வாட்ஸாப்பிலிருந்து ஃபேஸ்புக்கிற்கு…

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கிலிருந்து விலகுவதாக முடிவு செய்தேன். எனது நேரத்தை அது மிகவும் கொல்வதாக எண்ணியதால் அந்த முடிவு. மேலும் ஃபேஸ்புக்கிற்கென எழுத ஆரம்பித்து ஒற்றைவரிகளாக சிந்திப்பதற்கு மட்டுமே மனம் பழகிவிட்டதாக ஓர் எண்ணம். நாம் சிந்திப்பவற்றைத் தொகுத்து கட்டுரைகளாக எழுத முடிந்தால் சரி, இல்லையென்றால் அவையெல்லாம் அப்படியே அவையெல்லாம் போய்த் தொலையட்டும் என்று முடிவு செய்தேன். ஏற்கனவே ஃபேஸ்புக்கை விட்டு பலமுறை விலகிச் செல்ல முயன்று தோற்றிருந்ததனால் இம்முறை சிறியதாக ஒரு குறிப்பை மட்டும் ஃபேஸ்புக்கில் நிலைத் தகவலாக இட்டுவிட்டு அமைதியாக வெளியேறினேன். சிலகாலம் எவரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. மனம் அடிக்கடி ஃபேஸ்புக்கைப் பார்க்க ஆசைப்பட்டாலும் இம்முறை முழுமனதுடன் அடக்கி வைக்கமுடிந்தது. அதன்பிறகு சில ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு சிறிய அளவு வெற்றியும் ஈட்டினேன். எனினும் எனது ஓய்வு நேரத்தை முழுவதும் பயன்படுத்தினேனா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். இதற்கிடையில் மெதுவாக வாட்ஸாப் பக்கம் என் கவனம் திரும்பியது. என் உறவினர் குழு ஒன்றிலும், நண்பர்கள் குழு ஒன்றிலுமாக ஏற்கனவே இருந்தாலும் அவற்றில் வரும் செய்திகளை அவ்வளவாக பார்ப்பதில்லை. ஏதாவது அரட்டை அடிக்க மட்டும் அவ்வப்போது செல்வதுண்டு.

ஆனால் இம்முறை ஃபேஸ்புக்கை விட்டதனால் கிடைத்த நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாட்ஸாப்பில் செலவிட ஆரம்பித்தேன். நான் ஆரம்பித்த ஆக்கப்பூர்வமான முயற்சிகள் சிறிது சிறிதாக நின்றுவிட்டன. இப்போது எதையுமே செய்வதில்லை. புதிய செய்திகள் வந்துள்ளன என்று வாட்ஸாப் அறிவிக்கும்போதெல்லாம் கை தானாக சென்று அதை எடுத்துப் பார்க்கிறது. இதன் நடுவில் என் தலைமுறை உறவினர்களெல்லாம் சேர்ந்து ஒரு குழு ஆரம்பித்தோம். அவர்களில் பலருடனும் என்னால் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அதிலும் குப்பைகளாக செய்திகள் வர ஆரம்பித்தன. ஆரம்பத்திலேயே அவற்றைத் தடுக்க முயற்சி செய்தோம். ஆனால் “எந்த செய்தியுமே யாரும் அனுப்ப மாட்டேன் என்கிறார்கள். அதற்கு இம்மாதிரி ஏதேனும் செய்திகள் வருவது நல்லதுதான் இல்லையா?” என்று மற்றவர்களால் பதிலளிக்கப்பட்டது. சரி நாமும் ஒரேயடியாக தீவிர முகத்தோடு இருக்கவேண்டாம் என்று அதை அப்படியே விட்டுவிட்டேன்.

சிறிது காலத்திலேயே என்னால் தாங்கமுடியாத அளவுக்கு மொக்கை செய்திகள் அந்தக் குழுவில் வர ஆரம்பித்தன. வரும் எந்த செய்தியையுமே “என்று சொல்லி சிரித்தார் மஹா பெரியவர் (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரர்)” என்று முடிப்பார்களோ என்ற பீதியுடனேயே படிக்க வேண்டியிருந்தது. அதில் வரும் ஒரு பத்து செய்திகளைப் படித்தாலே பின்வரும் முடிவுகளுக்குத்தான் வரவேண்டியிருக்கும்.

1. ஹிந்துக்கள் ரொம்ப சாது. மற்ற மதத்தினர் அவர்களை அழிப்பதற்காகவே திரிகிறார்கள்.
2. ஹிந்துக்கள் கலவரம் செய்தால்கூட அவை எல்லாம் சரிதான்.
3. ஹிந்துக்களில் பல முனிவர்கள் இன்னமும் உண்டு. அவர்கள் சபித்தால் கட்டாயம் பலிக்கும்.
4. மஹா பெரியவரால் முடியாததில்லை. ஒருவருக்கு ஏன் தலை அரிக்கிறது என்பதைக்கூட சொல்லத் தெரிந்தவர். இதை இப்போது எழுதும்போது எனக்கு தலை அரிக்கிறது. “பார் பெரியவரின் அதிசயத்தை” என்று இதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தே உங்களுக்கு வாட்ஸாப்பில் வரும் பாருங்களேன்!

இப்படியாக, கடும் மனச்சோர்வுக்கு உள்ளாக்கும் பதிவுகளாகப் படித்து படித்து சலித்துவிட்டேன். முழுக்க படிப்பதுகூட இல்லை. பார்த்துவிட்டு தாண்டிச் செல்வதே இவ்வளவு சோர்வளிக்கிறது. மேலும் ஒரே செய்தி பல குழுக்களில் வருவதும் கொடுமை. சரி இவர்கள் நம் உறவினர்கள்தானே, இவையெல்லாம் கட்டுக்கதைகள்தான் என்று குறைந்த பட்ச அளவில் நிருபித்தாலே ஏற்றுக்கொள்வார்களே என்று குறைத்து மதிப்பிட்டு அவ்வாறான இருபதிவுகளை எடுத்து அவை குறித்த என் கருத்துக்களை எழுதினேன். விவாதம் விதண்டாவாதமாகி குதர்க்கவாதமாகி நின்றதுதான் மிச்சம். என்னுடையது உட்பட மனித மனதிற்குள் இருக்கும் அழுக்கு அளவின் பிரம்மாண்டம் என்னை அச்சுறுத்தியது! எவ்வளவு கீழ்த்தரமான வசைகள்! வம்புப் பேச்சுக்கள்! விவாதம் ஆரம்பித்த சிறிது நேரத்திற்குள்ளேயே என் தரமும் கீழறங்கிச் சென்றது. எனக்கு எதிர்த் தரப்பில் இருந்தவர்களின் தரம் அதைவிட பலமடங்கு கீழிறங்கிச் சென்றதை நினைத்து சமாதானப்படுத்திக் கொண்டாலும், நான் ஏன் அவ்வளவு தரம் தாழ்ந்து சென்றேன் என்று இன்னமும் ஆச்சரியப்படுகிறேன்.

ஒருவழியாக வேறு சில உறவினர்கள் தனி உரையாடலிலும் குழுவிலும் இந்த அபத்தத்தைச் சுட்டிக் காட்டிய பின்னர் நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் “அதற்கு இப்படி பதிலளித்திருக்கவேண்டும். இப்படி சொன்னபோது அதை இப்படி எதிர்கொண்டிருக்க வேண்டும்” என்றெல்லாம் தோன்றிக்கொண்டே இருந்தது. அதிலிருந்து வெளிவர சில முழு நாட்கள் தேவைப்பட்டன! இதில் செலவான நேரத்தில் நான் ஈடுபட்டிருந்த ஆக்கப்பூர்வமான முயற்சிகளைத் தொடர்ந்திருந்திருக்கலாம். என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டிருக்கலாம். அல்லது வேலை தொடர்பான் விஷயங்களில் என் கவனத்தை செலுத்தியிருக்கலாம். எதையும் நான் செய்யவில்லை. ஏதோ இந்த மட்டுக்கு இதோடு நிறுத்திக் கொண்டோமே என்று திருப்தி படுத்திக் கொள்ளத்தான் முடிந்தது.

மேலும் ஒன்றை கவனித்தேன். ஜெயமோகனின் எழுத்துக்களில் படித்தவைதான் என்றாலும் நேரடியாக அவற்றை அனுபவிப்பதற்கு இப்போதுதான் முடிந்தது. ஒருவருக்கு புரியாதாகவோ பிடிக்காததாகவோ உள்ள விஷயங்களை எவரும் கவனித்துப் படிக்கவேயில்லை. என்னதான் விளக்கங்கள் எழுதினாலும் அதிலுள்ள ஒற்றை வரியையோ வார்த்தையையோ மட்டும் பிடித்துக்கொண்டு கலாய்ப்பாகவோ வசையாகவோ மட்டும் பதிலளித்துக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை வேறொரு குழுவில் ஜெயமோகன் அவர்களின் எழுத்துப் பாணியைப் பின்பற்றி ஒரு நீண்ட பதிவை இட்டேன். இத்தனைக்கும் அது பொதுவான பதிவுகூட இல்லை. சில நண்பர்களை அவர்கள் எழுதும் முறைகளைக் கிண்டலடித்து அவர்களின் பெயெரைக் குறிப்பிட்டே எழுதப்பட்டது. “என்ன சொல்ல வர்றே? ரெண்டு வரில சொல்லு” அல்லது “இதைத்தானே சொல்லவர்றே” என்று இருவரி பதில்தான் வந்தது. இத்தனைக்கும் தமிழில்தான் அதை எழுதியிருந்தேன். அங்குள்ள அனைவருமே தமிழ் வழி படித்தவர்கள்தான். “இது எப்படியிருக்குன்னா, வால்மிகிகிட்டையோ கம்பர் கிட்டயோ போயி, அடுத்தவன் மனைவி மேல ஆசைப்படக்கூடாதுன்னுதானே சொல்லவர்றீங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு” என்று மட்டும் பதிலளித்துவிட்டு நிறுத்திக் கொண்டேன்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, முகநூலை ஒரு கலங்கிய ஏரி என்று கொண்டால் வாட்ஸாப்பை கலங்கிய குட்டை என்றே கொள்ளவேண்டும். ஏரியிலாவது தெளிந்த நீர் எங்காவது இருக்க வாய்ப்புண்டு, ஆனால் குட்டையில் என்று சகதியே மிஞ்சும் என்று தோன்றுகிறது. முகநூலை கைவிட்ட வகையில் நான் மதிக்கும் நிறைய மனிதர்களின் செய்திகளைத் தவற விட்டதுதான் மிச்சம்.

முக்கியமானதாக நான் கருதும் ஒன்று. பொதுவாக தமிழில் எழுதும்போது ஜெயமோகன் அவர்களிடம் கடன்வாங்கியோ அல்லது நானே யோசித்தோ, தமிழ் வார்த்தைகளை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தி எழுதும் முறையை சிரமப்பட்டு கற்றிருந்தேன். இம்மாதிரி வாட்ஸாப்பில் எழுதுவதற்காக, ஆங்கிலம் கலந்தும் தமிழை பேச்சுவழக்கிலும் எழுதப்போய் அந்த எழுத்து நடையை சற்று இழக்க நேரிட்டது. இது எனக்கு தனிப்பட்ட வகையில் பெரும் இழப்பாகப் பட்டது. கடந்த 7 வருடங்களாக சிரமப்பட்டு அடைந்ததை இவ்வளவு எளிதாகத் தவறவிடுகிறோமே என்ற குன்றிப்போனேன்.

சமீபத்தில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் “ஏன் ஃபேஸ்புக் பக்கம் இப்போது வருவதேயில்லை?” என்று என்னுடைய ஃபேஸ்புக் விசிறிகள் (!?) மூன்று நான்கு பேர் கேட்டார்கள். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் இரண்டு மாதம் கழித்தும் இவ்வளவு ஞாபகம் வைத்துக் கேட்கிறார்கள் என்றால் நான் ஏன் ஃபேஸ்புக்கிற்கே திரும்பக் கூடாது என்று எண்ண ஆரம்பித்தேன். ஆகவே, இதற்கு மேலும் இம்மாதிரி குழுக்களில் அசட்டுத்தனமாக எழுதிக் கொண்டிருப்பதற்குப் பதில் கீழ்க்கண்டவாறு செய்யலாம் என்றிருக்கிறேன்.

1. முடிந்தவரை கட்டுரைகளாக என்னுடைய இணையதளத்திலேயே எழுதுவது. அவற்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வது.
2. கட்டுரைகளளவிற்கு வளராதவற்றை ஃபேஸ்புக்கில் எழுதுவது. சில சமயம் சில சிந்தனைத் தெறிப்புகள் தோன்றும். அவை உடனடியாக கட்டுரை அளவிற்கு வளராது என்பதால் அவற்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம்.
3. மேலும் விசித்திரமானவற்றைப் பார்க்கும்போது அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் முகநூலைப் பயன்படுத்திக் கொள்வது.
4. இவை தவிர, முகநூலில் நான் நேசிக்கும், மதிக்கும் மனிதர்களின் இடுகைகளை மட்டும் வாசிப்பது
5. ஆனால் எங்குமே ஒரு வரிக்கு மேல் எழுதும்போது தூய தமிழிலோ அல்லது தூய ஆங்கிலத்திலோ மட்டுமே எழுதுவது.
6. உருப்படியான விவாதங்களன்றி வேறு எதிலும் பங்கேற்கக்கூடாது.
7. வாட்ஸாப்பில் இப்போது இருக்கும் குழுக்களில் தொடரலாம். ஆனால் எதுவானாலும் விதி 5ன் படி மட்டுமே மறுமொழிகள் இருக்கவேண்டும்.
8. நானும் எனது இரு முக்கிய நண்பர்களுமாக சேர்ந்து ஒரு கூகிள் சாட் குழுவை சிலகாலமாக வைத்திருக்கிறோம். அரட்டைகள் என்றால் இனிமேல் அதில் மட்டுமே!

ஆக, முகநூலே!! இதோ மீண்டும் வருகிறேன்!!!

சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்தல்

தனிப்பட்ட முறையில் நானும் ஃபேஸ்புக்கில் நெடுநாளாக நிறைய நேரத்தை செலவிட்டு வந்தவன். அதைக் குறைக்கவேண்டும் என்று நினைத்தாலும் முடிந்ததில்லை. இருமுறை எனது கணக்கை நானே சில நாட்களுக்கு முடக்கி வைத்திருந்துவிட்டு பின்னர் இயலாமல் மீண்டும் தொடங்கியிருக்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகனின் சில பதிவுகளைப் படித்துவிட்டு அவ்வப்போது கொள்ளும் உற்சாக மனநிலையில் “இனி ஃபேஸ்புக் பக்கம் வரக்கூடாது” என்று முடிவு செய்து, பின்னர் “அவ்வப்போது வரலாம், ஆனால் நிறைய நேரத்தை செலவழிக்க வேண்டாம்” என்ற முடிவுக்கு வந்து, மீண்டும் பழைய நிலைக்கே சென்றுவிட்டேன் என்பதையே சிறிது காலம் கழித்தே உணர்ந்து வந்தேன்.

இது ஒருபுறமிருக்க, எனது நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று நிறைய பேர் ஃபேஸ்புக்கிலிருந்து விலகியும் பின் சிலர் மீண்டும் சேர்ந்தும் இருக்கிறார்கள். 99 நாட்களில் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுகிறேன் என்ற அறிவிப்பையும் அவ்வப்போது சிலரிடமிருந்து பார்க்கிறேன். சமீபத்தில் கூட ஞாநி விலகிவிட்டு திரும்பவும் வந்திருக்கிறார். ஆக இது எனக்கு மட்டுமான பிரச்சனையில்லை, பிரபலமானவர்கள் முதற்கொண்டு என்னைவிட நேர மேலாண்மையில் சிறந்தவர்கள் என்று நான் நினைத்த பலருக்கும் இப்பிரச்சனை உள்ளது என்பதை அறிந்தேன்.

மேலும், கடந்த வருட இறுதியிலிருந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், ஜல்லிக்கட்டு ஆகியவை ஃபேஸ்புக் பக்கம் வருவதையே வெறுக்கவைத்தன. வதந்திகள், கற்பனைக் கதைகள், இந்திய எதிர்ப்பு பதிவுகள், தொட்டு ஷேர் செய்யும் கடவுளரின் படங்கள் என எரிச்சலூட்டும் ஒன்றாக எனது ஃபேஸ்புக் பக்கம் மாறிப்போனது.

