அக்குபிரஷர் அனுபவங்கள் – 6

முந்தைய பகுதியின் தொடர்ச்சி

முகாம் அனுபவங்களும், என்னுடைய சில தனிப்பட்ட எண்ணங்களும்

அந்த முகாமில் பரோட்டா, பீட்ஸா போன்ற உணவுகளை உண்ணுதல் குறித்து எதுவும் சொல்லவில்லை என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். அது தவறு 😦 உணவைப் பற்றிய பேச்சு வந்தபோது ஓரிடத்தில், “நாம் வாழுமிடத்தில்தான் நமது உடலுக்கேற்ற, நமது தட்பவெப்ப நிலைக்கேற்ற உணவுகள் விளைகின்றன. ஆகவே பெரும்பாலும் நமது பகுதியில் விளையும் உணவை உண்பதே சிறந்தது” என்று சொன்னார்கள். இதை வைத்து பார்க்கும்போது, பீட்ஸா, பர்கர் போன்ற வெளிநாட்டு உணவுகள் மட்டுமல்ல, நம் நாட்டிலேயே பிறபகுதிகளில் விளைவித்து நம் இடங்களுக்கு அனுப்பப்படும் கோதுமை ஆகியவற்றை உண்பதையும் தவிர்க்க வேண்டுமென்றாகிறது. அப்படியென்றால், சென்னை போன்ற விவசாயம் ஏறத்தாழ முழுவதும் இல்லாத பெருநகரங்களில் வாழ்பவர்கள் என்னதான் உண்பது என்ற சந்தேகம் பிறகு எழுந்தது. ஒருவேளை நாம் வாழும் நகரத்தை ஏதேனும் ஒரு பயிரையாவது விளைவிக்கும் வகையில் பாதுகாத்து வைத்துக்கொள்ளவேண்டும் போல. குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியங்கள் உண்பதை ஊக்குவித்தார்கள் என்றாலும் அரிசி சாப்பிடுவதை ஒரு குறையாக சொல்லவில்லை. அதுவும் நமது பகுதியில் விளைவதுதானே? மேலும் இதைக்கொண்டு பார்க்கும்போது வெளிநாடுகளுக்கு சென்று தங்கும்போது அங்கு கிடைக்கும் உணவுகளை உண்பதே சரியென்றாகிறது. எப்படியிருப்பினும் பசித்தபின் உணவுண்ண செல்வதுதான் நம்மை பாதுகாத்து கொள்ள ஒரே வழி என்று தோன்றுகிறது.

மேலும் பசித்துப் புசிக்கும்போது, அல்சர் உள்ளிட்ட குடல் நோய்கள் வராதா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அவர்கள் தரும் விளக்கம், குடல் நோய்கள் அனைத்தும் அதிகப்படியான உணவையும் தேவையில்லா நேரத்தில் உள்ளே அனுப்பப்படும் உணவையும் செரிப்பதற்காக குடலால் அதிகப்படியாக சுரக்கப்படும் அமிலங்களால் விளைகிறது. குடலில் உணவு எதுவுமில்லையென்றால் குடலும் தேவையில்லாமல் எந்த அமிலத்தையும் சுரக்காது.

