிச்சையாளர்களின் உதவி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு, நீங்கள் எதற்கும் பயப்படவேண்டம்” என்று கூறினார். அவருடைய நம்பிக்கையான பேச்சு எங்களுக்கும் நம்பிக்கையை அளித்தது. வீடு திரும்பியதும் நான் Birth Village பிரியங்காவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். நாங்கள் வீட்டிலேயே பிரசவத்தை மேற்கொள்ள இருக்கிறோம் என்றும் நாங்கள் முன்பு செலுத்திய பணத்தை எங்களிடம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். என் மனைவிக்கும் இதில் முழு சம்மதம் இருந்தது.

3-செப்டம்பர்-2014: வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது பற்றி யாரிடமும் கூறவேண்டாம் என்று என் மனைவி கூறினாள். எனக்கு அது சரியென்று படவில்லை, அதனால் நான் என் மனைவியின் அப்பா அம்மா மற்றும் அண்ணனிடம் இதைப் பற்றி கூறினேன். அவர்கள் யாருக்குமே இதில் துளியளவுகூட உடன்பாடில்லை. எனக்கும் அவர்களுக்கும் தீவிர வாக்குவாதம் ஏற்பட்டது. நான் முடிவாக என் மனைவி என்ன சொல்கிறாளோ அதை செய்யலாம் என்று கூறிவிட்டேன். அவளிடம் இதைப்பற்றி பேசியபோது அவளுக்கு இப்படி சண்டை போட்டு வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வதில் இஷ்டம் இல்லை என்று கூறிவிட்டாள். நான் என் முயற்சியை கைவிடுவதாக இல்லை. அவள் அண்ணனிடம் “நாம் அனைவரும் வஜிர் அவர்களை சென்று சந்திப்போம் அதற்குப்பிறகு அனைவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுப்போம்” என்று கூறினேன் அவனும் அதற்கு ஒப்புகொண்டான்.

8-செப்டம்பர்-2014: நான், என் மனைவி, மற்றும் அவள் அண்ணன் ஆகியோர் சென்று வஜிர் அவர்களை சந்தித்தோம். . எங்களின் அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். அதில் ஒரு கேள்வி ‘இப்படி வீட்டில் பிரசவம் பார்ப்பதில் ஏதாவது risk உண்டா?’ அதற்கு அவர் ‘உடல் ஒரு போதும் தவறு செய்யாது, இதில் தாயின் உயிருக்கு risk ஒன்றும் இல்லை. குழந்தையைப் பற்றி யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறினார்’. இந்த பதில் அவள் அண்ணனுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை. அவன் ‘இவர் எப்படி இதுல risk இல்லன்னு சொல்றார்? இவர் over confident ல பேசுறார். இவருடைய பேச்சில் தெளிவு இல்லை’ என்று சொல்லி அவரை அப்படியே நிராகரித்து விட்டான்’. நான் ஒருவன் மட்டும்தான் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்கு விருப்பம் தெரிவித்தேன். மற்ற அனைவரும் என் மனைவிஉட்பட BirthVillage க்கு தான் விருப்பம் தெரிவித்தார்கள். நான் வேறு வழி இல்லாமல் என் மனைவிக்காக ஒத்துகொள்ள வேண்டிதாயிற்று. எனக்கு எப்படி யோசித்தாலும் BirthVillage ல் குழந்தை பெற்றுக்கொள்வது வீட்டில் பெற்றுக்கொள்வதற்கு ஈடு ஆக முடியாது என்று தோன்றியது. வீட்டில் பிள்ளையை பெறுவது என்பது ஒரு புது அனுபவமாக இருந்திருக்கும். எனக்கும் இதில் பெரிய பிரச்னை இருப்பதுபோல் தெரியவில்லை. மரபு வழி மருத்துவர்கள் பிரசவத்தை பற்றி பேசும் போது இதைத்தான் குறிப்பிடுவார்கள் ‘பிரசவம் பார்ப்பது என்பது – நாம் பிரசவத்தை வேடிக்கை பார்க்க வேண்டும் அவ்வளவுதான்’. குழந்தை வரும்போது அதை பிடித்துக்கொள்ளவேண்டும். குழந்தை வரும் வரை காத்திருக்க வேண்டும். வேறு எதுவும் நாம் செய்யவேண்டியதில்லை. பிரசவம் பார்ப்பது என்பது அவ்வளவு இயல்பான விஷயம்தான். இதற்கு வீட்டில் பெரிய வசதி எதுவும் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஒரு புது shaving blade மற்றும் கீழே விரிப்பதற்கு ஒரு பெரிய sheet போதுமானது. ஒரு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்வதை விட கண்டிப்பாக BirthVillage சிறந்ததாக இருக்கும் என்று நம்பினேன் ஆனால் வீட்டில் பிரசவம் பார்ப்பது போன்ற வசதியும் சுதந்திரமும் அங்கே இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமாகவே இருந்தது. நாங்கள் BirthVillage ல் தொடர விரும்புவதாக அவர்களுக்கு தெரியப்படுத்தினேன்.

23-செப்டம்பர்-2014: நாங்கள் BirthVillage என்று முடிவு செய்த பின் இனிமேல் வேறு எந்த மகப்பேறு மருத்துவரையும் சந்திக்கக்கூடாது என்று முடிவுசெய்தோம். ஆனால் என் மனைவி anomaly ஸ்கேன் ஒன்று எடுக்க வேண்டும் என்று விரும்பினாள். எனக்கு ஸ்கேன் எடுப்பதில் உடன்பாடில்லை. அவளுக்காக ஒரு ஸ்கேன் எடுத்தோம்.

30-செப்டம்பர்-2014: இதற்கிடையில் அந்த கட்டி சிறிது குறைந்தது. வலியும் இல்லை. ஆனால் கட்டி இன்னும் இருந்தது, ஆனால் அதனால் எந்த ஒரு இடையுறும் இல்லை. பொதுவாக நம் உடம்பு, நமக்கு எது சிறந்தது என்று தீர்மானிக்கும். இந்த கட்டியை எடுத்துகொள்வோம். இந்த கட்டி பழுத்து வடிய வைத்தால் மிகவும் தீவிரமான வலி இருந்திருக்கும். குழந்தை கருவில் இருக்கும்போது அந்த வலியை கொடுக்ககூடாது என்று உடம்பு முடிவுசெய்திருக்கலாம். குழந்தை பிறந்த பிறகு தான் இந்த கட்டி வடியும் என்று எனக்கு தோன்றியது.

15-டிசம்பர்-2014: நான், என் மனைவி மற்றும் மகளுடன் கொச்சி வந்துசேர்ந்தோம். நாங்கள் முன்பே இங்கே ஒரு வீட்டை45 நாட்களுக்கு முன்பதிவு செய்திருந்தோம். வீட்டிலிருந்து BirthVilage  ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. காரில் சென்றால் 20 நிமிடங்களில் சென்றுவிடலாம்.

27-டிசம்பர்-2014: வாரம் ஒருமுறை எங்களுக்கு பிரசவம் பார்க்க உதவி செய்பவர்களிடம் (mid-wife) சந்திப்பு இருந்தது. ஒவ்வொரு வாரமும் அவர்கள் டாப்ளர் கருவி முலம் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்டார்கள். இதுவும் என்னை பொறுத்தவரையில் தேவையில்லாத ஒன்று. இதில் பாதகம் ஒன்றும் இல்லை என்றதால் நான் எதுவும் கூறவில்லை. BirthVillage ல் உள்ள உணவுமுறை பரிந்துரையாளர் என் மனைவியை நிறைய தண்ணீர் குடிக்க கூறினார்கள். கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துகொள்ள பரிந்துரைத்தார்கள். பசிக்கும்போது பிடித்ததை சாப்பிட வேண்டும், தாகத்திற்குதான் தண்ணீர் அருந்தவேண்டும் என்பதில்தான் எங்களுக்கு உடன்பாடு இருந்தது. அவளும் அதையே பின்பற்றினாள். நம் உடல் நலத்தை பொறுத்தவரையில் நம் அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை அமைப்பதை விட உணர்வின் அடிப்படையில் அமைப்பதுதான் சிறந்தது. அடிக்கடி தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது நம் அறிவு. தாகம் ஏற்படும்போது தண்ணீர் குடிப்பது என்பது நம் உணர்வின் அடிப்படையானது.