இதனிடையே, ஃபேஸ்புக் ஸீரோ என்ற ஒரு பதிவை ஃபேஸ்புக்கிலேயே பார்த்தேன். யாரோ ஒருவர், “எல்லா நண்பர்களையும் பின் தொடர்வதிலிருந்து விலக்கிவிட்டால், உங்கள் நியூஸ்ஃபீட் எப்படியிருக்கும்” என்ற யோசனையை தெரிவித்திருந்தார். அதைப் பின்பற்றி, நான் பின் தொடரும், ஆனால் எனக்கு எரிச்சலூட்டும் பதிவுகளை இடும் நபர்கள் ஒவ்வொருவரையாக அப்பட்டியலிலிருந்து நீக்க ஆரம்பித்தேன். இது தற்போது நல்ல பலனை அளித்து வருகிறது. எனது நியூஸ்ஃபீட் பக்கமானது மிகவும் சுருங்கிவிட்டது. அறிவு சார்ந்த பதிவுகளை மட்டுமே பார்க்கிறேன். அறிவுடையோரின் பதிவுகளை மட்டுமே பார்க்கிறேன். ஆகமொத்தம் மன அழுத்தமின்றி பொழுது நன்றாகப் போகிறது. என் நண்பர்கள் உட்பட நான் மதிக்கும் நிறைய பேரை இப்பட்டியலிலிருந்து விலக்க வேண்டியிருந்தது. அப்போதைக்கு அது சங்கடமளித்தாலும், எனது தனிப்பட்ட நேரம் அவர்களைவிட முக்கியமானது என்பதால் தயங்காமல் நீக்கிவிட்டேன். இப்போது அவர்கள் அனைவரும் என் நண்பர்களாகத் தொடர்கிறார்கள். ஆனால் அவர்கள் பகிரும் குப்பைகளை நான் பார்க்கவேண்டும் என்ற அவசியமுமில்லை. நானும் எந்தக் குப்பைகளையும் இப்போதெல்லாம் பகிர்வதில்லை என்பதால் “அவர்களின் நேரத்தைக் கெடுக்கிறோம்” என்ற சங்கடமும் எனக்கில்லை. நீங்களும் இதை முயன்று பாருங்கள்.

சிறிய அளவு ரத்த காயத்திலிருந்து மருந்தின்றி வெளிவருதல்

முந்தைய பகுதியின் தொடர்ச்சி

சென்ற பதினேழாம் தேதி (17/01/2016) அன்று என் காலில் ரத்த காயம் ஏற்பட்டதிலிருந்து ஒருவார காலமாக நான் அனுபவித்ததையும் கவனித்ததையும் சுருக்கமாக (!?) எழுதியிருக்கிறேன். பயன்படுகிறதா என்று பாருங்கள்.

17 ஜனவரி

எங்கள் வீட்டிலுள்ள ஒரு கனத்த மரக்கட்டிலை ஒரு படுக்கையறையிலிருந்து மற்றொன்றுக்கு மாற்ற முயன்றபோது, கட்டிலின் ஒரு பெரிய மரப்பகுதி கால் கட்டைவிரலில் கடும்வேகத்துடன் மோதியது. இடது கால் நகம் அதன் அடிப்பக்க சதையிலிருந்து பாதி பெயர்ந்து ஆனால் காலிலேயே தங்கிவிட்டது. நகம் உடையவுமில்லை. சுமார் பத்து நிமிடங்களுக்கு வலி கடுமையாக இருந்தது. பின்னர் ரத்தம் வர ஆரம்பித்தது. அதைப் பார்த்தவுடன் கொஞ்சம் பயம் வந்தது. அலோபதி டாக்டரிடம் சென்றுவிடலாமா என தோன்றியது. ஏற்கனவே சிறுவயதில் ஒருமுறை இதே காலில் அடிபட்டு நகம் பெயர்ந்து, சீழ் கட்டி அவதிப்பட்டது ஞாபகம் வந்தது. “சரியாகிவிடும், சரியாகிவிடும்” என மீண்டும் மீண்டும் உள்ளூர சொல்லிக்கொண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் காயம் பட்ட இடத்தை சுற்றி ஒருவித கூச்சம் உருவாகிவிட்டிருந்தது. கட்டைவிரலருகில்  கையை வைக்கும்போது அந்த கூச்சத்தை உணர முடிந்தது. மேலும் உடலின் முன்னெச்சரிக்கை உணர்வும் அதிகரித்திருந்தது. காலின் அருகில் யாராவது வந்தாலோ அல்லது எந்தப் பொருளாவது சமீபித்தாலோ கண் தானாகவே காலை நோக்கி அனிச்சையாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுவைத்துக்கொண்டது. சற்று நேரத்தில் ரத்தம் உறைந்து வலியும் குறைந்தது. சும்மா இருந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து கட்டிலை சரி செய்ய முனைந்ததால் அந்த அழுத்தத்தில் மறுபடியும் ரத்தம் வர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மறுபடியும் நின்றுவிட்டது. வலியும் அவ்வளவு இல்லை. உட்கார்ந்த நிலையிலேயே வேலையை தொடர்ந்தேன். பிறகு காலை ஒருமுறை குளிர்ந்த நீரில் கழுவினேன். வலி சுத்தமாக விட்டுவிட்டது. விரலைச்சுற்றி காய்ந்திருந்த ரத்தமும் நீங்கி விரல் சுத்தமாக ஆனது. துணியை வைத்து ஈரத்தையும் நன்றாக சுத்தம் செய்துகொண்டேன். ஆனால் கழுவியிருக்க வேண்டாமோ என பின்பு நினைத்துக்கொண்டேன். கழுவியதன் மூலம் ரத்தம் உறைபடுவதிலிருந்து தடுத்துவிட்டேன் என்று தோன்றியது. இரண்டு மணி நேரம் கழித்து, நீர்த்த ரத்தம் போல் ஒரு திரவம் காயத்திலிருந்து வழிய ஆரம்பித்தது. வெறும் வெள்ளைத்துணியை எடுத்து அந்த திரவத்தை அந்தத்துணி உறிஞ்சிக்கொள்ளும் வகையில் காயத்தை சுற்றி கட்டிக்கொண்டேன். வலி இல்லை. இரவு வரை கூட அந்த நீர்த்த ரத்தம்போன்ற திரவம் வழிந்து கொண்டிருந்தது.

18 ஜனவரி

காலையில் அந்த திரவம் வருவது நின்றுவிட்டிருந்தது. நகத்தின் கீழே, சதைக்குமேலே ரத்தம் உறைந்து ஒரு பிசின் போல இருந்தது. அழுத்தினால் மட்டும் கொஞ்சம் வலியிருந்தது. அழுத்தினால் அந்த நீர்த்த ரத்தம் போன்ற திரவம் கொஞ்சமாக வந்தது.  பின்னர் அலுவலகத்திற்கு சென்றேன். சோதனையாக இன்று நிறைய நடக்க வேண்டியதாயிற்று. கால் கட்டைவிரலைச் சுற்றி ஒரு வெள்ளைத்துணியை சுற்றி கட்டிக்கொண்டு மேலே சாக்ஸ் போட்டுக்கொண்டு செருப்பையும் அணிந்துகொண்டு சென்றிருந்தேன். செருப்பு சற்று விரலை அழுத்தியதால் வலிக்க ஆரம்பித்தது. இரவு வீடு திரும்பி கட்டை அவிழ்த்துப் பார்த்தபோது மறுபடியும் அந்த நீர்த்த திரவம் வழிந்து துணியை நனைத்து இருந்தது. கட்டைவிரலின் மேலெலும்பில் சற்று வலியிருந்தது. இரவு தூங்குவதில் பிரச்சனையில்லை.

19 ஜனவரி

இன்று சளித்தொல்லையும் கால் வலியும் இருந்ததால் பெரும்பாலும் உட்கார்ந்தபடியே சமாளித்தேன். கட்டைவிரலின் முகப்பு கீழ்நோக்கி இருக்குமாறு காலை தொங்கப்போட்டு அமர்ந்தாலோ படுத்திருந்தாலோ வலி இருந்தது.  மதியத்திற்கு மேல் காய்ச்சலடித்தது. போர்வையை போர்த்திக்கொண்டு அரைமணிநேரம் தூங்கினேன். வியர்வை வெள்ளத்துடன் எழுந்தேன். மாலையில் ஏங்கெல்ஸ் ராஜாவிடம் சிகிச்சைக்கு சென்றேன். அவர் காயத்தைப் பார்த்துவிட்டு “ஒன்றும் பிரச்சனையில்லை. தானே சரியாகிவிடும்” என்றார். நீர் வைத்து காலை சுத்தம்செய்யலாமா என கேட்டதற்கு “கால் அசுத்தமாக இருப்பதாக தோன்றினால் மட்டும் வெந்நீர் வைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்” என்றார். மேலும் “காய்ச்சலும் வரலாம் ஆனால் அதை அப்படியே விட்டுவிடுங்கள். தானே சரியாகிவிடும்” என்றார். இருசக்கர வண்டியில் சென்றதாலும் போகும்போதும் வரும்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்ததாலும் கால்வலி சற்று இருந்துகொண்டேயிருந்தது. காய்ச்சல் நீங்கிவிட்டது. சளித்தொல்லையிலிருந்தும் நன்றாகவே விடுபட்டு இரவு நன்கு தூங்கினேன்.

20 ஜனவரி

இன்று காலை எழுந்தபோது முதுகு வலியும் கால் விரலில் வலியும் இருந்தன. இரவில் நன்றாக தூங்கியிருந்தாலும், இன்னமும் தூங்கவேண்டுமென தோன்றிக்கொண்டேயிருந்தது. காலையில் உணவு உண்டுவிட்டு இரண்டு மணி நேரம் நன்கு உறங்கினேன். பின்னர் இரவு பத்து மணிவரை வேலை இருந்துகொண்டேயிருந்தது. சிறு ஓய்வுகளைத் தவிர. ஒன்பது மணியளவில் இல்லாமலிருந்த கால்விரல் வலி மீண்டும் இப்போது நள்ளிரவில் வலிக்கிறது. நாளை அலுவலகம் சென்றுவிடுவேனென்று நினைக்கிறேன். இப்போது தூங்கிவிடுவேனென்றும் நினைக்கிறேன்.

21 ஜனவரி

இன்று வெறும் செருப்பு மட்டும் அணிந்து அலுவலகம் சென்றேன். மடிக்கணினி பையுடன் செல்லும்போது காலுக்கு சற்று சிரமமாக இருந்தது. மற்றபடி வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. இரவு வீட்டிற்கு வரும்போது வலி சுத்தமாக விட்டிருந்தது. ஆனால் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கொஞ்சம் கொஞ்சமாக வலி மீண்டும் வந்தது. காலை தூக்கி வைத்து உட்கார்ந்தும் பயனில்லை. சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருந்தபோது, விரலில் உறைந்திருந்த ரத்த பொருக்கில் ஒரு சிறுமுடி ஒட்டியிருந்ததை கவனித்தேன். அதை நீக்கியபின், சும்மா இருக்காமல் அந்த ரத்த பொருக்கை சற்றே நீக்க முயன்றேன். அதனால் காயம் திறந்து கொண்டு, நீர்த்த சீழ் போன்று ஒரு திரவம் வர ஆரம்பித்தது. துணியை வைத்து அதை முழுவதும் ஒற்றியெடுத்து சுத்தம் செய்தேன். பின்னர், கையால் பலமுறை நகத்தை அழுத்திப்பார்த்தேன். கொஞ்சம் வலி தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்றெண்ணி விரலைச் சுற்றி இன்னொரு வெள்ளைத்துணியை சுற்றி கட்டிக்கொண்டு படுத்துவிட்டேன். தூங்குவதில் எந்த பிரச்சனையுமில்லை.

22 ஜனவரி

இன்றும் அலுவலகத்திற்கு வெறும் செருப்பு மட்டும் அணிந்து சென்றேன். கால்வலி பெரும்பாலும் விட்டிருந்தது. சிலமுறை சில அடிகள் வேகமாக எடுத்துவைத்து ஓடக்கூட முடிந்தது. மதியம் சும்மா இருக்காமல் அனிச்சையாக காலை நோண்டிக்கொண்டிருந்ததில் மறுபடியும் புண் வாய் திறந்து கொண்டு நீர்த்த சீழை ஒத்த அதே திரவம் மீண்டும் வந்தது. ஒரு டிஷ்யூ காகிதத்தை வைத்துக்கொண்டு சுத்தம் செய்துகொண்டேன். அநேகமாக அதுதான் நிணநீர் போலும். காயம் ஏற்படுகையில் அந்த இடத்தில் சுரந்து காயத்தை ஆற்ற முயற்சிக்கும் என்று அக்குஹீலர்கள் சொல்லியிருந்தார்கள். தேவையில்லாமல் அதை தொந்தரவு செய்து, வீணாக்கிக் கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். மாலை வலி நன்றாகவே விட்டிருந்தது. ஆனால் நடக்கும்போது ஒரு அசௌகரியம் இருந்துகொண்டேயிருந்தது. மேலும் வீட்டிற்கு வந்தபின் சற்று வலியும் இருந்தது. அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த திரவம் வந்துகொண்டேயிருந்தது. அப்படியே விட்டுவிட்டு தூங்கிவிட்டேன். அடுத்த நாள் காலையில் ஒன்றும் பிரச்ச்சனையில்லை.

23 ஜனவரி

இன்று சற்று வெளியில் சுற்றவேண்டியிருந்தது. காலில் செருப்பின் அழுத்தத்தின் காரணமாகவோ என்னவோ, அந்த திரவம் மீண்டும் வழிந்திருந்தது. வலியெதுவும் இல்லை. ஒரு குறுகுறுப்பு மட்டும் இருந்தது.

24 ஜனவரி

இன்று மாலை வெந்நீரை வைத்து கால் விரலை சுத்தப்படுத்தினேன். உலர்ந்திருந்த ரத்தக் கறைகளையும், அந்த திரவத்தின் கறைகளையும் முழுவதுமாக நீக்க முடிந்தது. வலி என்று எதுவும் இல்லை. சில நேரங்களில் ஓடவும் முடிந்தது.

25 ஜனவரி

இன்று குளிக்கும்போது கால்விரலை மீண்டும் சுத்தம் செய்து துணியால் ஒற்றியெடுத்தேன். வலி எதுவும் இல்லை. நன்றாக காலை வீசி தயக்கமில்லாமல் நடக்கமுடிந்தது. கட்டைவிரலை மடக்கும்போது உள்ளே தசை மெலிதாக இழுபடுவதை உணரமுடிகிறது. நகத்தில் சற்று குறுகுறுப்பு உணர்வு இன்னமும் உள்ளது. அதிகப்படியாக வளர்ந்த நகத்தை வெட்டியெடுக்க முடிந்தது. தொன்னூற்றொன்பது சதவிகிதம் ஆறிவிட்டதால் இத்தோடு இந்த குறிப்பெடுத்தலை முடித்துக்கொள்ளலாமென்றிருக்கிறேன்.

பலவருடங்களுக்கு முன்னர் இதேபோன்று காயம் ஏற்பட்டபோது விரலில் மருந்து வைத்து கட்டி ஊசியெல்லாம் போட்டார்கள். இருநாட்கள் கழித்து வர சொன்னார்கள். அந்த இருநாட்களும் வலியில் அவதிப்பட்டேன். பின்னர் இருநாட்கள் கழித்து கட்டை அவிழ்த்தபோது நகம் நன்கு நீண்டு வளர்ந்து கறுப்பாகவும் கடினமானதாகவும் ஆகியிருந்தது. அதை அவர்கள் வலிக்க வலிக்க குறடால் பிடுங்கி வெறும் தசையின்மீது மருந்தை வைத்து மீண்டும் கட்டி அனுப்பிவிட்டனர். பின்னர் அந்த காயத்தில் சீழ்வைத்து குத்துவலி கிளம்பி மிகவும் அவதிப்பட்டேன். காயம் குணமாக இரு வாரங்களுக்கு மேல் ஆனது என்று நினைவு. அதை ஒப்பிட்டு பார்க்கும்போது மருந்திடாமல் இருந்த வகையில், ஒரே வாரத்தில் குணமானது ஒரு நல்லவிஷயம். வெறும் அரைமணி நேரமே கடும் வலியோடு அவதிப்பட்டேன் என்பது இன்னொரு விஷயம். மற்ற நேரங்களில் நடப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆக சிறிய அளவு ரத்த காயத்தையும் சமாளிக்கும் அனுபவத்தை பெற்றுவிட்டேன். இந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டபோது என் நண்பன் பிரபு எழுதியது நன்றாக இருந்தது.