இப்போது அந்த ஐந்து நாட்கள் முகாம் குறித்த செய்திகளுக்கு வருகிறேன். இந்த முகாம் இரு பிரிவுகளாக நடந்தது. முதல் நான்கு நாட்களும் தனியாகவும், பிறகு பதினைந்து நாட்கள் கழித்து ஒரே ஒரு நாள் இரண்டாவதாகவும் நடந்தது. முதல் பகுதியில் முதல் இரண்டரை நாட்களுக்கு பசித்து உணவுண்ணுதல், சீக்கிரம் உறங்க செல்லுதல், மற்ற வாழ்க்கை முறைகள் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். அங்கு எங்களுடன் பேசிய அக்குஹீலர்களும் அதை ஊக்குவித்தார்கள். ஏனென்றால், இம்மாதிரி விஷயங்களை கிரஹித்துக்கொண்டாலே போதும் சிகிச்சைகளெதுவுமின்றி நம்மால் வாழ முடியும் என்பதால், அக்குபிரஷர் குறித்து தெரிந்து கொள்வதைவிட இதுவே முக்கியம் என்றார்கள். கலந்துகொண்டவர்களும் சளைக்காமல் கேள்வி கேட்டார்கள். சில சமயம் கேட்ட விஷயத்தையே அவர்களுக்கே தெரியாமல் பலவிதமாக மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள். இவ்விஷயத்தில் அக்குஹீலர்களை பாராட்ட வேண்டும். பொறுமையாக எல்லாவற்றிற்கும் பதிலளித்துக் கொண்டிருந்தார்கள். பலவிதமானவர்கள் கலந்துகொண்டார்கள். ஒரு திராவிட இயக்கத்தவர், ஒரு ஆன்மிகவாதி, ஒரு ஜோதிடர், வெவ்வேறு வயதில் நிறைய குடும்பத் தலைவிகள், இளம் பெண்கள், கணிப்பொறித்துறையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவர் இப்படி கலவையான ஒரு கூட்டம். முதல் நாள் நிகழ்ச்சிக்கு ஒரு திருமங்கையும் வந்திருந்தார். முதல் நாளன்று அனைவரும் தங்கள் அக்குபிரஷர் பற்றிய தனது அறிமுகம், ஏன் இந்த முகாமிற்கு வந்திருக்கிறோம் என்பது போன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். பின்னர் வாழ்க்கை முறை, உடல் அமைப்பு, உடலின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து அக்குஹீலர்கள் பேசத் தொடங்கினர். இதுவே அடுத்த மூன்றரை நாட்களுக்கு நீண்டது. அக்குஹீலர்கள் இங்கு கூறிய கருத்துக்களால் நான் உட்பட நிறையபேர் சீண்டப்பட்டோம். உதாரணமாக மனிதன் எவ்வகையில் மற்ற விலங்குகளிடமிருந்து உயர்ந்து வேறுபட்டு நிற்கிறான் என்ற கேள்வி எங்கள் முன் வைக்கப்பட்டது. நாங்கள் பதில்களை சொல்லச் சொல்ல, இவையனைத்துமே விலங்குகளும் செய்யுமே என்று விளக்கமளித்தார்கள். அங்கே ஏங்கெல்ஸ் ராஜா சொன்னது போல விலங்குகளிடமிருந்து உயர்ந்தவன் மனிதன் என்பதை நிறுவும் நிர்பந்தத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். தொடர்ந்து எங்களிடமிருந்து வந்த பல்வேறு வகையான கேள்விகளையும் அக்குஹீலர்கள் நன்றாகவே எதிர்கொண்டார்கள். சிலவற்றை ஏற்கனவே எழுதியிருந்தாலும், விடுபட்டவற்றை முடிந்தவரையிலும் சேர்த்து சுருக்கமாக ஒருமுறை தொகுத்து இங்கே தருகிறேன். ஒரு நாளில் நாம் என்னென்னவெல்லாம் செய்கிறோம் என்பதையும், அதற்கு அக்குஹீலர்கள் தரும் விளக்கங்களையும் பார்ப்போம்.

தூங்குதல் – இரவு ஒன்பது மணிக்கே தூங்க செல்லுங்கள். ஒன்பது மணிக்கு மேல் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவும் மருத்துவருக்காகவே சம்பாதிக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இரவு பதினொரு மணியிலிருந்து காலை மூன்று மணிவரை ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம். இவ்வேளைகளில் உடலில் சுரக்கும் சுரப்பிகள் நமக்கு மார்பக புற்று நோய் உட்பட பல்வேறு நோய்களை தடுக்க வல்லது. அதிகாலையில் எழுந்து வேலை செய்வது நல்லது.