18-ஜனவரி-2015: பிரசவத்திற்கான முதல் அறிகுறி தெரிந்தது. என் மனைவிக்கு ரத்தம் கலந்த அடர்த்தியான ஒரு திரவம் பிறப்புறுப்பு வழியாக வந்தது (mucus plug). பொதுவாக இந்த திரவம் வந்து இரண்டு நாட்களில் பனிக்குடம் உடைந்து  பிரசவம் நடக்கும். நான் சில நாட்களுக்கு முன் பசுலூர் ரஹ்மான் அவர்களின்  ‘இறைவழியில் இனிய சுகப்பிரசவம்’ என்கிற புத்தகத்தை படித்ததில் எனக்கு பிரசவம் பற்றி ஒரு புரிதல் இருந்தது. அதில் சுமார் 35 தம்பதிகள் அவர்களுடைய பிரசவ அனுபவங்களை பகிர்ந்திருந்தார்கள். அதில் தொண்ணூறு சதவிகிதம் பேர் இதைத்தான் கூறியிருந்தார்கள். முதலாவதாக பனிக்குடம் உடையும். பனிக்குடம் உடைந்த அன்று அல்லது அடுத்த நாள் குழந்தை வெளியே வரும். குழந்தை வந்த பிறகு ஒரு 30 நிமிடங்களில் நஞ்சுக்கொடி (placenta) வெளியே வரும். இதில் எதையும் நாம் பிடித்து இழுக்கக்கூடாது தேவை இல்லாமல் முக்கி வெளியே தள்ள முயற்சி செய்யக்கூடாது. குழந்தை வெளியே வரும்போதும் நஞ்சுக்கொடி வெளியே வரும்போதும் தாய்க்கு மலம் கழிக்கும் உணர்வு ஏற்ப்படும் அப்பொழுது இயல்பாக முக்கும் உணர்வு ஏற்படும், குழந்தையும் பிறந்துவிடும்.

19-ஜனவரி-2015: என் மனைவிக்கு காலையிலிருந்து அவ்வப்பொழுது கொஞ்சம் இடுப்பு வலி இருந்தது. BirthVillage ல் எங்களுக்கு ஏற்கனவே எச்சமயத்தில் வீட்டிலிருந்து கிளம்பி வரவேண்டும் என்பதை கூறியிருந்தார்கள். 45 நொடிகள் நீடிக்கும் வலி சரியாக பதினைந்து நிமிட இடைவெளியில் வரும்போது நாங்கள் வீட்டிலிருந்து கிளம்பவேண்டும். அதுபோல வலி சாயங்காலம் சுமார் நான்கு மணிக்கு வரத் தொடங்கியது. நாங்கள் கிளம்பி மருத்துவமனைக்கு போய்ச்சேர்ந்தோம். அங்கே பிரியங்கா மற்றும் டான்னா (Donna) தயாராக இருந்தார்கள். இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் எங்களுடைய முதல் குழந்தையும் எங்களுடன் பிரசவம் நடப்பதை பார்ப்பதற்கு (மருத்துவரின் அனுமதியுடன்) வந்திருந்தாள்.சுமார் ஆறு மணிக்கு வலி பத்து நிமிட இடைவேளியில் வந்தது. பிரியங்கா அவருடைய அனுபவத்தில் இந்த வலியின் தன்மையை பார்த்து கூடிய சீக்கிரம் குழந்தை பிறந்துவிடும் என்று கூறினார். நாங்கள் பக்கத்தில் ஒரு உணவு விடுதியில் சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு சுமார் ஏழு மணிக்கு BirthVillage க்கு மீண்டும் வந்தோம். இப்போது வலி ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை வந்தது. இடைவேளை குறைய குறைய வலி அதிகரித்தது. சுமார் 8.30 க்கு பனிக்குடம் உடைந்தது. அவளுக்கு முக்கும் உணர்வு ஏற்பட்டது 8.40 க்கு குழந்தையின் தலை வெளியே தெரிய ஆரம்பித்தது. 8.45 க்கு தலை முழுவதுமாக வெளியே வந்தது 8.46 க்கு குழந்தை முழுவதும் வெளியே வந்தது. எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. நஞ்சுக்கொடி இன்னும் வெளியே வரவில்லை. குழந்தை வெளியே வந்ததும் சிறிது நேரத்தில் மலமும் சிறுநீரும் கழித்து லேசாக அழுதது. பிறகு நாங்கள் பால் குடிக்க வைத்தோம். சுமார் ஒன்பது மணிக்கு தொப்புள்கொடியை வெட்டலாமா என்று பிரியங்கா கேட்டார். என்னுடைய புரிதலின்படி நஞ்சுக்கொடி வந்தபின் தொப்புள்கொடியை துண்டிப்பது சிறந்தது. நஞ்சுக்கொடி வரும்வரை நாம் சிறிது நேரம் காத்திருக்கலாம் என்று கூறினேன். ஆனால் பிரியங்கா அவர்கள் நாம் கொடியை வெட்டிவிட்டு நஞ்சுகொடியை வெளியே இழுக்கவேண்டும் என்று கூறினார். எனக்கு அதில் உடன்பாடில்லை அதே சமயத்தில் என்னால் அந்த சூழ்நிலையில் அவர்களிடம் தீர்க்கமாக பேசவும் முடியவில்லை. ஒன்றும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையில் அதற்கு நான் ஒத்துக்கொண்டேன். ஒரு விரல் நீளத்திற்கு தொப்புள்கொடியை விட்டு வெட்டினார். பிறகு அதை பிளாஸ்டிக் கிளிப் மூலம் கட்டினார். அதன் பின் தொப்புள்கொடியை பிடித்து இழுத்து நஞ்சுக்கொடியை வெளியே இழுத்தார். நஞ்சுக்கொடி வெளியே வந்ததும் எங்களிடம் காண்பித்த பிறகு அதை அப்புறப்படுத்தினார். பிரியங்கா என் மனைவிக்கு இரத்தப்போக்கு சிறிது அதிகமாக உள்ளது என்று கூறினார். எங்கே அவள் மயங்கி விடுவாளோ என்ற பதட்டத்துடன் இருந்தார். அவளுக்கும் சிறிது தலை சுற்றல் இருந்தது. நாங்கள் ஒருவாறு சமாளித்து கொஞ்சம் தூங்கலாம் என்று முயற்சி செய்தோம். சுமார் பதினோரு மணி அளவில் அவளுக்கு தீவிரமான வயிற்று வலி இருந்தது. அவள் கிட்டத்தட்ட மயங்கும் நிலைக்கு போனாள். நல்லவேளையாக அவளுக்கு மயக்கம் வரவில்லை. நஞ்சுக்கொடியை பிடித்து இழுக்காமல் இருந்திருந்தால் இந்த அளவுக்கு வலியும் ரத்தபோக்கும் இருந்திருக்காது என்று எனக்கு தோன்றியது. வலியினால் எங்களால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. வலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இரத்தபோக்கும் குறைய ஆரம்பித்தது. எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு வலி நன்றாக குறைந்துவிட்டது. இப்பொழுதுதான் அவளால் ஒரு மணி நேரம் தூங்க முடிந்தது. தூங்கி எழுந்து குளித்தபின் இயல்பாக இயங்க முடிந்தது, புத்துணர்வாகவும் இருந்தாள். நாங்கள் மதியம் 12 மணிக்கு வீடுதிரும்பினோம். இது எங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாயாத அனுபவமாக இருந்தது.

இந்த அனுபவத்தின் மூலம் நான் சிலவற்றை கற்றுக்கொண்டேன். அடுத்து எனக்கு குழந்தை பிறந்தால் சில தவறுகளை நான் சரி செய்ய விரும்புகிறேன். அவற்றில் சில கீழே.

1. எந்த வித ஸ்கேனும் செய்யக்கூடாது. அலோபதி மகப்பேறு மருத்துவர்களை சந்திக்கவே கூடாது.

2. நஞ்சுக்கொடி இயற்கையாக வெளியே வரும்வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

3. பிரசவத்திற்காக கொச்சி செல்லத்தேவையில்லை. பிரசவத்தை வீட்டிலேயே பார்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மரபுவழி மருத்துவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளலாம்.

இக்கட்டுரையில் குறிபிட்டுள்ள மரபுவழி மருத்துவர்கள் மற்றும் BirthVillage முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்.

வஜிர் சுல்தான் – 98414 65989
அருள்ராஜ் – 98402 99080

BirthVillage – http://birthvillage.in/
No.52, Maplachery Road,
Near SBI, Vyttila, Cochin- 682019
98952 83189
0484 – 40431890484 – 4043189

ஹிந்து சமய ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி

திருவான்மியூர் பஸ் நிலையத்தின் பின்புறம் ராமச்சந்திரா கல்லூரி வளாகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற இந்த கண்காட்சிக்கு கஷ்டப்பட்டு ஜூலை 13 அன்று சென்றுவந்தேன். நான் நினைத்திருந்ததைவிட பெரிதாகவே இருந்தது. நுழைந்து சிலநேரமானபோது கூட சிறியது, எளிதில் சுற்றிப்பார்த்துவிடலாமென்றுதான் நினைத்தேன். நிறைய கடைகள், சில ரதங்கள், சில தற்காலிக ஆலயங்கள், வழக்கம்போல் சாப்பாட்டுக்கடை மற்றும் ஒரு மண்டபத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் என்று நன்றாகவே களை கட்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டமும் கணிசமாக இருந்தது. வாயிலில் ஆச்சரியமாக பாதுகாப்பு சோதனைகள். சிறிய பைகள் வைத்திருந்தவர்கள் உட்பட பைகள் கொண்டு வந்திருந்தவர்கள் தனியாக சோதனை செய்யப்பட்டார்கள்.