“’ஊனுடம்பு ஆலயம்’ என்பதை மீண்டும் நிரூபிக்கிறது உன்னுடைய அனுபவம். என்னை பொறுத்தவரையில் இதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கை. நம் உடலில் உள்ள கடவுளை நம்பாமல் மருந்துகளை நம்பி செல்வது கடவுள் நம்பிக்கை இல்லாததிற்கு சமம் என்று நினைக்கிறேன்.” மிகச் சரியான வார்த்தைகள்.

உங்கள் வீட்டினருகில் உள்ள அக்குஹீலர்களை தொடர்பு கொள்ள பின்வரும் இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அக்குஹீலர்களின் கைபேசி எண்களோடு பெயர்களை கொடுத்திருக்கிறார்கள். எல்லா நேரமும் அக்குஹீலர்களால் நம் அழைப்பை ஏற்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் பேசிவிடுகிறார்கள். வாட்ஸாப்பிலும் நிறைய அக்குஹீலர்கள் இருக்கிறார்கள். அதன்மூலம் தொடர்பு கொள்வதும் சாத்தியமானதே. ஏங்கல்ஸ் ராஜா ஊடகங்களுக்கு அளித்துள்ள பல்வேறு பேட்டிகளை யூட்யூபில் வலையேற்றியிருக்கிறார்கள். அவையும் உங்களுக்கு பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.

இணைப்புகள் :

அக்குஹீலர்களின் தொடர்பு விவரங்கள் : http://acuhome.org/?page_id=465
ஏதோ தொழில்நுட்ப கோளாறு போல. தளத்தில் இப்போது விவரங்களை காண இயலவில்லை. சீக்கிரமே சரிசெய்துவிடுவார்கள் என்று எண்ணுகிறேன். பொதுவாகவே நீங்கள் எங்காவது “அக்குபங்சர் இல்லம்” என்ற போர்டை பார்த்தீர்களென்றாலே அது அக்குஹீலர்களின் மருத்துவமனையாகத்தான் இருக்கும். அவர்களிடம் சென்று விசாரித்துக் கொள்ளலாம்.

ஏங்கல்ஸ் ராஜாவின் யூட்யூப் சானல் – https://www.youtube.com/channel/UCxBxsvTTASQ4GDF3DSbsSpg
அவருடைய இந்த ப்ளேலிஸ்ட்டும் உபயோகமாக இருக்கும் – https://www.youtube.com/playlist?list=PLWxbf2aj07pzF-qEEtXpmMBqArE3DO1M5

இந்த மட்டில் இந்த பதிவுத் தொடரை முடித்துக்கொள்கிறேன். இதுவரை இவற்றை படித்தும் என்னை ஊக்கமூட்டியும் வந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

அக்குபிரஷர் அனுபவங்கள் – 7

முந்தைய பகுதியின் தொடர்ச்சி

முன்குறிப்பு : தேவையான அளவு ஓய்வு எடுத்துவிட்டதால் இப்பதிவுத் தொடரில் மிச்சம் வைத்தவற்றை முடித்துவிடலாம் என்றிருக்கிறேன். இடையில் ஏற்பட்ட தொய்வுக்கு மன்னிக்கவும்.

மறுதாக்குதல்
இத்தொடரின் முந்தைய பதிவின் இறுதியில் எழுதியிருந்தது போல இனி வாழ்வில் இன்பம் மட்டும்தான் என்று சுற்றிக்கொண்டிருந்தேன். முந்தைய வருடம் சளி மற்றும் மூச்சிரைப்பு தொந்தரவு ஏற்பட்ட அதே மே மாதத்தில் 2015லும் அதே தொந்தரவு ஏற்பட்டது. ஆனால் இம்முறை அந்த தொந்தரவை நன்றாகவே எதிர்கொண்டேன். எந்த மருந்தும் உட்கொள்ளவில்லை. ஆனால் நான் செய்த ஒரு தவறு, நாமே இப்போது அரை அக்குஹீலர்தானே? எதற்காக ஏங்கல்ஸ் ராஜாவிடமோ மற்றவர்களிடமோ செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சும்மாவே இருந்தேன். மேலும் உணவுக் கட்டுப்பாட்டையும் அவ்வளவாக கடைபிடிக்கவேயில்லை. அளவுக்கு மீறிய தன்னம்பிக்கைதான் காரணம். நோய் சரியாவதுபோல் தோன்றவில்லை. இருமல் அதிகமாகிக்கொண்டே சென்றது. வெளிவரும் சளியின் அளவும் கொஞ்சம் அச்சமயத்தில் ஊட்டுவதாக இருந்தது. உடலே மருத்துவர் என்ற தத்துவத்தின் அடிப்படைகள் நன்கு விளங்கியிருந்ததால் அலோபதி குறித்து புத்திசொல்ல வருவோரை நன்றாகவே எதிர்கொள்ள முடிந்தது. சுமார் மூன்று வாரங்கள் சென்றபின்னர் மூச்சிரைப்பும் வந்து சேர்ந்தது. கூடுதலாக காதடைப்பும். வலப்புற காது நன்றாகவே அடைத்துக்கொண்டது. பேசுவோரிடம் முகத்தை வலப்புறமாக திருப்பி வைத்துக்கொண்டு இடப்புற காதை உபயோகித்து சமாளிக்க வேண்டியதாயிற்று மற்ற தொந்தரவுகள் எற்கனவே இருந்தமையால் அச்சப்படவில்லை. ஆனால் இந்த காதடைப்பு கொஞ்சம் என் மன உறுதியை அசைத்துப் பார்த்தது. ஏங்கல்ஸ் ராஜாவிடம் சென்றேன். முதல்வாரத்தில் சளியும் மூச்சிரைப்பும் குறைந்திருப்பதை உணரமுடிந்தது. ஆனால் காதடைப்பு இரண்டு வாரங்கள் சென்றும் நீங்கவில்லை. மூன்றாவது முறை சென்றபோது “பசிவந்து இனிமேல் தாங்கமுடியாது என்ற நிலை வரும்போது மட்டும் சாப்பிடுங்கள். அதேபோல் முடித்துவிட்டு எழும்போதும் வயிற்றில் பசியிருக்கவேண்டும்” என்றார். இதைப் பின்பற்ற ஆரம்பித்த இரண்டாம் நாளில் காதடைப்பு நீங்கியது! நோய் ஆரம்பித்த ஒருமாத காலத்தில் படிப்படியாக குறைந்து முழுவதும் குணமானது! சென்றமுறை அலோபதிக்கு எடுத்துக்கொண்ட கால அளவைவிட குறைவு. அதைவிட முக்கியமாக மருந்து என்று எதுவும் உள்ளே செல்லவில்லை என்பது!

சமீப காலங்களில்
முதுகுவலிக்கு இந்த சிகிச்சையை கொண்டு மீண்டு வருகிறேன். இன்னமும் முதுகுவலி இருக்கிறதுதான். ஆனால் எவ்வாறு முதுகுவலியில்லாமல் பார்த்துக்கொள்வது என்று ஒரு யோசனை கிடைத்திருக்கிறது
2008ம் வருடத்தையொட்டி தினமும் சுமார் நாற்பத்தியெட்டு கிலோமீட்டர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டியதே முதுகுவலிக்குக் காரணம் என்று நினைத்திருந்தேன். ஏனென்றால் அப்போதுதான் வலி அதிகமாகியிருந்தது. அதற்கு முன்னர் வலியிருந்தாலும் அவ்வளவு மோசமாக இல்லை. அப்போதைய வலிக்கு காரணம் அதிக உடல் எடைதான் என்று எனக்கு சொல்லப்பட்டிருந்தது. இருசக்கர வாகனம் ஓட்டாமல் இருப்பது சாத்தியமில்லை என்பதால் சரி வலோடு வாழ பழகிக்கொள்ளவேண்டியதுதான் என்று நானும் நினைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். சமீபத்தில் ஒரு பிஸியோதெரபிஸ்ட்டை பார்த்து பேசிக்கொண்டு இருந்தபோது அவர் சொன்ன சில அறிவுரைகள் ஒரு திறப்பை அளித்தன. எந்த வேளையாக இருந்தாலும் சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள் படுத்துக்கொள்வது உணவை குடலுக்குள் இறுகச் செய்யும். அது முதுகுவலிக்கு மிக முக்கிய காரணம். மேலும் இரவு வேளையில் இவ்வாறு சாப்பிட்டவுடன் படுப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். மேலும் இரவு உணவை முடிந்தவரை குறைவாகவும் எளிமையானதாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். உணவுக்கும் தூங்கச்செல்லும் நேரத்திற்குமான நேரம் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இருக்கவேண்டும் என்றார். இவையனைத்தும் அக்குஹீலர்கள் சொல்லும் அறிவுரைகளுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளன. இரவு உணவாக பழங்கள், சூப் ஆகியவற்றையே எடுத்துக்கொள்ளவேண்டும். ஆறு மணிக்கு மேல் சமைத்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது. ஒன்பது மணிக்குள் தூங்க செல்லவேண்டும் என்று அவர்கள் எப்போதும்.சொல்வார்கள்.

என்னை பொறுத்தவரை இரவு உணவு என்பது நிச்சயம் கனமானதாகத்தான் கடந்த பதினைந்து வருடங்களில் இருந்து வந்துள்ளது. மேலும் சாப்பிட்டவுடன் தூங்க செல்வதும் எனக்கு பிரியமான ஒன்று. இவற்றினால் ஏற்கனவே முதுகுவலி ஓரளவு இருந்துவந்துள்ளதை சமீபத்தில் உணர்ந்தேன். ஆக இரவு உணவை கட்டுக்குள் கொண்டுவந்து, சாப்பிட்டவுடன் படுக்கும் பழக்கத்தையும் ஒழித்தால் நிவாரணம் கிடைக்கும் என்றே தோன்றுகிறது. செயல்படுத்தி பார்த்து சொல்கிறேன். நடுவில் ஒருமுறை காலில் ரத்ககாயம் பட்டு சில வாரங்கள் அவதிப்பட்டேன். அது குறித்து தனியாக எழுதுகிறேன்.

என் குடும்ப உறுப்பினர்களும் அக்கு பிரஷரும்
எற்கனவே கூறியதுபோல் என் தாயார் (67 வயது) இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டு நன்றாகவே தேறியுள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களாக எவ்விதமான மருந்துகளும் உட்கொள்ளவில்லை. என் மனைவியும் சில பிரச்சினைகளுக்கு இச்சிகிச்சையை மேற்கொண்டது நன்கு பயனளித்து வருகிறது. சமீப காலமாக என் மகள்கள் இருவருக்கும் இச்சிகிச்சையை மேற்கொண்டு வருகிறோம்! முறையே ஐந்து வயது மற்றும் ஒன்றரை வயது குழந்தைகள். இருந்த பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்!!

இப்பதிவுத் தொடரின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் அலோபதியின் போதாமை குறித்து சில விஷயங்களை ஆராய்ந்து எழுதலாம் என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் அது நிறைய நேரத்தையும் உழைப்பையும் கோரும் விஷயமாக இருப்பதால் இப்போது முடியவில்லை. மேலும் இவ்வருடத்தின் பிற்பகுதியில் அக்குபுரஷர் தொடர்பான டிப்ளமோ படிப்பை மேற்கொள்ள இருக்கிறேன். அப்போது இவை குறித்து எழுத முயற்சிக்கிறேன்.

அடுத்த பதிவுடன் இத்தொடர் முடியும்.

தமிழில் எழுதுவது குறித்து…

தமிழில் எழுதுவது குறித்து…

முன்குறிப்பு #0 : மீண்டும் அக்குபிரஷர் பதிவுகளுக்கு ஒரு சிறு ஓய்வு கொடுக்கிறேன்.

முன்குறிப்பு #1 :இதெல்லாம் ஒரு பதிவாக எழுதவேண்டுமா என நானுமே நினைத்ததுண்டு. ஆனால் யதார்த்தத்தில், நிறைய பேர் இன்னமும் இது குறித்த தகவல்கள் அறியாமல் இருக்கிறார்கள் என்ற ஞானம் எனக்கு சமீபத்தில் கிடைத்ததால் இதை எழுதுகிறேன்.

முன்குறிப்பு #2 : கணினி, கைபேசி மற்றும் டேப்லட் போன்ற இதர சாதனங்களில் தமிழில் எழுத விரும்புபவர்களுக்கும், முயற்சிப்பவர்களுக்கும் இந்தப் பதிவு உதவியாக இருக்குமென்று நினைக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் செயலிகள்/வசதிகள் அனைத்தையுமே அவ்வப்போது நான் உபயோகப்படுத்தி வருகிறேன். ஆகவே இந்தப் பதிவு முழுக்க முழுக்க என் சொந்த அனுபவத்திலிருந்து எழுதுவது மட்டுமே! எந்தவிதமான விளம்பரப்படுத்துதலும் இதிலில்லை. மேலும் ஒரு விஷயம். இந்த பதிவு, இந்த செயலிகள் அளிக்கும் வசதிகளையோ அல்லது அவற்றின் குறைகளையோ இந்தப் பதிவு முழுவதுமாக பட்டியலிட்டுவிடவில்லை. அந்த வகையில் இது ஒரு அறிமுகப்பதிவு மட்டுமே. ஆகவே நீங்கள் உங்கள் அனுபவத்தில் இவற்றை பயன்படுத்தி பார்த்தோ அல்லது இவை வழங்கும் ஆவணங்களை படித்துப்பார்த்தோ சரிபார்த்துக்கொள்வது உத்தமம்.

செயலிகளும் இணையதளங்களும்:

1. NHM Writer   – செயலி

எனக்கு மிகவும் விருப்பமான செயலி இது. New Horizon Media நிறுவனத்தின் படைப்பு இது. நானறிந்தவரை, இது கணிப்பொறிகளை மட்டுமே இலக்காக்கி உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற சாதனங்களுக்கு இன்னமும் வரவில்லை. கொண்டுவரும் எண்ணமும் இல்லை போல. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது விண்டோஸ் தளத்தில் மிகவும் உதவியாக இருக்கிறது. உதாரணமாக, நீங்கள் உங்கள் வீட்டு கணினியிலிருந்து ஏதேனும் தகவல்களை தமிழில் பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில் இது மிகவும் உதவியாக இருக்கும். இந்தப்பதிவையே இச்செயலியை கொண்டே எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மாறி மாறி எழுதுவோர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும். சில சமயம் தமிழ் மொழிக்கு மாறாமல் முரண்டு பிடிக்கும். ஆனால் விண்டோஸ் மரபுப்படி, “புனர்ஜென்மத்தில்” நன்கு வேலை செய்கிறது.  உபுண்டு லினக்ஸில் முன்பு ஒருமுறை முயற்சித்துப் பார்த்தேன். சரிவரவில்லை. மற்ற தளங்களில் எவ்வாறு என்று தெரியவில்லை. கூகுளில் NHM Writer  என்று தேடினாலே இணையதள முகவரி கிடைக்கிறது.

2. http://tamileditor.org

நீங்கள் வேறு ஏதேனும் கணினியிலிருந்து, குறிப்பாக NHM Writer போன்ற செயலிகளை நிறுவுவதற்கு தடை செய்யப்பட்டிருக்கும் கணினியிலிருந்து (உதாரணமாக அலுவலகக் கணினி) தகவல்களை தமிழில் எழுதும் பட்சத்தில் இந்த இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். டேட்டாவும் குறைவாகவே தேவைப்படும். இது ஆண்ட்ராய்ட் கைபேசியில் வேலை செய்யவில்லை. கணிப்பொறியில் நன்றாக வேலை செய்கிறது. முன்பு இந்த இணையதளத்தில் சில குறைபாடுகளை கவனித்துள்ளேன். ஆனால் இப்போது மிகவும் நன்றாக உள்ளது. தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் இடையில் மாறி மாறி எழுதுவது இப்போது நன்றாக வேலை செய்கிறது.