பல் துலக்குதல் – நாம் தற்போது உபயோகிக்கும் பற்பசைகளும் பிரஷ்களும் தேவையற்றவை. என்னதான் பற்பசை என்றாலும் அதுவும் ஒரு செயற்கையான ரசாயனமே! அதனால் நம் வாயின் உள்ளுறுப்புகளுக்கு சேதமில்லாமல் இருக்காது. ஆகவே முடிந்தால் உமிக்கரி எனப்படும் கரியை வைத்தோ அல்லது உள்ளூரில் கிடைக்கும் பிரான்ட் இல்லாத ஆனால் மருத்துவமுறைப்படி தயாரிக்கும் பற்பொடிகளையோ வைத்தே பல் துலக்குங்கள். இப்போதெல்லாம், பற்பசைகளே தாம் வேம்பு, உப்பு, எலுமிச்சை ஆகியவற்றின் குணாதிசயங்களுடன் வருவதாகவும், பிரஷ்கள் சாம்பலின் குணாதிசயங்களை கொண்டிருப்பதாகவும் விளம்பரப்படுத்தப்படும் சூழ்நிலையில் நாம் ஏன் நேரடியாக வேம்பு, உப்பு, உமிக்கரி ஆகியவற்றை நேரடியாக உபயோகிக்கக்கூடாது? மேலும் காலையிலேயே பல் துலக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அதே போல காலையில் பல் துலக்கினால் மட்டும் போதாது. கீழே “வாய் கொப்பளித்தல்” பகுதியில் எழுதியுள்ளதை போல எப்போதெல்லாம் வாயில் ஒரு வழவழப்புத்தன்மை அதிக அளவில் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் பல்துலக்குதல் அவசியம். அது காலையிலும் தோன்றலாம். பகல் பொழுதில் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம்!

உடற்பயிற்சி – தனியாக உடற்பயிற்சி என்று எதுவும் தேவையில்லை. அதற்கு பதில் எந்த வயதிலிருந்தாலும் விளையாடுங்கள். சைக்கிள் ஓட்டுவது, ஓடுவது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வோரும் அதை ஒரு விளையாட்டாக செய்யுங்கள். வீட்டு வேலைகளை கூட விளையாட்டாக செய்து உடற்பயிற்சியினால் வரும் பலன்களை விட அதிகமாகவே பயன்பெறலாம்.

குளித்தல் – சோப் ஷாம்பு ஆகிய எதுவும் தேவையில்லை! உடலை நீர் கொண்டு கழுவுவதே குளியலில் நாம் செய்யவேண்டியது. சோப்பிலோ ஷாம்பூவிலோ இருக்கும் ரசாயனங்கள் இல்லாத குளியலே பாதுகாப்பானது. நம் உடலில் வரும் வியர்வை நாற்றம் உள்ளிட்ட நாற்றங்கள், உடல் வெளியேற்றும் கழிவுகளே. ஆகவே உணவுக்கட்டுப்பாடு சரியாக இருக்கும்போது துர்நாற்றங்களுக்கும் இடமில்லை!

அலங்கரித்துக் கொள்ளுதல் – பெருமளவுக்கு ரசாயனங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பவுடர்களோ இன்னபிர க்ரீம்களோ, வாசனைத் திரவியங்களோ கூட தேவையில்லை. அவையும் ரசாயனங்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். (என் நண்பன் பிரபு கடுமையான உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து, பல் துலக்குவற்கு உமிக்கரியை மட்டுமே பயன்படுத்துகிறான். சோப் ஷாம்பு ஆகியவற்றை உபயோகிப்பதில்லை. வாசனை திரவியங்களையும் பயன்படுத்துவதில்லை. அவன் உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் எதுவும் வெளியேறுவதில்லை என்பதால் வியர்வை நாற்றம் உள்ளிட்ட எந்த பிரச்சனையும் அவனுக்கில்லை!)

நீர் அருந்துதல் – நமது தாகத்தின் அளவுக்கேற்ப (உதடு, தொண்டை, குடல்) தண்ணீர் அருந்தினால் போதும். வெறும் வயிற்றில் அரை லிட்டர் குடிப்பது, உணவுக்கு முன் குடிப்பது, உணவுண்டபின் அரைமணி நேரத்திற்கு பிறகு குடிப்பது, ஒரு நாளுக்குள் ஆறு லிட்டர் தண்ணீர் குடிப்பது என எந்த சாகசமும் தேவையில்லை.