முகப்பிலேயே ஆர்.எஸ்.எஸ்ஸின் பத்திரிக்கையான விஜயபாரதத்தின் ரதம் நின்றிருந்தது. அங்கு இருந்த இளைஞரிடம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தபோது (கடந்த ஒன்றரை மாதமாக தமிழ்நாட்டை வலம் வந்துகொண்டிருக்கிறதாம்), ஒரு மஹாத்மாவை சந்திக்க நேர்ந்தது. கடையை பார்க்கவந்த அந்த நபர், விஜயபாரதம் இதழை புரட்டி பார்த்துவிட்டு, “பழைய இதழ்கள் ஏதேனும் இருந்தால் ஒன்று கொடுங்களேன். படித்துப் பார்த்துவிட்டு வாங்கிக் கொள்கிறேன்” என்று கேட்டார்! ஒரு இதழின் விலை ரூ.10 மட்டுமே! இந்த இளைஞரும் மறுபேச்சில்லாமல் ஒரு பழைய இதழை எடுத்துக் கொடுத்து “அதன் பின்னாலேயே, சந்தா முகவரி, மற்றும் இணையதள முகவரியெல்லாம் இருக்கு ஸார்” என்று சொல்லி அனுப்பிவைத்தார். இவர் தன் மகன்/மகளுக்கு எப்படி வரன் பார்க்கப்போகிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

கடைகளை பார்த்தபோது புத்தக சந்தைதான் ஞாபகத்திற்கு வந்தது. நிறைய புத்தகக் கடைகள். தமிழ்நாட்டில்தான் எத்தனையெத்தனை மஹான்கள் இருக்கிறார்கள். தலையை சரித்தபடி சிரித்த, ஒரு கையை உயர்த்தி அருள்புரிகிற, இருகைகளையும் உயர்த்தி அருள்புரிகிற, அன்புடன் பார்க்கிற பல மஹான்கள்.  தீவிரமாக முகத்தை வைத்திருந்த ஒரு மஹானின் புகைப்படம் கூட கண்ணில் பட்டது. அவர்களது பொன்மொழிகள், கேள்வி-பதில்கள், உரைகள் இப்படி கடைகள் ரொம்பி வழிந்தன. நிறைய குழுக்கள் அவற்றுக்கென தனி சீருடைகளுடன் வந்திருந்தன.

ராமகிருஷ்ண மடம், ரமணாஸ்ரமம், யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம், மூன்று சங்கர மடங்கள், மாதா அமிர்தனந்தமயி ஆசிரமம் என நான் அறிந்தவையும் அதில் இருந்தன. தமிழ்ஹிந்து தளத்தின் கடையென்று நினைக்கிறேன், நான் சென்றபோது அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு எங்கோ சென்றிருந்தனர். சில நிமிடங்கள் பொறுத்திருந்து பார்த்துவிட்டு வந்துவிட்டேன். இஸ்கான், மற்றும் ஹரே கிருஷ்ணா இயக்கதினரின் கடைகளும் இருந்தன. ஹரே கிருஷ்ணா இயக்கத்தை சேர்ந்த ஒருவர் என்னை படாதபாடு படுத்திவிட்டார்.

நிறைய அனாதை ஆசிரமங்களும் கடைகள் வைத்திருந்தனர். அங்கு கிடைக்கும் வருமானம் முழுவதும் அனாதை குழந்தைகளின் வளர்ச்சிக்காக பயன்படுவதாக சொல்லிக்கொண்டிருந்தனர். சில விசித்திரமான கடைகளையும் பார்த்தேன். பலவருடங்களாக அனாதை பிணங்களுக்கு இறுதி காரியங்களை செய்துவரும் ஒரு அமைப்பு, வாள், சிலம்பம் ஆகியவற்றை கற்றுத்தரும் ஒரு அமைப்பு, சமஸ்கிருதம் சொல்லித்தரும் ஒரு கல்லூரி மற்றும் ஒரு அமைப்பு என பலர் கடைகளை அமைத்திருந்தனர்.

ஒரு கனத்த உருத்திராட்ச மாலையை நான்கு சுற்றுக்களாக சுற்றி ஒருவர் அமர்ந்திருதார். ஆண்கள் போல் திருநீறை பட்டையாக அணிந்திருந்த பெண்மணி, குடும்ப சகிதமாக அமர்ந்து ஏதோ பொருட்களை விற்றுக் கொண்டிருந்த ஒரு பிராமண பெண்மணி, உட்கார்ந்த இடத்திலேயே ஆட்களை கூப்பிட்டு நோட்டிஸை திணித்த நபர்கள், ஹிந்து மதத்தினர் கேவலமாக நடத்தப்படுகின்றனர் என்று ஆதாரங்களை காட்டி முழங்கிய ஒருவர் என இடமே ரகளையாக இருந்தது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரபல ஆடிட்டர் திரு. எஸ். குருமூர்த்தி (அபிஷேக் பச்சான் நடித்த குரு திரைப்படத்தில் வரும் மாதவனுடைய பாத்திரம் குறிப்பது இவரைத்தான்!) என குமுதத்தின் மூலம் அறிந்தேன். ஞாயிற்றுக்கிழமையாக இருக்கிறது பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று நப்பாசையுடன் தேடிக்கொண்டிருந்தேன். கிடைக்கவில்லை.

ஒரு கடையில் அனைவருக்கும் மினரல் வாட்டர் கேன்களில் கொண்டுவந்த தண்ணீரை இலவசமாக கொடுத்தார்கள். வந்த அனைவருக்கும் எல்லா கடைகளிலும் கை நிறைய நோட்டிஸ்கள் கொடுத்தார்கள். ஒரு சில கடைகளில் ஒவ்வொருவருக்கும் இரண்டு வேறு. சில குழந்தைகள்கூட நோட்டிஸுடன் அலைந்தன. மற்றபடி சாப்பிடுமிடம் முதற்கொண்டு ஓரளவு சுத்தமாகவே பராமரித்திருந்தார்கள்.  நாங்கள் போன அன்று சீனிவாச திருக்கல்யாணம் நடத்தினார்கள். பாப்கார்ன், மிளகு தட்டை சகிதம் கண்டுகளித்தோம்.

ஒரேயொரு மிகக்கசப்பான விஷயம். தேய்வழக்காக எழுதவில்லை. நிஜமாகவே எரிச்சலாகவும், சோகமாகவும் இருந்தது. நிறைய ஜாதி சங்கங்கள் கடைகள் போட்டிருந்தார்கள். ஏறத்தாழ எல்லா ஜாதிகளுமே நீக்கமற நிறைந்திருந்தார்கள். வடநாட்டு, தென்னாட்டு ஜாதிகளும் அடக்கம். நான் பார்த்த கடைகளில், அந்தந்த சமூகங்களின் சிறப்பு, வாழ்க்கை வரலாறு, வகையறா புத்தகங்கள். மேலும் அந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் என்று பிரபலமானவர்கள் நிறைய பேரை முத்திரை குத்தி புகைப்படத்துடன் பேனர் வைத்திருந்தனர். ஜாதியின் தீமைகளைப் பற்றி படம் எடுத்த ஒர் இயக்குனரும் அடக்கம். அவர்களிடமெல்லாம் ஒப்புதல் வாங்கினார்களோ இல்லையோ தெரியவில்லை.

ஹிந்து மதத்திலும் இம்மாதிரி சேவை அமைப்புகள் நிறைய உள்ளன என்று தெரியும். இருப்பினும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பார்க்கும்போது சந்தோஷமாகவே இருந்தது. அடுத்த வருட கண்காட்சியை ஆவலுடன் எதிர்நோகியிருக்கிறேன்.

நான் பார்த்தவற்றில் பயனுள்ளதாக தோன்றிய இரண்டு கடைகள்.

1. ஆர்.எஸ்.எஸ்ஸின் கடை. சங்கத்தில் சேர வருபவர்களுக்கும் ஏற்பாடுகள் செய்திருந்தனர். சேர விரும்புவோர் அதன் இணையதளத்தில் சென்று உங்களுடைய தகவல்களை கொடுத்தால், அவர்களே உங்களை தொடர்புகொண்டு சேர்த்துக் கொள்வார்களாம்.

2. மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி. சமஸ்கிருத வகுப்புகள் எடுக்கிறார்கள். வரும் ஆகஸ்ட்டில் ஒரு கோர்ஸ் ஆரம்பிக்கிறார்கள். ஏப்ரல் வரை செல்லும் அதன் மொத்த செலவு ரூ.7000. சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை வகுப்புகள் நடைபெறும். தேர்வு செலவுகள் தனி. இதில் படிப்பதன்மூலம் சமஸ்கிருதம் எழுத, படிக்க, புரிந்துகொள்ள முடியுமாம்.

காமராஜை சந்தித்தேன் – சோ

சோ எழுதிய புத்தகங்களில் காமராஜை சந்தித்தேன் என்ற புத்தகம் மிக முக்கியமானதென்று நினைக்கிறேன். காமராஜ் இறந்த கொஞ்ச காலத்தில் துக்ளக்கில் சோ எழுதிய ஒரு கட்டுரைத்தொடரும், காமராஜுடன் பழகிய சிலர் எழுதிய கட்டுரைகளும் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது. காமராஜைப் பற்றிய மற்ற புத்தகங்களுக்கும் இதற்கும் (சோ எழுதிய கட்டுரைத்தொடர்) ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. இதில் காமராஜைப் பற்றி எழுதியுள்ள விஷயங்கள், சோ காமராஜை நேரடியாக கண்டு அவருடன் உரையாடிய விஷயங்களை மட்டுமே இதில் தொகுத்து கூறியிருக்கிறார். மற்றபடி பிறர் சொல்லக் கேட்டு எதையும் எழுதவில்லை(ஒரேயொரு சம்பவத்தைத்தவிர). இது இந்த புத்தகத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது என எண்ணுகிறேன் (நான் சோவை மிகவும் மதிப்பதால் & நம்புவதால்)

சோவுக்கும், காமராஜுக்கும் இடையிலான முதல் சந்திப்பு சண்டையுடன் தொடங்கியதாம். அந்த சம்பவம் இதில் இடம்பெறவில்லை. சோ எழுதிய அவரது சுயசரிதையான “அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்” என்ற புத்தகத்தில் அந்நிகழ்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. சோ எழுதிய ஒரு நாடகத்திற்கு அப்போது இருந்த காங்கிரஸ் அரசு (பக்தவச்சலம் முதலமைச்சர்) ஸ்கிரிப்டிற்கு லைசென்ஸ் கொடுத்து ஆனால் நாடகத்திற்கு சில தடைகள் விதித்துள்ளது. அதைப்பற்றி காமராஜ் சோவிடம் (இன்னொரு மேடை நிகழ்ச்சியில்) கேட்கப்போக, விவாதம் முற்றி, சோ எழுந்து மேடையிலேயே உரக்க கத்தியிருக்கிறார். காமராஜ் பதிலுக்கு கோபமாக உரக்க “ஓஹோ” என்று மட்டும் சொல்லியிருக்கிறார். பதிலுக்கு சோ அதேபோன்ற தொனியில் “ஆஹா” என்று சப்தமிட, விரக்தியுற்ற காமராஜ் மேடையிலிருந்து இறங்கி சென்றுவிட்டார். பின் பல மாதங்கள் கழித்து சந்தித்தபோது அதைப்பற்றியெதுவும் சொல்லாமல் சாதாரணமாக பேசத்தொடங்கிவிட்டார். இப்படி முதல் சந்திப்பு கோணலாக ஆரம்பித்தாலும், மற்றவை நேராகவே சென்று முடிந்திருக்கின்றன.

இந்தப்புத்தகத்தில் காமராஜைப்பற்றி நாம் அறிந்திராத தகவல்களும் உள்ளன. அவரது எளிமை பற்றி கேள்விப்பட்டிருப்போம். உண்மையில், தம் வீட்டிற்கு வருபவர்களுக்கு காஃபி முதலியவற்றை கொடுத்து உபசரிக்கக்கூட முடியாத அளவு ஏழ்மையில் இருந்தவர் அவர். மேலும் அவருடைய கட்சியிலிருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீதான அவருடைய நம்பிக்கையையும் இந்த புத்தகத்தின்மூலம் அறியமுடியும். உண்மையில் இந்த இருபகுதிகளையும் நான் படிக்கும்போது கண்ணீர் வருவதை தடுக்கமுடியவில்லை.

இதிலுள்ள சோவின் எழுத்துநடையும் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று. காமராஜ் இறந்த நேரத்தையொட்டி எழுதப்பட்ட தொடர் என்பதால் அவருடைய தாங்கமுடியாத துக்கத்தை இதில் காணலாம். மேலும் காமராஜை வாழும்போது தூற்றியவர்கள் மீதும், அவருக்கு தொல்லை கொடுத்தவர்கள் மீதும் சோவுக்கு உள்ள கோபத்தையும் இதில் காணலாம். காமராஜைப் புரிந்துகொள்ளாமல் விட்ட தமிழ்நாட்டு மக்கள்மீதான கோபத்தையும் இதில் காணலாம். ரொம்பவே கூர்மையான எழுத்துநடை, கடுமையான சொற்கள் என்று நேர்மைப் பிழம்பாக மாறி எழுதியிருக்கிறார்.

ஒரு விஷயம் : காமராஜ் இறந்தபோது அவரது அலமாரியில் சிறிதளவு பணம் மட்டுமே இருந்ததாக படித்திருப்போம். அதனுடன் ஒரு துக்ளக் இதழும் இருந்ததாக சோ ஒருமுறை துக்ளக் ஆண்டுவிழாவில் சொல்லிக்கேட்டிருக்கிறேன்!

ஒரு நல்லவரைப் பற்றி இன்னொரு நல்லவர் எழுதிய புத்தகம். முடியும்போது அவசியம் படியுங்கள்.

பெயர் : காமராஜை சந்தித்தேன்
ஆசிரியர் : சோ
வெளியீடு : அல்லயன்ஸ் பதிப்பகம்
விலை : ரூ.33 /- (நான் வாங்கியபோது. இப்போது ரூ.60 என்று உடுமலை சொல்கிறது)

குழந்தைகளின் திறன்கள்

நேற்று நண்பனொருவனின் அழைப்பின்பேரில் மாற்றுக்கல்வி வழங்கும் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன். முதல் பங்கேற்பு என்பதால் அதுபற்றி நிறைய தகவல்களை அளிக்கமுடியவில்லை. சிலகாலம் பொறுத்து அதைப்பற்றி எழுதுகிறேன். அந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் திறன் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவரவருடைய குழந்தைகள்/ தெரிந்த குழந்தைகளின் திறன்களைப் பற்றி பேச்சு சென்றது. அந்நிகழ்ச்சி முடிந்தபின்னரும் அதனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.

“குழந்தைகள் திறனற்றவை, அவற்றிக்கு ஒன்றும் தெரியாது, நாம் கற்றுக்கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே அவை விஷயங்களை கற்றுக்கொள்கின்றன என்று நாம் நினைப்பது மிகவும் தவறு. விக்டோரிய கல்விமுறை நமக்குள் திணித்த ஒரு மாபெரும் பொய் இது. குழந்தைகள் ஏற்கனவே அறிவுடன்தான் பிறக்கின்றன. அதை கெடுக்காமல் வளர்த்துவிட்டாலே போதும்” என்று அந்நிகழ்ச்சியில் சொன்னார்கள். அது உண்மைதான். எனக்குத் தெரிந்த ஒரு குழந்தையின் பிரமிக்கவைத்த ஒரு திறமையை பற்றி இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என் சகோதரி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்வீட்டில் ஒரு வடநாட்டு குடும்பம் வசித்து வந்தது. மிஸோரம் மாநிலத்தினர் என்று ஞாபகம். அவர்களின் குழந்தை தனது ஒரு வயதிலிருந்து என் சகோதரியின் வீட்டுக்கு வந்து விளையாடி பழகிக் கொண்டிருந்தது. என் சகோதரி மற்றும் அவரின் மகன் ஆகியோர் அக்குழந்தையுடன் விளையாடும்போது, தமிழிலேயே பேசி விளையாடுவர். ஏறக்குறைய இரு வருடங்களுக்குள் அக்குழந்தை நன்றாகவே தமிழில் பேச ஆரம்பித்துவிட்டது! அதே சமயம் அவர்களது தாய்மொழியையும் நன்கு பேசக் கற்றுக்கொண்டது! என் தாய் அவளுக்கு கற்றுக் கொடுத்த “தமிழ் மண்ணே வணக்கம்” என்பதை அவள் சொல்லும் அழகே தனி.