இணைப்பு : http://tamileditor.org/

3.  Google Transliterate

இதுவும் ஏறத்தாழ tamil editor.org போன்ற‌தே. இதைக்கொண்டுதான் தமிழில் முதன்முதலில் கணினியில் எழுத ஆரம்பித்தேன். எனினும் மேற்கூறிய மற்ற இரு வழிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, இது அவ்வளவு வசதியான ஒன்றாக தோன்றவில்லை. ஆகவே மேற்கூறிய இரு வழிகளும் இல்லாத நிலையில் மட்டுமே இதை நான் பயன்படுத்துகிறேன். இது ஜிமெயிலிலும் முன்பு இணைக்கப்பட்டு இருந்தது. நடுவில் ஏனோ வேலை செய்யவில்லை. இப்போது மறுபடியும் கிடைக்கிறது என்றே நினைக்கிறேன்.

இணைப்பு : http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/

4. செல்லினம் (Sellinam)

நீங்கள் கைபேசியில் தமிழில் எழுத வேண்டுமென்றால் Google Transliterate தவிர மேற்கூறிய மற்ற இரண்டும் ஒத்துவராது. Google Transliterate, ஆண்ட்ராய்டில் Chrome extension இருந்தால் வேலை செய்யும்போல தோன்றுகிறது. இவ்வளவும் செய்வதற்கு பதில் செல்லினம் செயலியை உங்கள் கைபேசியில் நிறுவிக்கொள்ளலாம். இது ப்ரௌஸர் மட்டுமின்றி எந்த செயலியிலும் தமிழில் எழுத உதவுகிறது. சில சிக்கல்கள் தவிர பெரும்பாலும் நன்றாகவே வேலை செய்கிறது. நான் அக்குபிரஷர் அனுபவங்கள் குறித்த ஆரம்ப பகுதிகளை இந்த செயலி மூலம் கைபேசியில் தான் எழுதினேன். சரளமாக உபயோகப்படுத்த முடிந்தது.

செல்லினம் என்ற இந்த பெயரை மிகவும் ரசனையோடு இட்டிருக்கிறார்கள் 🙂 மேலும் இச்செயலி ஏதாவது நோட்டிஃபிகேஷன் தரும்போது வரும் மிருதங்க ஒலி மிகவும் வித்தியாசமாகவும் இனிமையாகவும் உள்ளது.

NHM Converter :

இந்த செயலிக்கும் மேற்கூறிய செயலிகளுக்கும் பயன்படுத்தும் முறையில் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் ஒரு முழுமைக்காக இதைப்பற்றியும் இங்கு எழுத எண்ணுகிறேன். Unicode எழுத்துரு வருவதற்கு முன்பு தமிழில் ஒவ்வொரு இணையதளமும் தனக்கென ஒரு எழுத்துருவை பயன்படுத்தி வந்தன / வருகின்றன. இவற்றை யுனிகோடிற்கு மாற்றவோ அல்லது யுனிகோடில் இருப்பதை
வேறு எழுத்துருவிற்கு மாற்றவோ இந்த செயலி மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதுவும் New Horizon Mediaவிலிருந்து வெளிவருகிறது.

தட்டச்சிடும் முறை:

இப்போது இவற்றில் தட்டச்சிடும் முறை பற்றி சிறிது பார்க்கலாம். தமிழ் எடிட்டரிலும் மற்றும் கூகிள் ட்ரான்ஸ்லிட்டரேட்டரிலும் Phonetic முறையிலான தட்டச்சு முறைதான் சாத்தியம். உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது அம்மா என்று எழுதுவதற்கு ammaa அல்லது ammA என்று தட்டச்சிடவேண்டும். பெரும்பாலும் எல்லா வார்த்தைகளுக்கும் சற்று அதிகப்படியாக ஆங்கில எழுத்துக்களை தட்டச்சிட வேண்டியிருக்கும். இருந்தாலும், ஆரம்ப கால பயனர்களுக்கு இந்த முறையே உதவிகரமாக இருக்குமென்று நினைக்கிறேன். கொஞ்சம் பயிற்சி இருந்தால் விரைவாகவே எழுதலாம். பெரிய அளவிலும் கட்டுரைகள் எழுதலாம். நான் இந்த முறையையே பயன்படுத்துகிறேன்.

இது தவிர tamil99 என்ற வழியும் உண்டு. இது NHM Writer மற்றும் செல்லினம் ஆகிய இரண்டிலும் உண்டு. இவை நேரடியாக தமிழ் எழுத்துக்களையே கொண்டிருக்கின்றன. ஆகவே இதில் தட்டச்சிடுவது ஒப்பு நோக்க எளிதானது. ஆனால் நல்ல பயிற்சி வேண்டும். நீங்கள் Phonetic முறையில் ஏற்கனவே பழகிவிட்டீர்கள் என்றால் இதற்கு மாறுவது சற்று கடினம் என்று நினைக்கிறேன். என் அனுபவம் 🙂 ஆனால் செல்லினம் கைபேசியில் இயங்குவதால் இதில் tamil99ல் எழுதுவது சற்று எளிது. என் நண்பர் ஒருவர், tamil99 மிகவும் எளிமையாக இருப்பதாக சொன்னார். tamil99 முறை குறித்து இணையத்தில் ஒருவர் ஏறத்தாழ பின்வருமாறு எழுதியிருந்தார்.

”Phonetic முறையில் எழுதவது சரிதான். ஆனால் அது ஆங்கில எழுத்துக்களை முதன்மையாக கொண்டிருக்கிறது. ஆகவே நாம் அதை பயன்படுத்துவதென்பது நாம் இன்னமும் ஆங்கில மோகத்திலேயே, ஆங்கிலத்திற்கு அடிமையாகவே இருக்கிறோம் என்று அர்த்தமாகிறது. எனவே tamil99க்கு மாறுங்கள். அதுவே தமிழை உண்மையாக விரும்புபவர்கள் பயன்படுத்தவேண்டியது”

எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்! ஆனால் இதில் சிறிது உண்மையும் உண்டு.  Phonetic முறையில் எழுத குறைந்த பட்ச ஆங்கில அறிவு தேவைப்படும். ஆனால் இப்போதுள்ள இளையவர்களும் நடுத்தர வயதினரும் பெரும்பாலும் ஆங்கில அறிமுகத்துடன்தான் இருக்கிறார்கள். ஆகவே Phonetic முறையில் எழுதுவது அவர்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்காது. ஆனால் ஆரம்பக் கல்வியை தமிழில் பயில்பவர்களுக்கு ஆங்கிலத்திற்கு முன்பாக தமிழ் அறிமுகமாகியிருக்கும். அவர்களுக்கு tamil99-ஏ சிறந்த முறை என்று எனக்கு தோன்றுகிறது. மேலும் தட்டச்சிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை Phoneticல் அதிகம் என்பதால் தொடர் உபயோகத்திற்கும், பெரிய அளவில் தமிழில் தட்டச்சிட நினைப்பவர்களுக்கும் tamil99 முறையே சிறந்தது என்பது என் எண்ணம். (நான் இப்போதைக்கு tamil99க்கு மாறுவதாக இல்லை!)

மேலும் ஒரு விஷயம். தமிழில் தட்டச்சிடும்போது முடிந்தவரை தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்துங்கள். ஆங்கில வார்த்தைகளைத்தான் உபயோகப்படுத்த வேண்டுமென்றால், நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதிவிடுங்கள். சரியான தமிழ் வார்த்தைகள் கிடைக்கவில்லையென்றால் பின்வரும் எதாவது ஒரு வழியில் மொழிமாற்றம் செய்து எழுதுங்கள். ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுத வேண்டாம்! உதாரணமாக Machine என்பதை தமிழில் இயந்திரம் என்று எழுதுவது நல்லது. இல்லையென்றால் machine என்றே எழுதிவிடுங்கள். மாறாக, மெஷின் என்று எழுத ஆரம்பித்தீர்களானால், பின்னர் ஆங்கிலத்தில் தட்டச்சிடும்போது meshin என்று எழுத முற்படுவீர்கள்! பெயர்களை எழுதும்போதும் இதே பிரச்சனை வரத்தான் செய்யும். அதை ஒன்றும் செய்வதற்கில்லை.

ஆங்கில வார்த்தைகளுக்கு ஏற்ற தமிழ் வார்த்தைகளை கண்டடைய நான் விக்‌ஷனரி (http://ta.wiktionary.org) இணையதளத்தையும் Google translate-யும் பயன்படுத்துகிறேன். விக்‌ஷனரியைத்தான் முதன்மையாக பயன்படுத்துகிறேன் என்றாலும் இரண்டுமே பல சமயங்களில் தேவைப்படுகிறது. எழுதியவற்றில் பிழைகளை திருத்த நாவியை (http://dev.neechalkaran.com/p/naavi.html) பயன்படுத்துகிறேன். இது எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை, மரபுப்பிழை என பலவற்றை திருத்துகிறது. பெரும்பாலும் சரியாக செய்வதாக சொல்கிறார்கள். விக்‌ஷனரியும், நாவியும் எழுத்தாளர் ஜெயமோகனால் பரிந்துரைக்கப்பட்டவை!

அக்குபிரஷர் அனுபவங்கள் – 6

முந்தைய பகுதியின் தொடர்ச்சி

முகாம் அனுபவங்களும், என்னுடைய சில தனிப்பட்ட எண்ணங்களும்

அந்த முகாமில் பரோட்டா, பீட்ஸா போன்ற உணவுகளை உண்ணுதல் குறித்து எதுவும் சொல்லவில்லை என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். அது தவறு 😦 உணவைப் பற்றிய பேச்சு வந்தபோது ஓரிடத்தில், “நாம் வாழுமிடத்தில்தான் நமது உடலுக்கேற்ற, நமது தட்பவெப்ப நிலைக்கேற்ற உணவுகள் விளைகின்றன. ஆகவே பெரும்பாலும் நமது பகுதியில் விளையும் உணவை உண்பதே சிறந்தது” என்று சொன்னார்கள். இதை வைத்து பார்க்கும்போது, பீட்ஸா, பர்கர் போன்ற வெளிநாட்டு உணவுகள் மட்டுமல்ல, நம் நாட்டிலேயே பிறபகுதிகளில் விளைவித்து நம் இடங்களுக்கு அனுப்பப்படும் கோதுமை ஆகியவற்றை உண்பதையும் தவிர்க்க வேண்டுமென்றாகிறது. அப்படியென்றால், சென்னை போன்ற விவசாயம் ஏறத்தாழ முழுவதும் இல்லாத பெருநகரங்களில் வாழ்பவர்கள் என்னதான் உண்பது என்ற சந்தேகம் பிறகு எழுந்தது. ஒருவேளை நாம் வாழும் நகரத்தை ஏதேனும் ஒரு பயிரையாவது விளைவிக்கும் வகையில் பாதுகாத்து வைத்துக்கொள்ளவேண்டும் போல. குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியங்கள் உண்பதை ஊக்குவித்தார்கள் என்றாலும் அரிசி சாப்பிடுவதை ஒரு குறையாக சொல்லவில்லை. அதுவும் நமது பகுதியில் விளைவதுதானே? மேலும் இதைக்கொண்டு பார்க்கும்போது வெளிநாடுகளுக்கு சென்று தங்கும்போது அங்கு கிடைக்கும் உணவுகளை உண்பதே சரியென்றாகிறது. எப்படியிருப்பினும் பசித்தபின் உணவுண்ண செல்வதுதான் நம்மை பாதுகாத்து கொள்ள ஒரே வழி என்று தோன்றுகிறது.

மேலும் பசித்துப் புசிக்கும்போது, அல்சர் உள்ளிட்ட குடல் நோய்கள் வராதா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அவர்கள் தரும் விளக்கம், குடல் நோய்கள் அனைத்தும் அதிகப்படியான உணவையும் தேவையில்லா நேரத்தில் உள்ளே அனுப்பப்படும் உணவையும் செரிப்பதற்காக குடலால் அதிகப்படியாக சுரக்கப்படும் அமிலங்களால் விளைகிறது. குடலில் உணவு எதுவுமில்லையென்றால் குடலும் தேவையில்லாமல் எந்த அமிலத்தையும் சுரக்காது.

இப்போது அந்த ஐந்து நாட்கள் முகாம் குறித்த செய்திகளுக்கு வருகிறேன். இந்த முகாம் இரு பிரிவுகளாக நடந்தது. முதல் நான்கு நாட்களும் தனியாகவும், பிறகு பதினைந்து நாட்கள் கழித்து ஒரே ஒரு நாள் இரண்டாவதாகவும் நடந்தது. முதல் பகுதியில் முதல் இரண்டரை நாட்களுக்கு பசித்து உணவுண்ணுதல், சீக்கிரம் உறங்க செல்லுதல், மற்ற வாழ்க்கை முறைகள் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். அங்கு எங்களுடன் பேசிய அக்குஹீலர்களும் அதை ஊக்குவித்தார்கள். ஏனென்றால், இம்மாதிரி விஷயங்களை கிரஹித்துக்கொண்டாலே போதும் சிகிச்சைகளெதுவுமின்றி நம்மால் வாழ முடியும் என்பதால், அக்குபிரஷர் குறித்து தெரிந்து கொள்வதைவிட இதுவே முக்கியம் என்றார்கள். கலந்துகொண்டவர்களும் சளைக்காமல் கேள்வி கேட்டார்கள். சில சமயம் கேட்ட விஷயத்தையே அவர்களுக்கே தெரியாமல் பலவிதமாக மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள். இவ்விஷயத்தில் அக்குஹீலர்களை பாராட்ட வேண்டும். பொறுமையாக எல்லாவற்றிற்கும் பதிலளித்துக் கொண்டிருந்தார்கள். பலவிதமானவர்கள் கலந்துகொண்டார்கள். ஒரு திராவிட இயக்கத்தவர், ஒரு ஆன்மிகவாதி, ஒரு ஜோதிடர், வெவ்வேறு வயதில் நிறைய குடும்பத் தலைவிகள், இளம் பெண்கள், கணிப்பொறித்துறையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவர் இப்படி கலவையான ஒரு கூட்டம். முதல் நாள் நிகழ்ச்சிக்கு ஒரு திருமங்கையும் வந்திருந்தார். முதல் நாளன்று அனைவரும் தங்கள் அக்குபிரஷர் பற்றிய தனது அறிமுகம், ஏன் இந்த முகாமிற்கு வந்திருக்கிறோம் என்பது போன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். பின்னர் வாழ்க்கை முறை, உடல் அமைப்பு, உடலின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து அக்குஹீலர்கள் பேசத் தொடங்கினர். இதுவே அடுத்த மூன்றரை நாட்களுக்கு நீண்டது. அக்குஹீலர்கள் இங்கு கூறிய கருத்துக்களால் நான் உட்பட நிறையபேர் சீண்டப்பட்டோம். உதாரணமாக மனிதன் எவ்வகையில் மற்ற விலங்குகளிடமிருந்து உயர்ந்து வேறுபட்டு நிற்கிறான் என்ற கேள்வி எங்கள் முன் வைக்கப்பட்டது. நாங்கள் பதில்களை சொல்லச் சொல்ல, இவையனைத்துமே விலங்குகளும் செய்யுமே என்று விளக்கமளித்தார்கள். அங்கே ஏங்கெல்ஸ் ராஜா சொன்னது போல விலங்குகளிடமிருந்து உயர்ந்தவன் மனிதன் என்பதை நிறுவும் நிர்பந்தத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். தொடர்ந்து எங்களிடமிருந்து வந்த பல்வேறு வகையான கேள்விகளையும் அக்குஹீலர்கள் நன்றாகவே எதிர்கொண்டார்கள். சிலவற்றை ஏற்கனவே எழுதியிருந்தாலும், விடுபட்டவற்றை முடிந்தவரையிலும் சேர்த்து சுருக்கமாக ஒருமுறை தொகுத்து இங்கே தருகிறேன். ஒரு நாளில் நாம் என்னென்னவெல்லாம் செய்கிறோம் என்பதையும், அதற்கு அக்குஹீலர்கள் தரும் விளக்கங்களையும் பார்ப்போம்.

தூங்குதல் – இரவு ஒன்பது மணிக்கே தூங்க செல்லுங்கள். ஒன்பது மணிக்கு மேல் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவும் மருத்துவருக்காகவே சம்பாதிக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இரவு பதினொரு மணியிலிருந்து காலை மூன்று மணிவரை ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம். இவ்வேளைகளில் உடலில் சுரக்கும் சுரப்பிகள் நமக்கு மார்பக புற்று நோய் உட்பட பல்வேறு நோய்களை தடுக்க வல்லது. அதிகாலையில் எழுந்து வேலை செய்வது நல்லது.