உணவுண்ணுதல் – நன்கு பசித்தால் மட்டுமே உணவு உண்ணவேண்டும். உண்ணும் உணவுகள் முடிந்தவரை அந்தந்த பகுதிகளில் அந்தந்த பருவத்தில் விளைவதாக இருக்கட்டும். அலுவலகத்திற்கு செல்வோர், காலையில் பசியெடுக்கவில்லையென்றால், காலை உணவைத் தவிர்த்துவிட்டு, கையோடு சில பழங்களை கொண்டு செல்லலாம். அசந்தர்ப்பமாக பசிக்கும்போது அவற்றை உட்கொண்டு பசியாற்றிக் கொள்ளலாம். உணவை உண்ணும்போதோ, முடித்த உடனேயோ நீர் அருந்துவதை தவிர்க்கவும். இது குடலுக்கு செரிமானத்தில் கூடுதல் சுமையை தரும். காரமான உணவை உட்கொள்ள நேரிட்டாலோ அல்லது உணவுண்ணும்போது தாகத்தை உணர்ந்தாலோ சிறிது நீர் அருந்திக்கொள்ளலாம். மாலை ஆறு மணிக்குமேல் சமைத்த உணவுகளை உண்பதை தவிர்த்துவிடுங்கள். பசித்தால் பழங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். சிறிது பசியோடு உறங்க செல்வதால் பிழையில்லை.

வாய் கொப்பளித்தல் – உணவுண்டு முடித்தபின் வாயை உடனே கொப்பளிக்க வேண்டாம். நமது உணவை செரிப்பதற்கு தேவையான உமிழ்நீர் உணவுண்டபின்னரே வாயில் சுரக்க ஆரம்பிக்கும். உடனே வாயை கொப்பளித்தால், தேவையான உமிழ்நீர் கிடைக்காமல், குடலானது செரிமானத்தை சிரமப்பட்டு செய்ய நேரிடும். உணவை முடித்தபின் வாயில் சுரக்கும் உமிழ்நீர், நம் பற்களுக்கிடையில் இருக்கும் உணவுத்துகள்களையும் சேர்த்து உள்ளே அனுப்பிவிடும். சிறிது நேரத்திற்குப் பிறகு வாயில் ஒருவித வழவழப்புத்தன்மை தோன்றும். அந்த நேரத்தில் வாயை கொப்பளித்தால் போதுமானது. மேலும் உணவுண்ணாமல் இருக்கும் மற்ற நேரங்களிலும் இவ்வாறு சிலமுறை வழவழப்புத்தன்மையை வாயில் உணரலாம். அப்போது வாயை கொப்பளிப்பது நல்லது.