இனிதான் ஆச்சரியமே. என் சகோதரிக்கு தமிழ், ஆங்கிலம் தவிர வேறுமொழிகள் தெரியாது. அந்தப் பெண்ணின் அம்மாவிற்கு ஹிந்தி மற்றும் அவரின் தாய்மொழி தவிர வேறு மொழிகள் தெரியாது. ஆங்கிலம் ரொம்பவே உடைந்து வரும். இவர்கள் இருவரும் தகவல்களை பரிமாறிக் கொள்ள ரொம்பவே சிரமப்படுவார்கள். இருவரும் சிறு தகவல் சொல்வதற்குக்கூட தத்தம் கணவரையே எதிர்பார்க்க வேண்டிய நிலைமை.

இவ்வாறிருக்க, ஒரு நாள் என் சகோதரி இக்குழந்தையிடம் விளையாட்டாக தமிழில் ஏதோ சொல்லி “இதை உன் அம்மாவிடம் போய் சொல்” என்று அனுப்பியிருக்கிறார். ஆச்சரியப்படும் விதமாக அக்குழந்தை தன் அம்மாவிடம் போய் அவர்கள் தாய்மொழியில் அவ்விஷயத்தை சொல்லியிருக்கிறாள்! அப்போது அவளுக்கு மிஞ்சிப்போனால் மூன்று வயதுதான் இருந்திருக்கும்! யாராலும் நம்பவே முடியவில்லை. பிறகு அதேபோல் அவள் அம்மாவும் விஷயங்களை சொல்லியனுப்ப, அவள் இங்கு வந்து தமிழில் சரளமாக சொன்னாள்! ஒருவேளை உலகின் இளம் வயது மொழிபெயர்ப்பாளர் இவள்தானோ?

இத்தனைக்கும் இன்ன மொழியில் போய் சொல் என்றுகூட அந்தக்குழந்தையிடம் யாரும் சொல்லவில்லை. அவளே முடிவுசெய்து ஆளுக்கு ஏற்றாற்போல் அவர்களது மொழியில் பேசிவந்தாள். சில இடங்களில் கஷ்டப்பட்டாலும் பெரும்பாலும் சரளமாக மொழிபெயர்த்து வந்தாள். இருவருக்கும் தகவல் பரிமாற்றப் பிரச்சனை ஒருவழியாக தீர்ந்தது!

அந்தக்குழந்தையை பார்க்கும்போதெல்லாம் ரொம்ப ஆச்சரியமாக, பிரமிப்பாக இருக்கும். என்ன நினைப்பில் நாம் “உனக்கெல்லாம் ஒன்றும் தெரியாது” என்று குழந்தைகளிடம் சொல்கிறோம்? மேலும் சிலவருடங்கள் கழித்து அவள் தந்தைக்கு கொல்கத்தா பகுதியில் வேலை கிடைக்க சென்னை வீட்டை விட்டு காலிசெய்து போய்விட்டார்கள். கடைசியாக அவளை பார்த்தபோது என் அம்மா “எங்களையெல்லாம் ஞாபகம் வச்சுக்குவியா? தமிழை மறக்காம இருப்பியா?” என்றெல்லாம் கேட்க “மறக்கமாட்டேன்” என்று உறுதியளித்தாள்.  மேலும் “தமிழ் மண்ணே வணக்கம்” என்று சொல்லி விடைபெற்று சென்றாள். அவள் தமிழை மறந்தாலும் அவளை எங்களால் மறக்கவே முடியாது.

குழந்தைகளுடன் சீட்டு விளையாடுதல்

எங்கள் மகள் ஹரிணிக்கு (3.5 வயது) ஆண்டு விடுமுறை தொடங்கிய சமயத்தில் அவளுக்கு பொழுதுபோவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து சீட்டுக்கட்டு வாங்கலாம் என்று முடிவெடுத்தேன். என் அம்மாவைத் தவிர யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஒரு கட்டு மாத்திரம் வாங்கி ஹரிணியுடன் விளையாண்டேன் (விளையாண்டு வருகிறேன்). பின்வரும் விளையாட்டுக்களை அவள் மிகவும் ஆர்வமுடன் விளையாடுகிறாள்.

#1 Pairs

நமக்கு மிகவும் அறிமுகமான விளையாட்டுதான். சீட்டுக்களை கவிழ்த்து வைத்துவிட்டு, இரண்டிரண்டாக எடுக்கவேண்டும். இரண்டும் ஒரே எண்ணாக இருந்தால் அதை எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் திரும்ப கீழேயே வைத்துவிடவேண்டும். அவளது வசதிக்காக இவ்விளையாட்டை எளிமையாக ஆரம்பித்து படிப்படியாக விதிகளை சேர்த்து வந்தேன்.

இப்போதைக்கு A, J, Q, K மற்றும் Joker ஆகியவற்றை மட்டும் (எளிமைக்காக) பயன்படுத்தியுள்ளேன். முதல் நிலையில், இந்த எழுத்துக்களை மட்டும் கண்டுபிடித்தால் போதும், நிறமோ அல்லது பூவோ (Spade, Club முதலியவை) பிரச்சனையில்லை என்ற விதிமட்டும். கொஞ்சம் சிரமத்திற்கு பிறகு நன்றாகவே விளையாட ஆரம்பித்தாள்.

இரண்டாம் நிலையில், நிறங்களையும் சேர்த்து கண்டுபிடிக்கவேண்டும் என்ற விதியை சேர்த்தேன். அதாவது (K Spade & K Club சரியான ஜோடி. ஏனென்றால் இரண்டும் K மேலும் இரண்டும் கறுப்பு நிறம்). கொஞ்சம் தடுமாறினாள். நான் அவளை ஏமாற்றுகிறேனோ என்று ஒரு சந்தேகத்துடனேயே விளையாண்டுவந்தாள்.அப்புறம் பழகிவிட்டாள்.

அடுத்ததாக, ஒரே எண் மற்றும் ஒரே பூ இருந்தால் மட்டுமே சரியான ஜோடி என்று கருதப்படும் என்ற விதியை கொண்டுவரலாம் என்று இருக்கிறேன். இன்னமும் இதை செயல்படுத்தவில்லை. இரண்டு சீட்டுக்கட்டுகள் தேவைப்படும். அதனால் நிறுத்தி வைத்திருக்கிறேன். இவற்றை அவள் நன்கு விளையாடும் பட்சத்தில், எண்களையும் சேர்த்து பெரிய அளவில் விளையாடலாமென்றிருக்கிறேன்.

பிறகு யோசித்தபொழுது, இதை levelகளை தலைகீழாக பயன்படுத்தியிருக்க வேண்டுமோ என்று ஒரு சந்தேகம் வந்தது. உதாரணமாக ஒரே பூ, ஒரே எண் கொண்ட இரு சீட்டுக்களைத்தானே எளிதாக ஆரம்ப நிலையில் கண்டுபிடித்திருக்க முடியும்? ஆகவே இந்த லெவல்களை தலைகீழாக பயன்படுத்தினாலும் பயன் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

#2 மங்காத்தா

பதறவேண்டாம். இந்த விளையாட்டை எங்களூர் பக்கம் மங்காத்தா என்று சொல்வோம். சென்னையில் இதற்கு வேறு பெயர் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதாவது,

  1. இருக்கும் சீட்டுக்களை சரிசமமாக இருவரும் பிரித்துக் கொள்ளவேண்டும்.
  2. இருவரும் சீட்டுக்களை கவிழ்த்த நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது அடுத்து வரும் சீட்டு என்ன என்பது இருவருக்குமே தெரியக்கூடாது.
  3. இருவரும் ஆளுக்கொரு சீட்டை கீழே போடவேண்டும்.
  4. ஒரே எண்ணை இருவரும் போடும்வரை ஆட்டம் தொடரும்.
  5. இரண்டாவதாக ஒரே எண்ணை கீழே போடுபவருக்கு கீழே விழுந்திருக்கும் அனைத்து சீட்டுக்களும் சொந்தம்.
  6. உதாரணமாக, நானும் 4 போட்டு, அவளும் உடனடியாக அடுத்து 4 போட்டால், அதுவரை இருவரும் கீழே போட்ட அனைத்து சீட்டுக்களும் அவளுக்கே சொந்தம்.
  7. இவ்வாறு தொடரும் ஆட்டத்தில், அனைத்து சீட்டையும் முதலில் இழப்பவர், தோல்வியுறுவார்.

இதையும் ஹரிணி ரசித்து விளையாடினாள். நம்பமாட்டீர்கள், ஒரேமுறை மட்டுமே நான் ஜெயித்திருக்கிறேன். மற்ற அனைத்திலும் அவளே ஜெயித்துவிடுகிறாள். ஆரம்பத்திலாவது, அவள் ஜெயிக்கும் பொருட்டு, ஜோக்கரை அவள் சீட்டுக்கட்டுக்குள் நுழைத்துவிட்டு, அவள் அதைப் போட்டால், உடனே கீழே கிடக்கும் அனைத்து சீட்டுக்களையும் அவளுக்கே கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் போகப்போக ஜோக்கர் இல்லாமலேயே அவள் ஜெயிக்க ஆரம்பித்துவிட்டாள்! இதையும் முயன்று பாருங்கள்.

இதில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம், இம்மாதிரி விளையாட்டுக்கள் மட்டுமின்றி, இது தொடர்பான செயல்களிலும் அவளுக்கு ஆர்வம் இயல்பாக பிறக்கிறது. உதாரணமாக, இருவருக்கும் சீட்டு போடுதல், சீட்டுக்களை கலக்குதல்.

அவளால் அனைத்து சீட்டுக்களையும் தன் கையில் வைத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, கவிழ்ந்த நிலையில் விரித்து வைத்து கொடுத்தால், அதை எடுத்து சரிசமமாக போடுகிறாள். ஒரு சீட்டையும் தவற விடுவதில்லை. இவை போன்ற செயல்கள் அவளுக்கு மற்ற பொருட்களை எளிதாக கையாள்வதில் மிகவுமே உதவியாய் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

இதுகுறித்து எனக்கு ஒரு கேள்வி வந்தது. நிகழ்தகவு (probability) அடிப்படையிலான இந்த மாதிரி விளையாட்டுக்கள் எவ்வளவு தூரம் குழந்தைகளுக்கு உதவியாய் இருக்கும்?

இதுகுறித்து மாண்டிஸோரி கல்விமுறை குறித்து கற்ற ஒரு தோழியின் பதில்கள் (தமிழ்ப்”படுத்த”ப்பட்டது)

நீ செய்வது சரிதான், தொடர்ந்து இதுபோல் விளையாடு. இம்மாதிரி விளையாட்டுக்கள் (குறிப்பாக pairs) அவளுக்கு பொருட்களின் இயல்புகளையும், அவற்றின் வேறுபாடுகளையும் தெரிந்துகொள்ள உதவும். இந்த வயதில் வெற்றி தோல்விகளைப் பற்றிய எண்ணங்கள் அவளுக்கு இருக்காது ஆகவே அதை ரொம்பவும் பெரிதுபடுத்தாத வண்ணம் பார்த்துக்கொள். அவள் தோல்வியால் துன்புறுவதாக எண்ணினால் அவளுக்கு மறைமுகமாக உதவுவதும் ஆரம்ப நிலையில் சரிதான்.

சீட்டுக்களை வரிசைப்படி அடுக்கி விளையாடுவதும் (இதை ஹரிணி இப்போது விளையாடுகிறாள்), சீட்டுக்கட்டு மாளிகைகள் எழுப்புவதும்கூட விளையாடலாம் என்றும் கூறினார். எனது இந்த யோசனையையும் பாராட்டினார்!

ஒரு தேர்ச்சி பெற்ற மாண்டிஸோரி ஆசிரியையின் பாராட்டு பெற்றதை பகிர்ந்துகொள்ளாமல் விடுவேனா?

சைக்கிள் புராணம்

முந்தைய பதிவில் சொன்னபடி நான் சைக்கிள் வாங்கும்போது 6 கியர் வைத்ததற்கும், சாதா சைக்கிளுக்கும் ரூ.1000/-  மட்டுமே வித்தியாசம் இருந்தது. கியர் வைத்த சைக்கிள் ரொம்பவே ஆடம்பரமாக தோன்றினாலும் அதனாலும் நிறைய பலன்கள் உள்ளன. அவற்றையும், பத்ரியின் பதிவில் அவர் குறிப்பிட்டுருந்த அசௌகரியங்கள் குறித்த எனது கருத்துக்களையும் இதில் பார்க்கலாம்.

ஒரிஜினல் சைக்கிளில் ரேஸ் சைக்கிளுக்கு இருப்பதுபோன்ற வளைந்து நெளிந்த கைப்பிடிகளைக் கழட்டிக் கடாசிவிட்டேன்.

இது சரியல்ல என்பது என் எண்ணம். இம்மாதிரி வளைந்த கைப்பிடிகள் தொலைதூரம் செல்லும்போது ரொம்பவே உதவியாக இருக்கின்றன. மேலும் போக்குவரத்தில்லாத சாலையில் செல்லும் பட்சத்தில், ஓட்டிக்கொண்டிருக்கும்போதே சற்று இளைப்பாறவும் இவை உதவுகின்றன.

உட்காருவதற்கு என்று ஜெல் வைத்த மெத்து மெத்தென்ற சிறப்பு இருக்கையைப் போட்டுக்கொண்டேன்.

இதைப்பற்றி சைக்கிள் வாங்கும்போதே கேள்விப்பட்டேன். ரூ. 600 என்று சொன்ன ஞாபகம். நன்றாக சைக்கிள் ஓட்டும்பட்சத்தில் பார்த்துக் கொள்ளலாமென்று வாங்காமல் விட்டுவிட்டேன். ஆனால் இவர் எழுதியிருப்பதை பார்க்கும்போது வாங்கவேண்டுமென தோன்றுகிறது. பார்க்கலாம் !

இருள் சூழந்த நேரத்துக்காக பேட்டரியால் இயங்கும் ஒரு விளக்கு.ஒரு நல்ல ஹெல்மெட்

விளக்கு தற்சமயம் என்னிடமில்லை. அவசியம் வாங்கவேண்டும். ரொம்பவே தேவைப்படுகிறது. ஹெம்மெட் என் தலை அளவுக்கு கிடைக்கவில்லை! உங்க தலை சைஸ் ரொம்ப பெரிசு ஸார், ஆர்டர் பண்ணிவேணா பார்க்கலாம் என்று சொன்னார்கள். மேலும் அந்த ஹெல்மெட்டினால் என்னவிதமான பாதுகாப்பை நாம் பெறுகிறோம் என்பதை உறுதிசெய்துகொண்டு வாங்கலாமென்றிருக்கிறேன்.

சென்னையின் காலநிலை பற்றி குறிப்பிட்டுருந்தார். அதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சைக்கிளில் அலுவலகம் போன்ற நாம் நன்றாக தோற்றமளிக்க வேண்டிய இடங்களுக்கு செல்வதில் பயனில்லை. வேண்டுமானால் வார இறுதிகளில் அதிகாலையில் நல்ல தூர பயணங்களை ஆத்திரம் தீர மேற்கொள்ளலாம். மற்ற மாதங்களில் (மழை நேரம் தவிர) நிச்சயம் ஓட்டலாம். ரொம்பவே வியர்க்கும் நான் சொல்கிறேன்; நம்புங்கள்! மழை நேரங்களில் சைக்கிளை தவிர்ப்பது மனநலத்திற்கு நல்லது!

குண்டு குழியான சாலைகள் சைக்கிள் ஓட்டுவோருக்கே எளிது என்று நினைக்கிறேன். மற்றவர்களெல்லாம் தடார் தடாரென்று குழிகளில் விட்டு செல்லும்போது மிகக்குறைந்த அதிர்வுகளுடன் நான் எளிதாகவே கடந்து செல்கிறேன். ஆனால் தொடர்ந்த பழக்கத்தின் மூலமே இது சாத்தியமாகும். குறைந்தது 3 மாதங்கள் என் கணக்கில்.

சக பயணிகளைக் குறித்து ரொம்பவும் அலட்டிக்கொள்ளக் கூடாது. சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த புதிதில் ரொம்பவே பயப்படுவேன். கார்காரர்கள் அல்லது பைக்காரர்கள் வேகமாக வந்து மோதிவிடுவார்களோ என்று. ரியர்வியூ கண்ணாடி இல்லாமல் ஓட்டுவதால் வரும் பழக்கமின்மை என்று நினைக்கிறேன். ஏனென்றால் இப்போதெல்லாம் அவ்வளவு பயப்படுவதில்லை. சாலை திருப்பங்களில் சற்று கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால் வேகமாக வரும் சகபயணிகளுக்கு அந்த திருப்பங்களில் ஒருவன் சைக்கிளுடன் மெதுவாக முன்னேயோ அல்லது எதிரிலோ எதிர்பார்க்கமாட்டார்கள் இல்லையா? நிறையமுறை மணியை உபயோகித்து கொள்ள வேண்டியிருக்கிறது.

பிரேக் அடித்தபின் சைக்கிளை திரும்ப கிளப்புவது கடினம்தான். ஆனால் கியர்வைத்த சைக்கிளில் அந்த பிரச்சனை ரொம்பவே குறைவு. கொஞ்சம் கவனமாக முதல் கியருக்கு ஏற்கனெவே வந்திருந்தால் எளிதாக கிளப்பிவிடலாம். பொதுவாக நான் சாலைகளில் 2 கியருக்கு மேல் செல்வதில்லை. நெடும்பயணங்களுக்கு மட்டுமே 5, 6 என்று செல்வது. சில சமயம் போக்குவரத்தில்லாத நேரங்களிலும் பயன்படுத்திக் கொள்வேன்.

கியர் வைத்த சைக்கிள்கள் பராமரிப்பு செலவு வைக்கின்றன என்று ஒரு தவறான எண்ணம் பெரும்பாலோருக்கு உள்ளது. அது தவறு. நான் சைக்கிள் வாங்கி 1.5 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை சர்வீஸ் என்று எங்கேயும் கொடுத்ததில்லை. 3 முறை பஞ்சர் ஒட்டியது தவிர வேறு எந்த செலவும் இதுவரை வைத்தில்லை. மொத்தம் எப்படியும் ஒரு 250 கிலோ மீட்டருக்கு மேல் ஓட்டியுள்ளேன்.

ட்ராய் திரைப்படத்தில் ”You concentrate on your sword and his sword. nothing else” என்று சொல்வதுபோல நம் சைக்கிளையும், நம்மை சுற்றி செல்லும் வாகனங்களையும் மட்டும் கவனித்துக்கொண்டு சென்றால்தான் சைக்கிளில் செல்லமுடியும். மற்றபடி, யார் ஹெல்மெட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள், யார் குறுக்கே வந்து ப்ரேக் அடிக்கிறார்கள், அடித்தட்டு, மேல்தட்டு, கிளித்தட்டு என்று பார்த்துக் கொண்டிருந்தால் நமக்குதான் கஷ்டம். சிக்னலில் நிற்கும்போதுகூட சிக்னலை மீறுவோருக்கும் சேர்த்து வழிவிட்டு இடப்புறம் ஓரமாக நின்றுகொள்வேன். எனக்குமே அதுதான் பாதுகாப்பு.

மற்றபடி, சைக்கிளில் செல்வது உடலுக்கு நன்றாகவே இருக்கிறது. எளிதாகவும் இருக்கிறது. டிராஃபிக் ஜாம் பற்றிய கவலைகள் இல்லை. சாலைகளில் யூ டர்ன் எடுக்கும்போதுகூட இறங்கி தள்ளிக்கொண்டே நடைபயணியாகி தாண்டிவிட முடிகிறது. என்ன ஒன்று, எங்கள் அலுவலகத்தில் நிழலுடன் கூடிய சைக்கிள் நிறுத்தம் இல்லை. புகை பிடிப்பவர்களுக்குக்கூட நிழற்குடை அமைத்து கொடுக்கும் கருணையாளர்கள் எங்களையும் மதித்தால் நன்றாக இருக்கும். இப்போது நிழலுக்காக கீழ்தளத்தில் இரண்டு தளங்கள் இறங்கி சென்று நிறுத்த வேண்டியுள்ளது. திரும்ப வரும்போது முதல் கியரில் ஏறிவருவதால் உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாகிறது!

உடல் பெருத்த, முதுகுவலியால் இன்னமும்கூட சிரமப்படுகிற, நான் சொல்கிறேன், சைக்கிள் வாங்குங்கள்! ரொம்பவே பயனுள்ள விஷயம்!

சைக்கிள் புராணம்

சமீபத்தில் பத்ரி சேஷாத்ரி எழுதிய சைக்கிள் க்ரானிக்கிள்ஸ் பதிவைத் தொடர்ந்து, நாமும் நமது சைக்கிள் புராணத்தை அளக்கலாமே என்று தோன்றியது. வழக்கம்போல் சோம்பல் காரணமாக இதோ அதோவென்று தள்ளிப்போட்டுக்கொண்டு வந்ததை இன்று எழுதுகிறேன். 

நான் சைக்கிள் வாங்க காரணமாக இருந்தது இரு விஷயங்கள். ஒன்று, பணி நிமித்தமாக ஜெர்மனியில் சிலகாலம் இருந்தபோது, அங்கிருப்பவர்கள் நிறையபேர் நிறைய விதங்களில் சைக்கிளை பயன்படுத்தியது. இரண்டு, நான் அந்த விஷயத்தை இங்கு வந்தபின் என் நண்பனொருவனிடம் சொல்லப்போக அவன் அதனால் உந்தப்பட்டு, ஒரு சைக்கிளும் வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். சரிதான் சொன்ன நாம் சும்மாயிருக்கலாமா என்று 2013 ஃபிப்ரவரி வாக்கில் சைக்கிளொன்றை வாங்கினேன்.

ஹெர்குலிஸ் ஆடோம் (Hercules Atom) கியர் வைத்தது. அப்போது கியர் வைத்த வண்டிக்கும், கியர் இல்லாத வண்டிக்கும் ரூ.1000 மட்டுமே வித்தியாசமென்பதால் கியர் வைத்த வண்டியே வாங்கிவிட்டேன். ஆரம்பத்தில் ரொம்பவே கூச்சப்பட்டுக்கொண்டே ஓட்டுவேன். அலுவலகத்திற்கெல்லாம் கொண்டுசெல்லுமளவுக்கு தைரியமேயில்லை. பிறகு ஓட்ட ஓட்ட கூச்சம் குறைந்து அலுவலகத்திற்கும் கொண்டுவர ஆரம்பித்தேன். பத்ரி சொல்வதுபோல் வியர்வை வெள்ளத்துடன்தான்.

இதற்கு நடுவில் ஒரு தொலைதூர பயணம் செல்லலாம் என்று நானும், ஒரு நண்பரும் முடிவு செய்தோம். அவர் ஏற்கனெவே சைக்கிள் கிளப்பில் சேர்ந்து பல பயணங்கள் செய்திருந்தார். எனக்கோ ரொம்பவே தயக்கமாக இருந்தது. சிறுவயதில் கூட ஒரேயொருமுறை 40 கி.மீ ஓட்டியதே என் சாதனையாக இருந்தது. சமீப காலங்களில் சைக்கிள் ஓட்டியும் பழக்கமில்லை. மேலும் உடல் பெருத்து, கடுமையான முதுகுவலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலமது. ஆனால் அந்த நண்பர் கொடுத்த உற்சாகம், நம்பிக்கை சொல்லி மாளாது. தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டேயிருந்தார். சரியென்று ஒரு நாள் கிளம்பியும் விட்டோம். அவரிடம் ”முடிந்தவரை ஓட்டுகிறேன். எல்லாவித ஏமாற்றத்திற்கும் தயாராக இருங்கள்” என்று முதலிலேயே தெளிவாக சொல்லிவிட்டேன். அவரும் ஒத்துக்கொண்டு வந்தார்.

காலை 4.30க்கு தொடங்கி போருரிலிருந்து, கிண்டி, மத்தியகைலாசம், வழியாக பழைய மஹாபலிபுரம் சாலையில் முடிந்தவரை செல்வது என்று திட்டம். எனக்கு மத்தியகைலாசம் வரை செல்வதே பெரிய விஷயமென்று எண்ணியிருந்தேன். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, சோளிங்கநல்லூர் சென்று, அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து, மேலும் ரெட்டிக்குப்பம் வரை சென்றோம். அதன்பின் நிச்சயம் முடியாது என்று தோன்றவே அங்கு சிறிது ஓய்வெடுத்தோம். சில புகைப்படங்களும். பின்னர் அங்கிருந்து கிளம்பி சோளிங்கநல்லூர் வந்து பெரும்பாக்கம், மேடவாக்கம், சேலையூர் தாம்பரம் என்று நீண்டது. தாம்பரத்துடன் திரும்பி குன்றத்தூர் வழியாக போரூர் திரும்புவதாக திட்டம். சரி இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். புறவழிச்சாலை வழியாக செல்லலாமே என்று தோன்றவே, தாம்பரத்திலிருந்து புறவழிச்சாலையை அடைந்து, அங்கிருந்து பகல் 12 மணிக்கு போருர் வந்தடைந்தோம். ஏறத்தாழ 75 கி.மீ! காலை உணவு, மற்றும் ஓய்வு நேரங்களுடன் சேர்த்து 7 மணி நேர பயணம். என்னால் மட்டுமல்ல என்னை அறிந்தவர்களால்கூட இன்றுவரை இதை நம்பமுடியவில்லை. வெறும் ஊக்கம் மட்டுமில்லாமல், பொங்கல் சாப்பிடுங்க, நிறைய சக்தி கிடைக்கும் போன்ற அறிவுரைகளும், கடலைமிட்டாய் ஆகியவற்றை வழங்கி சக்தி கொடுத்தவருமான அந்த நண்பருக்கே இந்த சாதனை சென்று சேரும்!

அதற்கு முன்னரும் பின்னரும் நிறைய குறுகிய தூர பயணங்கள். போருரிலிருந்து கிண்டிவழியாக விமான நிலையம் சென்று, பின் பல்லாவரம், குன்றத்தூர் வழியாக போருரை வந்தடைந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. சென்றவாரம் போருரிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிவரை சென்று வந்தேன். நன்றாகவே ஓட்டமுடிகிறது. பத்ரி எழுதியதில் சில விஷயங்களுக்கு பதில்கூறும் பொருட்டு எழுத ஆரம்பித்தேன். பதிவு நீளமாக செல்வதால் அடுத்த பாகத்தில் அதைப்பற்றி எழுதுகிறேன்.

ராட்சச இயந்திரங்கள்

நண்பனொருவனின் திருமணத்தை முன்னிட்டு சில வருடங்களுக்குமுன் நெய்வேலி சென்றிருந்தோம். என் மற்றொரு நண்பரின் உறவினர் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் அப்போது வேலையிலிருந்தார். அவர்மூலமாக அந்நிலையத்தை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நிறைய ஆச்சரியமளிக்கும் விஷயங்கள் தெரியவந்தன. சிலகாலம் ஆகிவிட்டதால் நிறைய விஷயங்கள் ஞாபகத்திலில்லை. முடிந்தவரைக்கும் எழுதுகிறேன்.

ஐம்பது வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அந்நிலையம் அப்பகுதியில் கிடைக்கும் நிலக்கரியை (மண்ணோடு) தோண்டியெடுத்து, அனல்மின் நிலையத்திற்கு அனுப்பி, மாசுக்களை நீக்கி  மின்சாரத்தை தயாரிக்கின்றது. இங்கு நிலக்கரியைத் தோண்டியெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தை பார்த்தோம். மிகப்பெரிய இயந்திரம்! இதை இயக்குவதற்கு பதினைந்து பேர் வரை தேவைப்படும் என்று கேட்டதாக ஞாபகம். ராட்சசத்தனமாக நின்றுகொண்டிருந்தது.

4_sandvik_4

 

பெரிய அளவு நிலத்தை தோண்டி தோண்டி நல்ல பள்ளத்தில் நின்று கொண்டிருந்தது. முதலில் அதன் உருவ அளவு சரியாக விளங்கவில்லை. சாதாரண இயந்திரம் என்றே நினைத்தேன். அதன் அருகில் செல்லும் ஒரு லாரியை கண்டபோதுதான் அதன் பிரம்மாண்டம் புரிந்தது. அந்த இயந்திரத்திற்கு உதவுவதற்கென்று சில ஜேசிபி இயந்திரங்களும் அருகிலிருந்ததாக ஞாபகம். அவையெல்லாம் இதன்முன் சிறுகுழந்தைகளின் விளையாட்டு பொம்மைகாளாக காட்சியளித்தன.

 

https://i0.wp.com/www.nlcindia.com/about/images/mine2.jpg

அந்த இயந்திரம் இருக்கும் இடம் வரை சென்று சேர மண்ணாலான பாதை உள்ளது. இந்த இயந்திரத்தை இயக்குபவர்கள் காலையில் ஒரு ஜீப்பில் பயணம் செய்து அவ்விடத்தை அடைகிறார்கள். இந்த இயந்திரத்தின் முன்பகுதியில் சக்கரம் போலுள்ள பாகம் காலைமுதல் மாலைவரை தொடர்ச்சியாக சுழன்று, மண்ணைத் தோண்டி தோண்டி ஒரு கன்வேயர் பெல்ட் போன்ற பெல்ட்டில் தொடர்ச்சியாக போடுகிறது. அந்த பெல்ட் தொடர்ச்சியாக சுழன்று சுரங்கத்திலிருந்து அம்மண்ணை அனல்மின் நிலையம் வரை சென்று சேர்க்கிறது. அந்த பெல்ட் ஒரு பெரிய பாம்புபோல் சுற்றி சுற்றி வந்து நிலையத்தை அடைகிறது. அந்த பெல்ட்டின் நீளம் சுமார் 45 கிலோமீட்டர்!! பெல்ட் எங்கும் நிலக்கரி கலந்த கரியமணல்.

இதை ஏன் லாரிகளில் கொண்டு வரக்கூடாது என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் மலைப்பை தந்தது. முதல் விஷயம் லாரிகளில் ஏற்றிக் கொண்டு இங்குவந்து சேர்ப்பதற்கு எரிபொருள் நிறைய செலவாகும். இரண்டாவது மற்றும் முக்கியமானது, இந்த இயந்திரத்தின் வேகம். மணிக்கு 60 டிப்பர் லாரிகளில் நிரப்பும் வேகத்தில் இந்த இயந்திரம் செயல்படுகிறது. இந்த வேகத்திற்கு லாரிகளை நாம் எங்கு அனுப்புவது? ஆகவே பெல்ட்டில் வைத்து கொண்டு வந்து சேர்க்கிறோம் என்றார். அந்த இயந்திரமும், பெல்ட்டும் வேலைசெய்யும் விதம் பிரமிப்பை ஏற்படுத்தியது.

இந்த இயந்திரம் கிளப்பும் புழுதியை தணிப்பதற்காகவே லாரிகளில் தண்ணீரை கொண்டு சென்று பாய்ச்சுகிறார்கள். இதனால் ஓரளவு புழுதி கட்டுப்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார். இந்த நிலக்கரி கலந்த மண்ணிலிருந்து கரியை மட்டும் பிரித்தெடுத்துவிட்டு மிச்ச மண்ணை தனியாக கொட்டி வைத்திருக்கிறார்கள்.

NLC_MINE_1667828f

மேலே உள்ள படத்தில் தூரத்தில் பிண்ணனியில் தெரிவது இந்த இயந்திரங்களால் தோண்டியெடுத்து குவிக்கப்பட்ட மணல்மேடுகள்! (முன்னால் இருப்பது அந்த பெல்ட்டின் ஒரு பகுதியென்று நினைக்கிறேன். வலப்புறம் காலி பெல்ட் இயந்திரத்தை நோக்கி செல்கிறது போலும்)

பின்னர் வெளியில் வரும்போது அதேபோன்று இன்னொரு இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஓ, இந்தமாதிரி அவ்வப்போது மேலே கொண்டுவந்து வைத்திருப்பார்களா என்று அப்பாவியாக கேட்டேன். அவர் சொன்னார் “இல்லை, ஒருமுறை வேலைக்கு என்று கொண்டு சென்றுவிட்டால், பின் அந்த இயந்திரங்கள் அங்கேயேதான் இருக்கும். பழுது ஏற்பட்டாலும் அவற்றை திரும்ப கொண்டுவருவதில்லை. அங்கேயே பழுது நீக்கப்பட்டு மேற்கொண்டு இயக்கப்படும். அந்த இயந்திரத்தின் செயல்திறன் முழுவதும் முடிந்தபின்னரே மேலே கொண்டுவந்து பார்வைக்கு நிறுத்தி வைக்கப்படும்!!”

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Lemon Rice ( எலுமிச்சை சாதம்)

Ingredients :

Rice 2 cups
Mustard seeds 1/4 teaspoon
Channa dal 1/2 teaspoon
Groundnuts 1/4 teaspoon
Cashew nuts 1/2 teaspoon
Asafoetida a pinch
Turmeric powder 1/4 teaspoon
Green chillies 3
Coriander leaves Few
Curry leaves Few
Lime 1 ( Squeeze it and extract the juice)
Salt As per taste
Oil 3 tsp

Method :

Pressure cook 2 cups of rice by adding 3 and 1/2 cups of water. In a kadai, heat oil and add mustard seeds. When they splutter add channa dal, green chillies, groundnuts,cashe wnuts, curry leaves, turmeric and asafoetida powder. When nuts become golden brown, switch off the stove and keep the vessel aside. Add rice, salt and lime juice to it and mix gently. Garnish with coriander leaves and serve.

தேவையான பொருட்கள்:

அரிசி 2 கப்
கடுகு 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு 1/2 தேக்கரண்டி
நிலக்கடலை 1/4 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 3
கொத்தமல்லி இலை சில
கறிவேப்பிலை சில
எலுமிச்சை 1 (அதை கசக்கி சாறு பிரித்தெடுத்துக் கொள்ளவும்)
உப்பு சுவைக்கேற்ப
எண்ணெய் 3 தேக்கரண்டி

செய்முறை :

2 கப் அரிசியை  3  1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கடலை பருப்பு, முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வேர்கடலை, மஞ்சள் தூள், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். கடலைகள் பொன்னிறமாகிய பின் அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி வைக்கவும். அதில் வேகவைத்த சாதம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும். கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரிக்கவும்.

Create your website at WordPress.com
Get started