பல் துலக்குதல் – நாம் தற்போது உபயோகிக்கும் பற்பசைகளும் பிரஷ்களும் தேவையற்றவை. என்னதான் பற்பசை என்றாலும் அதுவும் ஒரு செயற்கையான ரசாயனமே! அதனால் நம் வாயின் உள்ளுறுப்புகளுக்கு சேதமில்லாமல் இருக்காது. ஆகவே முடிந்தால் உமிக்கரி எனப்படும் கரியை வைத்தோ அல்லது உள்ளூரில் கிடைக்கும் பிரான்ட் இல்லாத ஆனால் மருத்துவமுறைப்படி தயாரிக்கும் பற்பொடிகளையோ வைத்தே பல் துலக்குங்கள். இப்போதெல்லாம், பற்பசைகளே தாம் வேம்பு, உப்பு, எலுமிச்சை ஆகியவற்றின் குணாதிசயங்களுடன் வருவதாகவும், பிரஷ்கள் சாம்பலின் குணாதிசயங்களை கொண்டிருப்பதாகவும் விளம்பரப்படுத்தப்படும் சூழ்நிலையில் நாம் ஏன் நேரடியாக வேம்பு, உப்பு, உமிக்கரி ஆகியவற்றை நேரடியாக உபயோகிக்கக்கூடாது? மேலும் காலையிலேயே பல் துலக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அதே போல காலையில் பல் துலக்கினால் மட்டும் போதாது. கீழே “வாய் கொப்பளித்தல்” பகுதியில் எழுதியுள்ளதை போல எப்போதெல்லாம் வாயில் ஒரு வழவழப்புத்தன்மை அதிக அளவில் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் பல்துலக்குதல் அவசியம். அது காலையிலும் தோன்றலாம். பகல் பொழுதில் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம்!

உடற்பயிற்சி – தனியாக உடற்பயிற்சி என்று எதுவும் தேவையில்லை. அதற்கு பதில் எந்த வயதிலிருந்தாலும் விளையாடுங்கள். சைக்கிள் ஓட்டுவது, ஓடுவது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வோரும் அதை ஒரு விளையாட்டாக செய்யுங்கள். வீட்டு வேலைகளை கூட விளையாட்டாக செய்து உடற்பயிற்சியினால் வரும் பலன்களை விட அதிகமாகவே பயன்பெறலாம்.

குளித்தல் – சோப் ஷாம்பு ஆகிய எதுவும் தேவையில்லை! உடலை நீர் கொண்டு கழுவுவதே குளியலில் நாம் செய்யவேண்டியது. சோப்பிலோ ஷாம்பூவிலோ இருக்கும் ரசாயனங்கள் இல்லாத குளியலே பாதுகாப்பானது. நம் உடலில் வரும் வியர்வை நாற்றம் உள்ளிட்ட நாற்றங்கள், உடல் வெளியேற்றும் கழிவுகளே. ஆகவே உணவுக்கட்டுப்பாடு சரியாக இருக்கும்போது துர்நாற்றங்களுக்கும் இடமில்லை!

அலங்கரித்துக் கொள்ளுதல் – பெருமளவுக்கு ரசாயனங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பவுடர்களோ இன்னபிர க்ரீம்களோ, வாசனைத் திரவியங்களோ கூட தேவையில்லை. அவையும் ரசாயனங்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். (என் நண்பன் பிரபு கடுமையான உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து, பல் துலக்குவற்கு உமிக்கரியை மட்டுமே பயன்படுத்துகிறான். சோப் ஷாம்பு ஆகியவற்றை உபயோகிப்பதில்லை. வாசனை திரவியங்களையும் பயன்படுத்துவதில்லை. அவன் உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் எதுவும் வெளியேறுவதில்லை என்பதால் வியர்வை நாற்றம் உள்ளிட்ட எந்த பிரச்சனையும் அவனுக்கில்லை!)

நீர் அருந்துதல் – நமது தாகத்தின் அளவுக்கேற்ப (உதடு, தொண்டை, குடல்) தண்ணீர் அருந்தினால் போதும். வெறும் வயிற்றில் அரை லிட்டர் குடிப்பது, உணவுக்கு முன் குடிப்பது, உணவுண்டபின் அரைமணி நேரத்திற்கு பிறகு குடிப்பது, ஒரு நாளுக்குள் ஆறு லிட்டர் தண்ணீர் குடிப்பது என எந்த சாகசமும் தேவையில்லை.

உணவுண்ணுதல் – நன்கு பசித்தால் மட்டுமே உணவு உண்ணவேண்டும். உண்ணும் உணவுகள் முடிந்தவரை அந்தந்த பகுதிகளில் அந்தந்த பருவத்தில் விளைவதாக இருக்கட்டும். அலுவலகத்திற்கு செல்வோர், காலையில் பசியெடுக்கவில்லையென்றால், காலை உணவைத் தவிர்த்துவிட்டு, கையோடு சில பழங்களை கொண்டு செல்லலாம். அசந்தர்ப்பமாக பசிக்கும்போது அவற்றை உட்கொண்டு பசியாற்றிக் கொள்ளலாம். உணவை உண்ணும்போதோ, முடித்த உடனேயோ நீர் அருந்துவதை தவிர்க்கவும். இது குடலுக்கு செரிமானத்தில் கூடுதல் சுமையை தரும். காரமான உணவை உட்கொள்ள நேரிட்டாலோ அல்லது உணவுண்ணும்போது தாகத்தை உணர்ந்தாலோ சிறிது நீர் அருந்திக்கொள்ளலாம். மாலை ஆறு மணிக்குமேல் சமைத்த உணவுகளை உண்பதை தவிர்த்துவிடுங்கள். பசித்தால் பழங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். சிறிது பசியோடு உறங்க செல்வதால் பிழையில்லை.

வாய் கொப்பளித்தல் – உணவுண்டு முடித்தபின் வாயை உடனே கொப்பளிக்க வேண்டாம். நமது உணவை செரிப்பதற்கு தேவையான உமிழ்நீர் உணவுண்டபின்னரே வாயில் சுரக்க ஆரம்பிக்கும். உடனே வாயை கொப்பளித்தால், தேவையான உமிழ்நீர் கிடைக்காமல், குடலானது செரிமானத்தை சிரமப்பட்டு செய்ய நேரிடும். உணவை முடித்தபின் வாயில் சுரக்கும் உமிழ்நீர், நம் பற்களுக்கிடையில் இருக்கும் உணவுத்துகள்களையும் சேர்த்து உள்ளே அனுப்பிவிடும். சிறிது நேரத்திற்குப் பிறகு வாயில் ஒருவித வழவழப்புத்தன்மை தோன்றும். அந்த நேரத்தில் வாயை கொப்பளித்தால் போதுமானது. மேலும் உணவுண்ணாமல் இருக்கும் மற்ற நேரங்களிலும் இவ்வாறு சிலமுறை வழவழப்புத்தன்மையை வாயில் உணரலாம். அப்போது வாயை கொப்பளிப்பது நல்லது.

உண்ணாவிரதம் – உண்ணாவிரதம் மேற்கொள்வது நல்லது. முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து, பின்னர் தகுந்த பயிற்சியுடனும் அக்குஹீலர்களின் ஆலோசனைகளுடனும் அதிக நாட்களுக்கு உண்ணாவிரதத்தை கடைபிடிக்கலாம். இந்த முகாமில் வந்த அக்குஹீலர் பார்த்திபன் தனது உண்ணாவிரத அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். தண்ணீர் மட்டுமே உணவு. ஆரம்ப காலங்களில் பழரசத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். பசிக்கும்போது சிறிது தண்ணீரை உட்கொண்டு அடுத்த வேலையை பார்க்கப்போய்விடுவார்கள். முக்கியமான ஒன்று. உண்ணாவிரத நாட்களில் எப்போதும் போல பணிகளில் மும்முரமாக ஈடுபடவேண்டும். உடலில் சோர்வு ஏற்பட்டு அதனால் பணிகளை வழக்கம்போல் செய்யமுடியவில்லையென்றால் உண்ணாவிரதத்தை உடனே முடித்துக்கொண்டுவிட வேண்டும். இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பித்த உண்ணாவிரதம் இப்போது பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை அவர்களால் மேற்கொள்ளமுடிகிறது. “சரி, உணவு வேண்டுமென்றுதானே குடல் பசி உணர்வை எழுப்புகிறது? ஏன் அதை புறக்கணிக்கிறீர்கள்?” என்று கேட்டபோது “அதனால் எங்களுக்கு ஆன்மபலம் அதிகமாகிறது. தான் நினைத்ததையெல்லாம் தன்னால் நிறைவேற்றிவிடமுடியாது என்பதை உடல் புரிந்துகொள்கிறது. மேலும் அது செரிமானம், இயக்கம், பராமரிப்பு ஆகியவற்றில், உணவு கிடைக்காததால் செரிமானத்தை விட்டுவிட்டு மற்ற இரண்டையும் முடிந்தவரை செய்கிறது. அதிகப்படியாக சோர்வடையும்போது இயக்கத்தையும் குறைக்கிறது. அந்த நேரத்தில் நாங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதால் எந்த பாதிப்பும் இல்லாமல் நாங்கள் அதிலிருந்து வெளிவருகிறோம்” என்றார்கள். இவ்வாறு செய்வதால் உடலில் நெடுநாள் தடைபட்டிருக்கும் பராமரிப்பு பணிகளை உடலால் மேற்கொள்ள முடிகிறது.

அம்முகாமில் இக்கேள்விகளை கேட்டபோது ஆர்வமாக இருந்தது. பின்னர் யோசிக்கும்போது, அக்குஹீலர்கள் ஏற்கனவே கூறியதுபோல மிருகங்கள் எப்படி சாதாரணமாக தன் வாழ்க்கையை வாழ்கிறது, நாம் ஏன் இப்படி சின்ன சின்ன விஷயங்களுக்கும் அடுத்தவரை நம்பியிருக்கிறோம் என்று தோன்றியது. இந்த விவாதங்களுக்கு பிறகு, கடைசி ஒன்றரை நாட்களுக்கு நாடியை கண்டறிதல், அடிப்படை தொடுசிகிச்சைகள் ஆகியவற்றை கற்றுக்கொடுத்தார்கள். உமர் ஃபாருக்கின் “வீட்டுக்கு ஒரு மருத்துவர்” புத்தகத்தையும் இலவசமாகக் கொடுத்தார்கள். பின்னர் பதினைந்து நாட்கள் கழித்து ஒரு நாள் மீண்டும் இவற்றை நினைவுபடுத்திவிட்டு முகாமை நிறைவு செய்தார்கள். நானும் என் நண்பனும் இந்த முகாமிலிருந்தும் அதன்பின் ஓரளவு விவாதித்தும் நிறைய கற்றுக்கொண்டோம். இன்னமும் கற்றுக்கொண்டேயிருக்கிறோம்.

இம்முகாமிற்கு பிறகு, நான் கடுமையான உணவுக்கட்டுப்பாட்டில் இருந்துவந்தேன். உடல் எடை மூன்று கிலோ வரை குறைந்தது. இலகுவாக செயல்பட முடிந்தது. சர்க்கரை நோயின் எந்த அறிகுறியும் என்னிடமில்லை. மூன்றுமாதங்களுக்கான சராசரி அளவை கண்டறியும் HBA1C சோதனையும் சர்க்கரை அளவு 7.1 என்ற அளவில் இருப்பதாக சொன்னது. ஒரு நூலிழை அதிகம்தான் என்றாலும் கவலைப்படவேண்டியதில்லை. இப்படியாக எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. இவ்வளவு நிகழ்வுகளுக்கும் காரணமான அந்த மூச்சிரைப்பு பிரச்சனை வந்து ஒரு வருடம் ஆகியிருந்த நேரம் அது. இனிமேல் வாழ்க்கையில் இன்பம்தான் என்றிருந்த நிலையில் அந்த மூச்சிரைப்பு பிரச்சனை மீண்டும் வந்தது!

– தொடரும்

(அடுத்த பகுதி)

அக்குபிரஷர் அனுபவங்கள் – 5

முந்தைய பகுதியின் தொடர்ச்சி

கிடைக்கப்பெற்ற பதில்கள் – மற்ற கேள்விகள்

2. சாதாரணமாக ஆரம்பிக்கும், ஆனால் தீவிரமாக ஆகக்கூடிய நோய்களுக்கு இம்மருத்துவமுறையில் என்ன சிகிச்சையளிக்க வேண்டும்? (காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம்)

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். காய்ச்சல், சளி, தலைவலி போன்ற எளிமையாக ஆரம்பிக்கும் விஷயங்கள், உணவு உள்ளிட்ட தினசரி வாழ்க்கையில் நாம் செய்யும் காரியங்களால் விளைவதே. இம்மாதிரி எளிய தொந்தரவுகள் தோன்றும்போதே, “இன்றூ அல்லது கடந்த சில நாட்களீல் நாம் செய்த குறிப்பிடத்தக்க வித்தியாசமான விஷயங்கள் என்ன?” என்று கவனித்துப் பார்த்தாலே, நமக்கு தீர்வு புலப்பட்டுவிடும். முக்கியமாக “பசியின்றி உணவுண்ட பொழுதுகள்”!! மேலும் இம்மாதிரி உபாதைகள் வரும்போது “னன்கு பசித்த பின்னர் உண்ணச் செல்வது, உணவுண்டு எழும்போது வயிறு கனமில்லாமல் பார்த்துக்கொள்வது ஆகியவற்றை பின்பற்ற வேணும். மேலும் முன்னர் கூறியது போல இவ்வுபாதைகளால் ஏற்படும் வலிகள், தொந்தரவுகள் ஆகியவற்றை தாங்கி பொறுமையாக இருத்தல் இவற்றின் மூலம் இவ்வுபாதைகளிலிருந்து நிச்சயம் வெளிவந்துவிடலாம். இப்படியிருந்தும் உபாதைகள் தீரவில்லையெனில், அக்குஹீலரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். முற்றீய பின்னர் போகிறோமே என்ற கவலை வேண்டாம். நீங்கள் அவரிடம் செல்லும்வரை மருந்துகள் எதுவும் உட்கொள்ளவில்லை என்பதே அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்!! நான் இந்த பதிவு தொடரின் முதலில் எழுதியது போன்ற சளி, மூச்சிரைப்பு பிரச்சனைகள் சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்தபோது, நான் மேற்கூறிய உணவுக் கட்டுப்பாட்டாலும், ஏங்கெல்ஸ் ராஜாவின் தொடு சிகிச்சையாலும் பூரணமாக மீண்டு வந்தேன்! இதைப் பற்றியும் பின்னர் எழுதுகிறேன்.

சரி இம்மாதிரி உபாதைகளுக்குத்தான் நாமாகவே மருந்துகள் சாப்பிட்டாலே சரியாகிறதே? அலோபதி மருத்துவரைக்கூட அணுக வேண்டியதில்லையே? பின் எதற்காக நாம் அக்குஹீலரை அணுகவேண்டும் என்ற கேள்வி அந்த முகாமில் எழுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் கூறிய விளக்கம் : என்னதான் நீங்கள் மருந்து சாப்பிட்டாலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மீண்டும் அந்த உபாதைகள் வந்தே தீரும் (நானே அதற்கு ஒரு நல்ல உதாரணம்தான்! பதினைந்தாம் வயதில் உட்கொண்ட ஹோமியோபதி மருந்துகளால் அடுத்த பதினெட்டு வருடங்களுக்கு மட்டுமே அந்த மூச்சிரைப்பு தொந்தரவை தடுக்க முடிந்தது. அதைவிட நிறைய பணம் செலவழித்து உட்கொண்ட அலோபதி மருந்துகள் ஒரு வருடம் கூட என் மூச்சிரைப்பு பிரச்சனையை தடுத்து வைக்க முடியவில்லை) மேலும் இவ்வுபாதைகள் இவ்வாறு திரும்பி வரும்போது தீவிரமாக தாக்கக்கூடிய சாத்தியங்கள் நிறையவே உண்டு.

உதாரணமாக, சளி குறித்து அவர்கள் பேசும்போது சொன்னது. “சளிக்கு அலோபதி மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது, அவை சளியை உடலிலிருந்து வெளியேற்றிவிடுவதில்லை. மாறாக சளியை உலரவைத்து, சிறு துகள்களாக ஆக்கிவிடுகிறது. இந்தத் துகள்கள் ஒரு படலமாக நுரையீரலை சுற்றி படிந்துவிடுகிறது. இந்த துகள்கள் நுரையீரலில் உள்ள ஆயிரக்கணக்கான நுண்துளைகளை அடைத்துவிடுகின்றன. இதனால் நுரையீரல் அதிகமாக உழைத்து சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இதனால் காலப்போக்கில் மூச்சிரைப்பு தொடர்பான நோய்கள் வருகின்றன. மாறாக நாம் அந்த சளியை மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் அதே சமயம் உணவுக்கட்டுப்பாட்டோடு (கூடவே தேவைப்பட்டால் அக்குபிரஷர் சிகிச்சைகளோடு) எதிர்கொண்டால், இருமல் மற்றும் தும்மல் மூலமாக சளி வெளியேறிவிடுகிறது. உள்ளே எந்த வடிவத்திலும் தங்குவதில்லை. அப்போது இதுதானே கடைபிடிக்க வேண்டிய முறை?” இது எனக்குமே தர்க்கரீதியாக சரி என்றே தோன்றுகிறது! நுரையீரலில் துகள் போன்றவற்றை பற்றி எனக்கு உறுதியாக தெரிவதில்லை. ஆனால் அலோபதி மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது சளியோ இருமலோ உடனே நின்றுவிடுகிறது. அப்படியானால் சளி உள்ளேயே தங்குகிறது என்றுதானே அர்த்தம்? சிறு குழந்தைகளுக்கு மலத்துடன் சளி வெளியேறுவதற்கு அலோபதி முறையில் மருந்துகள் கொடுப்பார்கள். அது உண்மையானால் அம்மாதிரி மருந்துகளை எடுத்துக்கொள்வது ஏற்புடையதே. ஆனால் மருந்தே எடுத்துக்கொள்ளாமல் சரியாகும்போது, எதற்காக வீணாக மருந்துகள்? உணவாக இல்லாத எதையும் தேவையில்லாமல் எதற்காக உள்ளே அனுப்பவேண்டும்?

3. உணவுமுறை குறித்து ஒரு சந்தேகம். சில சமயங்களில் சூழ்நிலைக்கைதியாக இருக்கும்போது அளவிற்கதிகமாக உண்ணவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, அடுத்த வேளை உணவினை பசியெடுக்கும்போது உண்பதால், முந்தைய வேளையில் செய்த தவறை திருத்திக்கொள்ள முடியுமா?

இதற்கு அவர்கள் சொன்ன பதில், “சாத்தியம்தான். ஆனால் இதை ஒரு விதி விலக்காகத்தான் கொள்ளவேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்வது ஒத்துவராது. மேலும் நம் முன்னோர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் விடாமல் சில விரதங்களை கடைபிடித்து வந்ததை நினைவில் கொள்ளுங்கள். இவையெல்லாம் மின்சார அலுவலகம் தனது பராமரிப்பிற்காக மாதம் ஒரு தினம் மின்சாரத்தை நிறுத்தி வைத்து மின் இணைப்புகள், மின் மாற்றிகள் ஆகியவற்றை அந்த நேரத்தில் பழுது பார்த்துக்கொள்வதை போன்றது. அவர்களைப் போன்று நாமும் குறிப்பிட்ட இடைவெளிகளில் சீராக உண்ணாவிரதங்களை மேற்கொள்ளலாம். அப்படி மேற்கொண்டாலும் கூட, பொதுவாகவே உணவுக் கட்டுப்பாட்டை (பசித்துப் புசித்தல்) மீறுதல் நல்லதல்ல” ஆகவே சூழ்நிலைக்கைதியாக இருப்பதை முடிந்தவரை தவிர்க்கப்பாருங்கள்.

4. பால், பாலிலிருந்து பெறப்பட்ட பொருட்கள், அவற்றால் செய்யப்பட்ட பதார்த்தங்கள், பாலினால் செய்யப்பட்ட பதார்த்தங்கள், உப்பு, மைதா ஆகியவை உண்பது குறித்து பிரபுவுக்கு கடுமையான எதிர் கருத்து உண்டு. ஆனால் ஏங்கெல்ஸ் ராஜா இவற்றைப்பற்றி எதுவும் சொல்வதில்லை. காந்திகூட பால் உட்கொள்வதை எதிர்த்தாலும், குழந்தைகளுக்கும், நோயிலிருந்து மீண்டு வருவோர்க்கும் அவற்றை பரிந்துரைக்கிறார். இதை குறித்து ராஜாவிடம் கேட்கவேண்டும். (பசிக்கும்போது விஷத்தை சாப்பிட்டாலும் செரித்துவிடும் என்று சொன்னாலும் சொல்வார் என்று தோன்றுகிறது 🙂 )

இதைப்பற்றி குறிப்பாக யாரும் கேள்வியெழுப்பவில்லை. அந்த முகாமில் எங்களுக்கு பயிற்சி கொடுத்த அக்குஹீலர்களும் பால் பொருட்களைப் பற்றி ரொம்ப பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பசித்துப் புசித்தல் என்ற கோட்பாட்டை எங்கள் மனங்களில் பதியவைப்பதற்கே அவர்களின் பெரும்பாலான சக்தி செலவாகிக்கொண்டிருந்தது. ஒருவர் மட்டும் இரவில் தூங்கப்போகும் முன் பால் அருந்தலாமா என கேட்டார். அதற்கும் பசித்தால் உட்கொள்ளுங்களேன் என்றுதான் பதில் வந்தது. நான்கு விதமான கருத்துக்களை இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வலியுறுத்துவாராம். அவை

1. பசித்தபின் உணவு உட்கொள்ளுங்கள்.
2. தாகம் எடுக்கும்போது தண்ணீர் அருந்துங்கள்.
3. சோர்வு ஏற்பட்டால் மட்டும் ஓய்வெடுங்கள்.
4. உறக்கம் வரும்போது மட்டும் உறங்க செல்லுங்கள்.

இதன் அடிப்படையில் நாம் யோசித்தாலே நம் வாழ்வு முழுமைக்கான பதில்கள் கிடைத்துவிடும். இதோடு சேர்த்து, நாம் உணவு உட்கொள்ளும் முறை பற்றியும், பால் முதலான பொருட்களைப் பற்றியும்  நாங்கள் அறிந்துகொண்டவற்றையும், அம்முகாமில் சொன்னவற்றையும் இங்கே தொகுத்து எழுதிவிடுகிறேன். தண்ணீரையும் காற்றையும் தவிர நாம் உட்கொள்ளும் அனைத்தையும் நாம் உணவாகவே கருத வேண்டும். உதாரணமாக நாம் பொதுவாக காலை உணவை ஒன்பது மணியளவில் உண்டுவிட்டு மறுபடியும் பத்து மணிக்கு உணவுண்ண செல்வதில்லை. ஏனென்றால், முதலில் உண்ட உணவு செரித்திருக்காது என்று நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் ஏழு மணிக்கு காஃபி/டீ குடித்துவிட்டு ஒன்பது மணிக்கு காலை உணவை எந்த தயக்கமுமில்லாமல் உண்கிறோம். சமயத்தில் காலை உணவுக்கு பின்னும் காஃபி/டீ அருந்துவோம். (என்னை விட்டால் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த சாதனையை நிகழ்த்த முடியும் 🙂 ) பாலை நாம் தண்ணீருக்கு இணையாக கருதுவதால்தான் இப்படி என்று நான் நினைக்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் பால் குறித்து சொல்வதை பாருங்கள்.

“வளர்ந்தபின்னும் பால் உண்ணும் ஒரே உயிரினம் மனிதனே. பசுவின் பால் எட்டுகிலோ எடையில் பிறக்கும் ஒரு கன்றுகுட்டியை ஒரே மாதத்தில் ஐம்பது கிலோவாக மாற்றத்தேவையான சத்துக்களும், வளர்ச்சித்தூண்டிகளும் அடங்கியது. அதை நாம் குடிக்கும்போது நமக்கு செயற்கையான முறையில் வளர்ச்சித்தூண்டிகள் வருகின்றன. அதிகபட்ச சத்துக்கள் உடலில் தேங்கி நோய் உருவாகிறது. புரதம் மற்றும் சுண்ணாம்புச் சத்தை பெரியவர்கள் கொட்டைகள் பருப்புகள் மூலமே பெற முடியும். சிறு குழந்தைகளுக்கு நீர்க்க வைத்த பால் கொடுக்கலாம். பெரியவர்கள் முழுமையாகவே தவிர்த்துவிட வேண்டும்.” – மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை – http://www.jeyamohan.in/382#.Vo25L_l97Dc

இப்படியாக, உணவாக கருதவேண்டிய ஒன்றை பானமாக கருதி அடிக்கடி உட்கொண்டு அதே சமயம் உணவையும் உட்கொண்டால் உடல் என்னதான் செய்யமுடியும்? உடலானது இயக்கம், பராமரிப்பு, செரிமானம் ஆகிய மூன்றுக்கும் தனது சக்தியை சரிசமமாக செலவு செய்யவேண்டியிருக்கிறது என்று அந்த முகாமில் சொன்னார்கள். நாம் இவ்வாறு பாலை அல்லது ஏதாவது உணவை பசிக்காமல் இருக்கும்போதும் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தால், நமது உடல் செரிமானத்திற்கே தனது சக்தியை பெருமளவு செய்யவேண்டியிருக்கும். இன்றைய அவசர உலகில் – அதாவது அவசர உலகம் என்று நாமாக நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு உலகில் – நாம் இயங்கிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. ஆக செரிமானத்தையும் இயக்கத்தையுமே உடல் பிரதானமாக செய்துகொண்டிருக்க, பராமரிப்பு என்ற ஒன்றையே உடலால் செய்யமுடியாமல் போகின்றது. இந்த பராமரிப்பில் ஏற்படும் குறைபாடே நமக்கு நோயாக வெளிப்படுகிறது என்பது இவர்களின் கருத்து. இதை நானும் முழுக்க ஏற்றுகொள்கிறேன். இன்னொரு முக்கிய விஷயம். பால் மட்டுமென்றில்லை, நான் முன்னர் சொன்னதுபோல், தண்ணீர் தவிர அனைத்தையுமே உணவாக கருதவேண்டும். ஆகவே குளிர்பானங்கள், பழரசங்கள், சோடா என அனைத்துமே இதில் அடங்கும். ஆகவே நாம் தண்ணீர் தவிர எதை உட்கொள்வதென்றாலும், நமக்கு “நன்றாக” பசிக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு உண்ணுதல் முக்கியம். வயிறு அமிலத்தன்மையோடு இருப்பதாக தோன்றினால், உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் தண்ணீர் மட்டும் சிறிது அருந்துவது நல்ல பலனளிக்கும் என்று ஏங்கல்ஸ் ராஜா ஒருமுறை கூறினார். மேலும் மாலை ஆறு மணிக்குமேல் சமைத்த உணவினை தவிர்த்துவிட்டு, வெறும் பழங்கள் எடுத்துக்கொள்வதும் (பசித்தால் மட்டும்) உடலுக்கு நல்லது என்று கூறினார். ஆரம்ப காலங்களில் ஆரஞ்ச் போன்ற புளிப்பு சுவை தரும் பழங்களை தவிர்ப்பது நல்லது.

என் நண்பன் பிரபு, பசி ஏற்பட்டால் மட்டுமே சாப்பிடுவது என்பதை கடந்த இரு வருடங்களாக பெரும்பாலும் சரியாக கடைபிடித்துவருகிறான். இதனால் அவனுக்கு தேவையற்ற உடல் எடை குறைந்து சுறுசுறுப்பாக இயங்க முடிவதாக கூறினான். சில சமயம் இருபத்து நான்கு மணி நேரம் வரையிலும் கூட பசி ஏற்படுவதில்லை என்று கூறினான். என்னால் அவ்வப்போது மட்டுமே பசித்து புசிப்பதை கடைபிடிக்க முடிகிறது. ஆனால் எப்போதெல்லாம் கடைபிடிக்கிறேனோ அப்போதெல்லாம் உடல் எடை உடனே குறைவதையும் உடல் லேசாக ஆவதையும் உணர முடிகிறது. ஸ்வாமி விவேகானந்தர் “பசித்திரு, தனித்திரு, விழித்திரு” என்று சொன்னார். மற்றவரோடு சேர்ந்து உண்ணாமல் “தனித்து” உண்டால் மட்டுமே என்னால் அளவோடு உண்ண முடிகிறது. அதனால் “பசித்தும்” இருக்க முடிகிறது. பசி இருக்கும்போது மந்தமில்லாமல் “விழித்திருக்கவும்” முடிகிறது 🙂

இந்த முகாமில் தண்ணீர் அருந்துவதை பற்றியும் நிறைய கேள்விகள் எழுந்தன. “ஒரு நாளைக்கு ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமா? எத்தனை லிட்டர் குடிக்கலாம்?” இது போல. முன்னர் கூறியது போல இதற்கு பதில் “தாகமெடுக்கும் போது மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும்”. தாகத்திலும் மூன்று வகை தாகத்தை பற்றி இம்முகாமில் சொன்னார்கள். தாகமானது உதட்டளவிலோ, தொண்டையளவிலோ அல்லது அதற்கு மேலுமோ தேவைப்படுகிறது. உங்களுக்கு தாகமேற்படும்போது தண்ணீர் அருந்துவதற்கு முன் இதை சற்று கவனித்துவிட்டு அருந்துங்கள். அல்லது முதலில் கொஞ்சமாக குடித்துப்பாருங்கள். தாகம் அடங்கவில்லை என்றால் மட்டும் இன்னும் கொஞ்சம், மேலும் கொஞ்சம் என்று எடுத்துக்கொண்டு தாகம் எப்போது அடங்குகிறது என்பதை கவனித்து அறிந்து அடங்கியவுடன் நிறுத்திவிடுங்கள். நம் உடலுக்கு தேவையான தண்ணீரை உடல் தானாக கேட்டு பெற்றுக்கொள்ளும். ஆகவே குறைவாக அருந்துகிறோமோ என்ற கவலை வேண்டாம். யார் கண்டார்கள்? சர்க்கரை நோயின் ஒரு அறிகுறியான “அடிக்கடி நீர் பிரிதல்” என்பது இவ்வாறு நாம் தேவையின்றி ஒரு நாளைக்கு ஆறு லிட்டர், ஏழு லிட்டர் என்று நீர் அருந்துவதால் கூட இருக்கலாம்!

 

5. தூங்குவது குறித்து எனக்கு ஒருமுறை, “இரவு 9 மணிக்கு தூங்க சென்றுவிடுங்கள்” என்று கூறியிருந்தார். அதை குறித்து சற்று விரிவாக கேட்கவேண்டும்.

“தூக்கம் மனிதனுக்கு மிக இன்றியமையாதது. இரவு பதினோரு மணியிலிருந்து அதிகாலை மூன்று மணிவரை உடலானது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் உடல் தனது பராமரிப்பு வேலைகளை முழுமையாக மேற்கொள்ள முடியும். மேலும் சமீபகாலத்தில் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கு ஒரு வகை சுரப்பி தேவைக்கும் குறைவாக சுரப்பதே காரணமென்றும், அந்த சுரப்பி இந்த பதினொன்றிலிருந்து மூன்று என்ற நேர இடைவெளியிலேயே சுரக்கும் என்றும் சோதனைகளில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகவே குறைந்த பட்சம் பெண்களுக்கு இந்த நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் இருப்பது அவசியம். இந்த ஆழ்ந்த தூக்கத்தை உறுதி செய்ய, அதற்கு ஒரு மணி நேரம் முன்னும் பின்னும் தூக்கத்தில் இருப்பது முக்கியம். ஆகவே இரவு ஒன்பது அல்லது ஒன்பதரை மணிக்குள் தூங்க செல்வது நல்லது. காலையில் நான்கு மணியை ஒட்டி எழுவதும் நல்லதே” என்று சொன்னார்கள். ஒன்பது மணிக்கு உறங்குவதென்றால் அதற்கு முன்னரே உணவை (பசித்தால்) முடித்துக்கொள்ளவேண்டும் என்பதும் அவசியமாகிறது.

அந்தமுகாமில் சிலர், இதைப்பற்றி கடுமையான கேள்விகளை எழுப்பினார்கள். “நாங்கள் நைட் ஷிஃப்ட்டில் வேலை பார்ப்பவர்கள், அப்படியிருக்க இவ்வாறு பின்பற்றுவது எவ்வாறு சாத்தியமாகும்? நாங்கள் எந்த முறைப்படி தூங்குவது?” என்றெல்லாம் கேட்டார்கள். ஏங்கெல்ஸ் ராஜா எளிமையாக “இவ்வாறு இரவில் தூங்குவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. மீறி இரவில்தான் வேலை பார்க்கவேண்டும் என்ற நிலையிருந்தால், அவ்வேலையிலிருந்து வேறு வேலைக்கு மாறுவது நல்லது. இல்லையென்றால் ஒன்றும் செய்வதற்கில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவும் மருத்துவருக்காகத்தான் செலவாகப்போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார். கேள்வி கேட்டவர்கள் இந்த பதிலால் அதிருப்தி அடைந்தார்கள் என்பது தெரிந்தது. “உலகம் போகும் போக்கில் இவ்வாறெல்லாம் ‘வேலை பார்க்க முடியாது’ என்று சொன்னால் என்ன ஆவது?” என்று சலித்துக் கொண்டார்கள்.

வேறு ஒரு சமயத்தில், நான் உடல் சோர்வினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஏங்கெல்ஸ் ராஜா “உங்களுக்கு தூக்கம் பத்தவில்லை. நன்கு தூங்கி ஓய்வெடுங்கள்” என்று சொன்னார். “எல்லா நாளும் அது எனக்கு சாத்தியமாகவில்லை” என்றபோது, “அப்படியென்றால் உணவு கட்டுப்பாட்டை கடுமையாக கடைபிடியுங்கள். தூக்கம் அல்லது உணவு இதில் ஏதாவது ஒன்றை முறைப்படுத்தினாலே போதுமானது. உங்களால் சரியாக நேரத்திற்கு தூங்க முடியவில்லையென்றால், கடும் பசி எடுக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். பசி ஓரளவு அடங்கி, வயிறும் லேசாக இருக்கும்போது உணவு உட்கொள்வதை நிறுத்திவிடுங்கள்” என்று யோசனை சொன்னார். அதை வெறும் இரண்டு நாட்களுக்கு பின்பற்றியதற்கே எனக்கு நல்ல மாற்றம் தெரிந்தது.

நாம் தூங்கலாம் என்றாலும் குழந்தைகள் உறங்குவதில்லை, ஆகவே எங்களுக்கும் உறக்கம் சரியில்லை என்று நான் அந்த முகாமில் சொன்னேன். அதற்கு “விளக்கை அணைத்துவிட்டு நாம் உறங்க சென்றால், குழந்தைகளும் (மிகச் சிறிய குழந்தைகள் கூட) தானாக உறங்க வந்துவிடும். எந்த குழந்தையும் இருட்டில் உலாவிக்கொண்டேயிருப்பதில்லை. ஆகவே கடிவாளம் உங்கள் கையில்தான் இருக்கிறது” என்றார்கள். சமீபத்தில் ஒரு தோழரின் வாழ்க்கை முறை பற்றி கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் மதியம் இரண்டிலிருந்து இரவு பத்து மணி வரை ஷிஃப்ட்டில் வேலை பார்க்கிறார். வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு பத்தேமுக்கால் மணிக்கு வந்து டிவி பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு, பின்னரும் ஒரு மணி நேரத்திற்கு டிவியில் அனைத்து செய்திகளையும் கேட்டுவிட்டுத்தான் தூங்க செல்வாராம். ஒரு எட்டு வருடங்களுக்கு முன்பு நானும் இப்படித்தான் வாழ்ந்துவந்தேன். ஆனால் இப்போது இதை கேட்க ஒரு திகில் கதையை போல இருந்தது.

6. உணவை பிரஷர் குக்கரில் சமைத்தால் நல்லது அல்ல என்று கேள்விப்பட்டேன் இதை பற்றி ஏங்கல்ஸ்இன் கருத்தை கேட்கலாம் என்று நினைக்கிறேன்.

இதைப்பற்றி கேட்கவில்லை. பொதுவாக அந்த முகாமில் உணவு தயாரிக்கப்படும் விதத்தை பற்றியோ, தவிர்க்கப்பட வேண்டிய உணவுகளைப் பற்றியோ எதுவுமே பேசப்படவில்லை. பரோட்டா, பீட்ஸா போன்ற உணவுகளை உட்கொள்ளாதீர்கள் என்றுகூட சொல்லவில்லை. ஆகவே இக்கேள்வியை கேட்பதில் எந்த பொருளுமில்லை என்று தோன்றியதால் நாங்கள் இதை தவிர்த்துவிட்டோம்.

இந்த தொடுசிகிச்சை முகாமில் ஏற்பட்ட பிற அனுபவங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

– தொடரும்

(அடுத்த பகுதி)

 

 

அக்குபிரஷர் அனுபவங்கள் – 4

முந்தைய பகுதியின் தொடர்ச்சி

கிடைக்கப்பெற்ற பதில்கள் – அவசர சிகிச்சைகள்

இந்தப் பதிவில், அந்த தொடுசிகிச்சை முகாமில் எங்களுக்கு கிடைத்த பதில்களையும், அதன்பின் அவற்றின் மீது நாங்களாக விவாதித்து புரிந்துகொண்டவற்றையும் இங்கு பகிர்கிறேன்.

இப்பதில்கள் பெரும்பாலும் பொது அறிவை ஒட்டியதாகவே இருக்கும். உதாரணத்திற்கு, இப்போது நீங்கள் யாருமற்ற ஒரு காட்டில் தனித்து விடப்படுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். யாரையும் எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் கொள்வோம். அந்நிலையில் இப்போது உங்களுக்கு இருக்கும் நோய்கள் அல்லது உடல் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பீர்கள் என்று நீங்களாகவே யோசித்து பார்த்தீர்களென்றால் கிடைக்கும் பதில்களையே நிறைய நேரங்களில் அக்குஹீலர்களும் அளிப்பார்கள். அந்த முகாமில் ஒரு அக்குஹீலர் கிண்டலாக சொன்னதுபோல ‘எந்த ஒரு விலங்கும் தன்னையொத்த இன்னொரு விலங்கிடம் சென்று எதை எப்போது எவ்வளவு எப்படி சாப்பிடலாம் என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பதில்லை ஆனால் மனிதன் மட்டும் எப்போதும் இப்படி எதையாவது சக மனிதரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்’. பின்வரும் கேள்விகளுக்கான பதிலை நீங்களாக இந்த கோணத்தில் சிந்தித்து பார்த்துவிட்டு பின் பதில்களை படித்துப் பாருங்கள். நான் சொல்லவருவது புரியும் என்று நினைக்கிறேன்.

இப்போது கேள்விகளும், பதில்களும்

1. அவசர சிகிச்சைகள் குறித்து இம்மருத்துவமுறை என்ன சொல்கிறது? சிறு ரத்த காயங்கள் முதல் (கத்தியால் வெட்டிக்கொள்ளுதல்) பெரிய காயங்கள் வரை (விபத்தில் சிக்குவது).

அலோபதி தவிர மற்ற மருத்துவ முறைகளை பின்பற்றுவோர் நிச்சயம் இந்த கேள்விகளை எதிர்கொள்வீர்கள். காரணம், அலோபதி மருத்துவமனையில் நாம் காணும் அறுவை சிகிச்சை அறை மற்றும் அவசர உதவிப் பிரிவு போன்று ஒன்று இம்மாதிரி மாற்று மருத்துவ முறைகளில் இல்லாததால்தான் என்று எனக்கு தோன்றுகிறது. அவ்வகையில் அக்குபிரஷர் முறை இன்னமும் சிக்கலானது. இங்கு மருந்துகளே இல்லயென்பதால் நமக்கு இந்த கேள்வி
நிச்சயம் எழும். எந்த அளவிலான ரத்தகாயங்களுக்கும் அக்குஹீலர்கள் சொல்லும் ஒரே பதில், அவற்றை அப்படியே விட்டுவிடுங்கள் என்பதே. தொடர்ந்து ரத்தம் வெளியேறும்போது (உதாரணமாக சக்கரை நோயாளிகள்) ஏதாவது சிகிச்சை கொடுப்பார்களா என தெரியவில்லை. ஆனால் அவர்கள் “அவ்வாஅறு நாம் பேசாமல் விடும்போது ரத்தம் தானாக உறைந்துவிடும்” என்கிறார்கள். பிறகு? உடல் ஒரு மருத்துவர் என்பது இவர்களின் அடிப்படைக்கோட்பாடு. ஆகையால் ரத்தம் உறைந்து கட்டியாக ஆனபின் உடல் தானாகவே அதை உதிர்த்துவிட்டு தோலை வளரச்செய்து விடும். ஆகவே மருந்து மாத்திரைகள், கட்டுக்கள் எதுவும் தேவையில்லை. விபத்தில் அடிபட்டவர்களுக்கும் இதேதான் மருத்துவம்! இவ்வாறு ஒருமுறை விபத்தில் அடிபட்டவர் ஒருவருக்கு தொடைப்பகுதியில் பெரிய அளவில் தோல், சதை ஆகியவை கிழிந்து ரத்தம் வந்து கொண்டிருந்ததாம். இவர்கள் எந்த வித மருத்துவத்தையும் செய்யாமல் அப்படியே விட்டுவிட, சில மணி நேரங்களுக்குப் பிறகு (16 முதல் 18 மணி நேரம் வரை என சொன்னதாக நினைவு) காயம் தானாக மூடி அவரால் இயங்க முடிந்ததாம்.

சரி எலும்பு உடைந்தால்? எலும்பு உடைந்தவுடன் உடல் நிணநீரை (என்று நினைக்கிறேன்) அதிக அளவில் உற்பத்தி செய்து, எலும்பு உடைந்த இடத்தை சுற்றி வீக்கத்தை முதலில் உருவாக்கும். பின்னர் தானாகவே எலும்பை “முடிந்தவரையில்” ஒட்டவைத்து பாதிக்கப்பட்ட உறுப்பை முடிந்தவரை இயக்கத்திற்கு மீட்டுக்கொண்டு வரும். ஆம் எந்தவித அக்குபிரஷர் சிகிச்சையும் இல்லாமலே கூட! உடல் ஒரு மருத்துவர் இல்லையா?

அது என்ன முடிந்தவரை? முழு குணம் சாத்தியமில்லையா? ஆம் முடிந்தவரையிலான குணம்தான். என்னதால் உடல் ஒரு மருத்துவர் என்றாலும், புற காயங்களை அதனால் முடிந்தவரை தானே குணப்படுத்த முடியும்? ஆனால் ஒன்று. முழுமையான குணம் என்பதை அலோபதியும் உறுதி செய்வதில்லை என்பதை நினைவில் கொண்டால், “மருந்து, மருத்துவமனை செலவுகள் மிச்சம்” என்ற லாபம் அக்குபிரஷரில் கிடைக்கிறதல்லவா? 😉

வயிறு கிழிந்து, குடல் வெளிவந்த நிலைகள் போன்ற அதிதீவிரமான விபத்துகள் பற்றி, நாங்களும் எதுவும் கேட்கவில்லை, அவர்களும் எதுவும் சொல்லவில்லை. பொதுவாக ஒவ்வொரு வகையான பாதிப்புக்கும் அக்குஹீலர்கள் எல்லா நேரத்திலும் பதில் சொல்வதில்லை. ஆனால் எல்லா விதமான நோய்களையும் இவர்கள் நிச்சயம் குணப்படுத்துவதாக கூறுகிறார்கள். மற்ற மருத்துவமுறைகளை ஒப்பு நோக்க இவர்கள் பெரும்பாலும் பதிலளிக்கவே முயல்கிறார்கள்! மேலும் இந்த விஷயத்தில், மிருகங்களைப் பார்த்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்கள். எந்த மிருகமும் எவ்வளவு அடிபட்டாலும் “தானாக” எந்த மருத்துவமனையையும் தேடி செல்வதில்லை. அந்த “வலிதாங்கும் குணம்” மற்ற எந்த மிருகங்களை காட்டிலும் மனிதனுக்கு குறைவுதான் என நான் நினைக்கிறேன். வலி தாங்கி, பதட்டப்படாமல் இருந்தாலே பெருமளவு நோயிலிருந்து குணமாகி வந்துவிடலாம்.

சரி, பாம்புக்கடி மற்றும் இதர விஷப்பூச்சி கடிகளுக்கு? உண்மையில் சொல்லப்போனால் அவர்கள் அளித்த பதில் அப்போது எனக்கு திருப்தியளிக்கவில்லை. பயமில்லாமல் இருந்தாலே விஷக் கடிகள் ஒன்றும் செய்யாது என்ற வகையில் பதிலளித்தார்கள். ஆனால் அவர்கள் நாடி பிடித்து பார்த்து மருத்துவம் கொடுக்கலாமே என்று எனக்கு பிறகு தோன்றியது. மீண்டுமொரு வாய்ப்பு கிடைத்தால்  கொஞ்சம் விளக்கமாக கேட்கவேண்டும். இப்போதைக்கு எனக்கு தோன்றூவது, முதலில், பாம்புக்கடிகளை எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் முன்பைவிட இப்போது குறைவு (என்று நினைக்கிறேன்). ஆகவே இந்த ஆபத்திற்கான வாய்ப்புகள் குறைவு. இரண்டாவதாக இவ்வாறு கடிவாங்கி, இந்த அக்குபிரஷர் மருத்துவ முறையிலும் குணமாகவில்லையென்றால் “பகவான் விதித்தது இதுதான்” என்று எண்ணி போய்ச்சேர வேண்டியதுதான். நாமெல்லாம் வாழாம போனா இந்த உலகம் சுத்தாம நின்னு போகவா போகுது? இந்தமாதிரி பிரச்சனைகளுக்கு அலோபதி மற்றும் இதர மருத்துவமுறைகள் என்ன சொல்கின்றன என்று இதுவரை எனக்கு தெரியாது. விசாரித்துவிட்டு தனியே எழுதுகிறேன். உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லுங்கள்.

ஆக மொத்தம், அவசர சிகிச்சை தேவைப்படும் சூழல்களில் பின்வருமாறு செயல்படலாம்.

1. அக்குஹீலர் யாரையேனும் தொடர்பு கொண்டு அறிவுரை கேட்கலாம் (சிலர் அலைபேசி மூலமாகவே சிகிச்சை அளிக்கிறார்கள்! ஆம் உண்மைதான். இவ்வாறு குணமடைந்தவர்கள் இருக்கிறார்கள். பின்னர் இதை விளக்குகிறேன்.) அல்லது உங்களுக்கு பழக்கமான அக்குஹீலரிடம் முன்பே இம்மாதிரி சூழல்களை எப்படி சமாளிப்பது என்று கேட்டு வைத்துக்கொண்டு அதன்படி செயல்படலாம்.

2. இல்லையென்றால், பதட்டப்படாமல் தைரியமாக அமைதி காக்கலாம். அதாவது உடலின் பொறுப்பில் மருத்துவத்தை விட்டுவிடலாம்.

 

-தொடரும்

(அடுத்த பகுதி)

குழந்தைகளுடன் சீட்டு விளையாடுதல் – ஒரு அப்டேட்

அக்குபிரஷர் பதிவுகள் ரொம்பவும் சீரியஸாக செல்வதாக தோன்றியதால், ஒரு சிறிய ஓய்வுக்காக இந்த பதிவு.

முன்பு ஒருமுறை என் குழந்தையுடன் நா சீட்டு விளையாடின கதையை சொல்லி இருந்தேன் (இணைப்பு : http://narayani.nallenthal.in/?p=113) இப்போது அவளுக்கு ஐந்தேகால் வயதாகிறது. அந்த பதிவில் சொல்லியிருந்த விளையாட்டுக்களை இன்னமும் விருப்பத்துடன் விளையாடுகிறாள். இருப்பினும் புது விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தும் தேவை எங்களுக்கும் இருப்பதால் பின்வரும் இரு விளையாட்டுக்களை சொல்லிக்கொடுத்து அவளுடன் நாங்களும் விளையாடுகிறோம். இவையிரண்டையும் புதியவை என்று கூறுவதைவிட ஏற்கனவே இருக்கும் ரம்மி மற்றும் ஏஸ்ஸின் எளிய வடிவங்கள் என்று கூறலாம். உங்களுக்கும் உதவியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த இங்கே பகிர்கிறேன். இவை இரண்டையும் விளையாடுவதற்கு ஒரேயொரு சீட்டுக்கட்டு போதும்.

எளிமைப்படுத்தப்பட்ட ரம்மி

வழக்கமாக ரம்மிக்கு போடுவதுபோல் ஆனால் ஆளுக்கு தலா பத்து சீட்டுக்கள் மட்டும் போடவேண்டும். ஒரு கட்டு வைத்து விளையாடும் பட்சத்தில் இருவர் மட்டுமே பெரும்பாலும் இதை விளையாட முடியும். ஓப்பன் ஜோக்கர் வைத்துவிட்டு ஆட ஆரம்பிக்கவேண்டும். K Q மற்றும் J ஆகிய சீட்டுக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. மற்றபடி A முதல் பத்துவரை வரிசையாக அடுக்கிக்கொண்டுவர முயற்சிக்க வேண்டும். பூக்கள் என்னவேண்டுமானாலும் இருக்கலாம். ஜோக்கரின் பயன்பாட்டில் எந்த மாறுதலுமில்லை. கே க்யூ ஜே ஆகியவற்றை ஆட்ட முதலிலேயே வெளியேற்றிவிடலாம். பத்துவரை அடுக்கி முடித்தபின் கூடுதலாக உள்ள கடைசி சீட்டை கவிழ்த்து வைத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்யலாம். குழந்தையுடன் ஆட ஆரம்பிக்கும்போது தனித்தனி ஆட்டங்களில் கவனம் செலுத்தலாம். போகப்போக பெரியவர்கள் விளையாடுவதுபோல் 240, 360 என பாயிண்ட் வைத்தும் விளையாடலாம். காசு வைத்து விளையாடும் அளவுக்கு செல்லவேண்டாம் 😛

எளிமைபடுத்தப்பட்ட ஏஸ்

ஹரிணிக்கு சாதாரண ஏஸ் விளையாட பிடிக்கும். ஆனால் அவளின் சிறு கையில் பதிமூன்று சீட்டுக்களை பிடிப்பது கடினமாகையால் இவ்வாறு சில சீட்டுக்களை வைத்து விளையாடும் முறையை நானும் என் மனைவியும் உருவாக்கினோம். இதில் ஆளுக்கு தலா ஐந்து சீட்டுகள் மட்டும் வைத்து ஆட ஆரம்பிக்கவேண்டும். மற்ற சீட்டுக்களை தனியே வைத்துவிட வேண்டும். அவை அடுத்தடுத்த சுற்றுக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

ஸ்பேட் ஏஸ் அல்லது ஸ்பேடில் உள்ள பெரிய எண்ணிலிருந்து ஆட்டத்தை தொடங்க வேண்டும். இருவரிடமும் ஸ்பேட் இல்லையென்றால், கிளாவர், ஹார்ட்டின், டைமண்ட் என்ற வரிசையில் உள்ள பெரிய எண்ணை கொண்டு ஆரம்பிக்கலாம். பொதுவாக ஆட ஆரம்பிக்குமுன் எந்த பூவிலிருந்து ஆரம்பிக்கலாமென்று கேட்டு ஆரம்பித்தல் நல்லது.

வெட்டு கொடுப்பதெல்லாம் வழக்கம்போல்தான். முடிந்தவரை இருவரும் சீட்டு எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கவேண்டும். சீட்டு மிஞ்சுபவரின் சீட்டுக்களை கணக்கில் கொண்டு அடுத்த சுற்றை ஆரம்பிக்க வேண்டும். இரண்டாவது சுற்றிலிருந்து இருவரிடமும் சமமான சீட்டுக்கள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சீட்டுக்கள் போடப்பட வேண்டும். முதலில் எடுத்து வைத்த சீட்டுக்கள் மிகவும் குறைவாக இருந்தால், அவற்றையும், முந்தைய சுற்றில் தோற்றவரின் கையிலுள்ள மீதி சீட்டுக்களையும் கலந்து சரிபாதியாக பிரித்துக்கொள்ளலாம். மறுபடியும் விளையாட்டை தொடரலாம். இம்மாதிரி விளையாடுவதன்மூலம் நாம் பெறும் நல்ல விஷயம் என்னவென்றால், தோல்விகள் குறுகிய நேரம் மட்டுமே இருக்கும், இப்போது தோற்றாலும் அடுத்த சுற்றில் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வருகிறது. தோல்வியை எளிதாகவும் அதே சமயம் அடுத்த சுற்றில் ஜெயிக்க வேண்டும் என்ற உறுதியோடும் எதிர்கொள்ள அவர்களால் முடிகிறது.

விளையாட வேண்டுமென்பதுதான் முக்கையமென்பதால் விதிகளை மாற்றிக்கொள்ள தயங்க வேண்டாம். விதிகள் குழப்பமாக இருப்பதாக தோன்றினால் குழந்தைகளிடமே முடிவை விட்டுவிடுங்கள். அவை நம்மை விட நல்ல முடிவுகளை பல நேரங்களில் எடுக்கின்றன. 😉

அக்குபிரஷர் அனுபவங்கள் – 3

முந்தைய பதிவின் தொடர்ச்சி

அறிய உறுதிகொண்டேன்

நானும் என் நண்பன் பிரபுவும் தொடுசிகிச்சை முகாமிற்கான தயாரிப்புகளில் இறங்கினோம் என்று சொன்னேனில்லையா? எங்களுடைய மற்ற சில நண்பர்களுடன் இதைப்பற்றி விவாதித்து கேள்விகளை திரட்டிக்கொண்டு அம்முகாமிற்கு செல்லலாமென்று நினைத்தோம். முதலில், எங்களுடைய அடிப்படை புரிதல்களையும், எங்களுக்கு இருக்கும் கேள்விகளையும்  தொகுத்து எங்கள் நண்பர்களுக்கு அனுப்பிவைத்தோம். ஒருவரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை 😦 ‘வழக்கம் போல′ என்று நீங்களாக சேர்த்து படித்துக்கொண்டாலும் எனக்கு சம்மதமே 🙂

அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதிலுள்ள எங்கள் புரிதல்கள் பெரும்பாலும் சரியாகவே இருந்தன என்பதை அந்த முகாமில் அறிந்துகொண்டோம். கேள்விகளுக்கான அவர்களின் பதில்களையும் முகாம் அனுபவங்களையும் சற்று விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்.

என்னுடைய இந்த புரிதலுக்கு உதவியாக இருந்தவை ஏங்கெல்ஸ் ராஜா எழுதிய உயிரை உணர்வோம் என்ற புத்தகமும் உமர் ஃபாருக் எழுதிய வீட்டுக்கு ஒரு மருத்துவர் என்ற புத்தகமும்.

நான் என் நண்பர்களுக்கு அனுப்பிய அந்த மின்னஞ்சல்…

அன்புள்ள அனைவருக்கும்,

ஏங்கெல்ஸ் ராஜாவின் “தொடுசிகிச்சை முகாம்” வரும் ஏப்ரல் 10,11,12,13 (2015) ஆகிய நான்கு நாட்களும் சென்னை நீலாங்கரையில் நடைபெறுகிறது. அக்குபிரஷர் குறித்த அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்கிறார். நானும், பிரபுவும் கலந்துகொள்ளவிருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு வீட்டளவில் எளிய நோய்களுக்கு நாமே சிகிச்சை கொடுக்கலாம். பிறருக்கும் கொடுக்கலாம். இதில் தொடுசிகிச்சை மட்டுமின்றி, மரபுவழி மருத்துவம், உணவுமுறைகள், நோய்கள் வராமல் தடுத்தல் ஆகியன குறித்தும் பேசுவார் என்று நினைக்கிறேன். உங்களுக்கு இவை குறித்த சந்தேகங்கள், கேள்விகள் எதுவுமிருப்பின் எங்களுக்கு தெரிவியுங்களேன். நாங்கள் பதில் பெற்று வர முயற்சிக்கிறோம்.

அடிக்கடி கேட்கப்படும் எளிய கேள்விகளை தவிர்க்கும் பொருட்டு, நான் இதுவரை புரிந்துகொண்டவற்றை முதலில் இங்கு பகிர்கிறேன். என்னைவிட அதிக அனுபவமுள்ள பிரபு அவற்றை தேவைப்பட்டால் திருத்தி, மேலும் தகவல்களை பகிர்வான். அவற்றை படித்துவிட்டு மேலதிக கேள்விகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏப்ரல் 12 இரவு வரை கூட கேள்விகளை கேட்கலாம் 🙂

1.    நாம் சாப்பிடும் உணவே மருந்து. நமது உடலே நமக்கான மருத்துவர். மேலும் அம்மருத்துவர் ஒருபோதும் தவறு செய்வதில்லை என்பதே தொடுசிகிச்சையின் அடிப்படை.�
2.    நோய்கள் எனப்படுபவை உடலின் சக்தி ஓட்டத்தில் ஏற்படும் தடைகளால் விளையும் அல்லது அத்தடைகளை நமக்கு உணர்த்தும் அறிகுறிகளே.�
3.    அனைத்து வகையான நோய்களுக்கும் உடல் ஏதேனும் ஒருவிதத்தில் நமக்கு அறிகுறிகளை கொடுத்துக்கொண்டேயிருக்கிறது. நமது வேலை அவற்றை கண்டறிந்து அதற்கான திருத்தங்களை நமது வாழ்வில் அமல்படுத்துவது. முடியாத பட்சத்தில் தொடுசிகிச்சையாளர்களிடம் சென்று அதற்கான தீர்வை புறத்தூண்டுதலின் மூலம் பெறுவது.�
4.    ஏங்கெல்ஸ் ராஜா கூறும் அறிவுரை “எது பிடிக்கிறதோ சாப்பிடுங்கள், ஆனால் பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள்”. இவற்றின் மூலம் மறைமுகமாக உணர்த்தப்படுபவை.�
a.    பசிக்கிறதோ இல்லையோ உணவுண்ணும் நேரம் வந்தவுடன் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.�
b. பசிவந்தபின்னும் உணவுண்ணாமல் இருப்பதை தவிர்க்கவேண்டும்.�
c.    உணவு உட்கொள்ளும்போது, பசி தீரும் உணர்வு வந்தவுடன் சாப்பிடுவதை நிச்சயம் நிறுத்திவிடவேண்டும்.�
d.    உணவை நன்கு மென்று தின்னவேண்டும் என்று பிரபு வலியுறுத்துவான். ஆனால் ஏங்கெல்ஸ் ராஜா அவ்வாறு எதுவும் சொல்வதில்லை. ஆனால் அவரது புத்தகமான “உயிரை உணர்வோம்”-இல் “நொறுங்கத்தின்றால் நூறு வயது போன்ற பழமொழிகளை நினைவில் கொள்ள வேண்டும்” என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.�
5.    தொடுசிகிச்சையில் நாடி பிடித்து பார்ப்பது முதல்படி. அதிலேயே நமது உடலின் அனைத்து தொந்தரவுகளையும் அவர்கள் அறிந்து கொள்கிறார்கள் என்று சொல்வார். நாம் நம்முடைய ஒவ்வொரு உடல் உபாதையையும் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அவர்கள் கொடுக்கும் சிகிச்சை நமது அனைத்து தொந்தரவுகளுக்குமானது.�
6.    மற்ற மருத்துவ முறைகளைப் போன்று “பொது பரிசோதனை” என்ற வழக்கம் இதிலில்லை. உடல் தொந்தரவுகள் எதுவுமில்லாதபோது, தொடுசிகிச்சையாளர்களை சந்திக்க வேண்டிய அவசியமில்லை.�
7.    அலோபதி தொடர்பான எந்தவிதமான சோதனைகளையும் இவர்கள் கண்டு கொள்வதில்லை. நாமாக எடுத்துப்பார்ப்பதை தடுப்பதுமில்லை. ஒருவேளை ஏதேனும் மருந்துகளை/கிருமிகளை உட்செலுத்தி மேற்கொள்ளப்படும் சோதனைகளை மட்டும் தடுப்பார்கள் என்று நினைக்கிறேன் (உதாரணம் – மாண்டாக்ஸ் சோதனை).�
8.    இந்த சிகிச்சை மேற்கொள்ளும்போது எந்தவிதமான மருந்துகளும் உட்கொள்ளுதல் கூடாது. ”ரொம்பவே முக்கியமானது” என்று மற்ற மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும்.�
9.    எல்லாவகையான நோய்களுக்கும் இவர்கள் சிகிச்சையளிக்கிறார்கள். எய்ட்ஸிற்கு கூட அளிக்கிறார்களாம். எந்த நோய் எந்த அளவில் இருந்தாலும் இவர்களுக்கு நோயாளிகளை ஏற்றுக்கொள்வதில் கவலையில்லை.�
10.    உதாரணமாக, இன்சுலின் எடுத்துக்கொள்ளுமளவிற்கு போன சக்கரை நோயாளிகளை கூட இவர்கள் சிகிச்சைக்கு ஏற்றுக்கொள்கிறார்கள். என்ன ஒன்று? அந்நோயாளிகள் மற்ற மருந்துகளை நிறுத்துவதுபோல் இன்சுலினையும் நிறுத்தவேண்டும்.�
11.    நோயாளிகள் பொறுமையாகவும், தைரியமாகவும் இருத்தல் அவசியம்.

இப்போது எனக்கிருக்கும் கேள்விகள்

1.    அவசர சிகிச்சைகள் குறித்து இம்மருத்துவமுறை என்ன சொல்கிறது? சிறு ரத்த காயங்கள் முதல் (கத்தியால் வெட்டிக்கொள்ளுதல்) பெரிய காயங்கள் வரை (விபத்தில் சிக்குவது).�
2.    சாதாரணமாக ஆரம்பிக்கும், ஆனால் தீவிரமாக ஆகக்கூடிய நோய்களுக்கு இம்மருத்துவமுறையில் என்ன சிகிச்சையளிக்க வேண்டும்? (காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம்)�
3.    உணவுமுறை குறித்து ஒரு சந்தேகம். சில சமயங்களில் சூழ்நிலைக்கைதியாக இருக்கும்போது அளவிற்கதிகமாக உண்ணவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, அடுத்த வேளை உணவினை பசியெடுக்கும்போது உண்பதால், முந்தைய வேளையில் செய்த தவறை திருத்திக்கொள்ள முடியுமா?�
4.    பால், பாலிலிருந்து பெறப்பட்ட பொருட்கள், அவற்றால் செய்யப்பட்ட பதார்த்தங்கள், பாலினால் செய்யப்பட்ட பதார்த்தங்கள், உப்பு, மைதா ஆகியவை உண்பது குறித்து பிரபுவுக்கு கடுமையான எதிர் கருத்து உண்டு. ஆனால் ஏங்கெல்ஸ் ராஜா இவற்றைப்பற்றி எதுவும் சொல்வதில்லை. காந்திகூட பால் உட்கொள்வதை எதிர்த்தாலும், குழந்தைகளுக்கும், நோயிலிருந்து மீண்டு வருவோர்க்கும் அவற்றை பரிந்துரைக்கிறார். இதை குறித்து ராஜாவிடம் கேட்கவேண்டும். (பசிக்கும்போது விஷத்தை சாப்பிட்டாலும் செரித்துவிடும் என்று சொன்னாலும் சொல்வார் என்று தோன்றுகிறது 🙂 )�
5.    தூங்குவது குறித்து எனக்கு ஒருமுறை, “இரவு 9 மணிக்கு தூங்க சென்றுவிடுங்கள்” என்று கூறியிருந்தார். அதை குறித்து சற்று விரிவாக கேட்கவேண்டும்.�
6.    உணவை பிரஷர் குக்கரில் சமைத்தால் நல்லது அல்ல என்று கேள்விப்பட்டேன் இதை பற்றி ஏங்கல்ஸ்இன் கருத்தை கேட்கலாம் என்று நினைக்கிறேன்

இவை தவிர உங்களுக்கு எதுவும் சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் எழுதி அனுப்புங்கள். ஆவன செய்கிறோம்.

அன்புடன்,
கணேஷ்.

– தொடரும்

(அடுத்த பகுதி)

Create your website at WordPress.com
Get started