உண்ணாவிரதம் – உண்ணாவிரதம் மேற்கொள்வது நல்லது. முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து, பின்னர் தகுந்த பயிற்சியுடனும் அக்குஹீலர்களின் ஆலோசனைகளுடனும் அதிக நாட்களுக்கு உண்ணாவிரதத்தை கடைபிடிக்கலாம். இந்த முகாமில் வந்த அக்குஹீலர் பார்த்திபன் தனது உண்ணாவிரத அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். தண்ணீர் மட்டுமே உணவு. ஆரம்ப காலங்களில் பழரசத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். பசிக்கும்போது சிறிது தண்ணீரை உட்கொண்டு அடுத்த வேலையை பார்க்கப்போய்விடுவார்கள். முக்கியமான ஒன்று. உண்ணாவிரத நாட்களில் எப்போதும் போல பணிகளில் மும்முரமாக ஈடுபடவேண்டும். உடலில் சோர்வு ஏற்பட்டு அதனால் பணிகளை வழக்கம்போல் செய்யமுடியவில்லையென்றால் உண்ணாவிரதத்தை உடனே முடித்துக்கொண்டுவிட வேண்டும். இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பித்த உண்ணாவிரதம் இப்போது பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை அவர்களால் மேற்கொள்ளமுடிகிறது. “சரி, உணவு வேண்டுமென்றுதானே குடல் பசி உணர்வை எழுப்புகிறது? ஏன் அதை புறக்கணிக்கிறீர்கள்?” என்று கேட்டபோது “அதனால் எங்களுக்கு ஆன்மபலம் அதிகமாகிறது. தான் நினைத்ததையெல்லாம் தன்னால் நிறைவேற்றிவிடமுடியாது என்பதை உடல் புரிந்துகொள்கிறது. மேலும் அது செரிமானம், இயக்கம், பராமரிப்பு ஆகியவற்றில், உணவு கிடைக்காததால் செரிமானத்தை விட்டுவிட்டு மற்ற இரண்டையும் முடிந்தவரை செய்கிறது. அதிகப்படியாக சோர்வடையும்போது இயக்கத்தையும் குறைக்கிறது. அந்த நேரத்தில் நாங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதால் எந்த பாதிப்பும் இல்லாமல் நாங்கள் அதிலிருந்து வெளிவருகிறோம்” என்றார்கள். இவ்வாறு செய்வதால் உடலில் நெடுநாள் தடைபட்டிருக்கும் பராமரிப்பு பணிகளை உடலால் மேற்கொள்ள முடிகிறது.

அம்முகாமில் இக்கேள்விகளை கேட்டபோது ஆர்வமாக இருந்தது. பின்னர் யோசிக்கும்போது, அக்குஹீலர்கள் ஏற்கனவே கூறியதுபோல மிருகங்கள் எப்படி சாதாரணமாக தன் வாழ்க்கையை வாழ்கிறது, நாம் ஏன் இப்படி சின்ன சின்ன விஷயங்களுக்கும் அடுத்தவரை நம்பியிருக்கிறோம் என்று தோன்றியது. இந்த விவாதங்களுக்கு பிறகு, கடைசி ஒன்றரை நாட்களுக்கு நாடியை கண்டறிதல், அடிப்படை தொடுசிகிச்சைகள் ஆகியவற்றை கற்றுக்கொடுத்தார்கள். உமர் ஃபாருக்கின் “வீட்டுக்கு ஒரு மருத்துவர்” புத்தகத்தையும் இலவசமாகக் கொடுத்தார்கள். பின்னர் பதினைந்து நாட்கள் கழித்து ஒரு நாள் மீண்டும் இவற்றை நினைவுபடுத்திவிட்டு முகாமை நிறைவு செய்தார்கள். நானும் என் நண்பனும் இந்த முகாமிலிருந்தும் அதன்பின் ஓரளவு விவாதித்தும் நிறைய கற்றுக்கொண்டோம். இன்னமும் கற்றுக்கொண்டேயிருக்கிறோம்.

இம்முகாமிற்கு பிறகு, நான் கடுமையான உணவுக்கட்டுப்பாட்டில் இருந்துவந்தேன். உடல் எடை மூன்று கிலோ வரை குறைந்தது. இலகுவாக செயல்பட முடிந்தது. சர்க்கரை நோயின் எந்த அறிகுறியும் என்னிடமில்லை. மூன்றுமாதங்களுக்கான சராசரி அளவை கண்டறியும் HBA1C சோதனையும் சர்க்கரை அளவு 7.1 என்ற அளவில் இருப்பதாக சொன்னது. ஒரு நூலிழை அதிகம்தான் என்றாலும் கவலைப்படவேண்டியதில்லை. இப்படியாக எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. இவ்வளவு நிகழ்வுகளுக்கும் காரணமான அந்த மூச்சிரைப்பு பிரச்சனை வந்து ஒரு வருடம் ஆகியிருந்த நேரம் அது. இனிமேல் வாழ்க்கையில் இன்பம்தான் என்றிருந்த நிலையில் அந்த மூச்சிரைப்பு பிரச்சனை மீண்டும் வந்தது!

– தொடரும்

(அடுத்த பகுதி)

Leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create your website at WordPress.com
Get started
%d bloggers like this: