அக்குபிரஷர் அனுபவங்கள் – 5

முந்தைய பகுதியின் தொடர்ச்சி

கிடைக்கப்பெற்ற பதில்கள் – மற்ற கேள்விகள்

2. சாதாரணமாக ஆரம்பிக்கும், ஆனால் தீவிரமாக ஆகக்கூடிய நோய்களுக்கு இம்மருத்துவமுறையில் என்ன சிகிச்சையளிக்க வேண்டும்? (காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம்)

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். காய்ச்சல், சளி, தலைவலி போன்ற எளிமையாக ஆரம்பிக்கும் விஷயங்கள், உணவு உள்ளிட்ட தினசரி வாழ்க்கையில் நாம் செய்யும் காரியங்களால் விளைவதே. இம்மாதிரி எளிய தொந்தரவுகள் தோன்றும்போதே, “இன்றூ அல்லது கடந்த சில நாட்களீல் நாம் செய்த குறிப்பிடத்தக்க வித்தியாசமான விஷயங்கள் என்ன?” என்று கவனித்துப் பார்த்தாலே, நமக்கு தீர்வு புலப்பட்டுவிடும். முக்கியமாக “பசியின்றி உணவுண்ட பொழுதுகள்”!! மேலும் இம்மாதிரி உபாதைகள் வரும்போது “னன்கு பசித்த பின்னர் உண்ணச் செல்வது, உணவுண்டு எழும்போது வயிறு கனமில்லாமல் பார்த்துக்கொள்வது ஆகியவற்றை பின்பற்ற வேணும். மேலும் முன்னர் கூறியது போல இவ்வுபாதைகளால் ஏற்படும் வலிகள், தொந்தரவுகள் ஆகியவற்றை தாங்கி பொறுமையாக இருத்தல் இவற்றின் மூலம் இவ்வுபாதைகளிலிருந்து நிச்சயம் வெளிவந்துவிடலாம். இப்படியிருந்தும் உபாதைகள் தீரவில்லையெனில், அக்குஹீலரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். முற்றீய பின்னர் போகிறோமே என்ற கவலை வேண்டாம். நீங்கள் அவரிடம் செல்லும்வரை மருந்துகள் எதுவும் உட்கொள்ளவில்லை என்பதே அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்!! நான் இந்த பதிவு தொடரின் முதலில் எழுதியது போன்ற சளி, மூச்சிரைப்பு பிரச்சனைகள் சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்தபோது, நான் மேற்கூறிய உணவுக் கட்டுப்பாட்டாலும், ஏங்கெல்ஸ் ராஜாவின் தொடு சிகிச்சையாலும் பூரணமாக மீண்டு வந்தேன்! இதைப் பற்றியும் பின்னர் எழுதுகிறேன்.

சரி இம்மாதிரி உபாதைகளுக்குத்தான் நாமாகவே மருந்துகள் சாப்பிட்டாலே சரியாகிறதே? அலோபதி மருத்துவரைக்கூட அணுக வேண்டியதில்லையே? பின் எதற்காக நாம் அக்குஹீலரை அணுகவேண்டும் என்ற கேள்வி அந்த முகாமில் எழுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் கூறிய விளக்கம் : என்னதான் நீங்கள் மருந்து சாப்பிட்டாலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மீண்டும் அந்த உபாதைகள் வந்தே தீரும் (நானே அதற்கு ஒரு நல்ல உதாரணம்தான்! பதினைந்தாம் வயதில் உட்கொண்ட ஹோமியோபதி மருந்துகளால் அடுத்த பதினெட்டு வருடங்களுக்கு மட்டுமே அந்த மூச்சிரைப்பு தொந்தரவை தடுக்க முடிந்தது. அதைவிட நிறைய பணம் செலவழித்து உட்கொண்ட அலோபதி மருந்துகள் ஒரு வருடம் கூட என் மூச்சிரைப்பு பிரச்சனையை தடுத்து வைக்க முடியவில்லை) மேலும் இவ்வுபாதைகள் இவ்வாறு திரும்பி வரும்போது தீவிரமாக தாக்கக்கூடிய சாத்தியங்கள் நிறையவே உண்டு.

உதாரணமாக, சளி குறித்து அவர்கள் பேசும்போது சொன்னது. “சளிக்கு அலோபதி மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது, அவை சளியை உடலிலிருந்து வெளியேற்றிவிடுவதில்லை. மாறாக சளியை உலரவைத்து, சிறு துகள்களாக ஆக்கிவிடுகிறது. இந்தத் துகள்கள் ஒரு படலமாக நுரையீரலை சுற்றி படிந்துவிடுகிறது. இந்த துகள்கள் நுரையீரலில் உள்ள ஆயிரக்கணக்கான நுண்துளைகளை அடைத்துவிடுகின்றன. இதனால் நுரையீரல் அதிகமாக உழைத்து சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இதனால் காலப்போக்கில் மூச்சிரைப்பு தொடர்பான நோய்கள் வருகின்றன. மாறாக நாம் அந்த சளியை மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் அதே சமயம் உணவுக்கட்டுப்பாட்டோடு (கூடவே தேவைப்பட்டால் அக்குபிரஷர் சிகிச்சைகளோடு) எதிர்கொண்டால், இருமல் மற்றும் தும்மல் மூலமாக சளி வெளியேறிவிடுகிறது. உள்ளே எந்த வடிவத்திலும் தங்குவதில்லை. அப்போது இதுதானே கடைபிடிக்க வேண்டிய முறை?” இது எனக்குமே தர்க்கரீதியாக சரி என்றே தோன்றுகிறது! நுரையீரலில் துகள் போன்றவற்றை பற்றி எனக்கு உறுதியாக தெரிவதில்லை. ஆனால் அலோபதி மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது சளியோ இருமலோ உடனே நின்றுவிடுகிறது. அப்படியானால் சளி உள்ளேயே தங்குகிறது என்றுதானே அர்த்தம்? சிறு குழந்தைகளுக்கு மலத்துடன் சளி வெளியேறுவதற்கு அலோபதி முறையில் மருந்துகள் கொடுப்பார்கள். அது உண்மையானால் அம்மாதிரி மருந்துகளை எடுத்துக்கொள்வது ஏற்புடையதே. ஆனால் மருந்தே எடுத்துக்கொள்ளாமல் சரியாகும்போது, எதற்காக வீணாக மருந்துகள்? உணவாக இல்லாத எதையும் தேவையில்லாமல் எதற்காக உள்ளே அனுப்பவேண்டும்?

3. உணவுமுறை குறித்து ஒரு சந்தேகம். சில சமயங்களில் சூழ்நிலைக்கைதியாக இருக்கும்போது அளவிற்கதிகமாக உண்ணவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, அடுத்த வேளை உணவினை பசியெடுக்கும்போது உண்பதால், முந்தைய வேளையில் செய்த தவறை திருத்திக்கொள்ள முடியுமா?

இதற்கு அவர்கள் சொன்ன பதில், “சாத்தியம்தான். ஆனால் இதை ஒரு விதி விலக்காகத்தான் கொள்ளவேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்வது ஒத்துவராது. மேலும் நம் முன்னோர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் விடாமல் சில விரதங்களை கடைபிடித்து வந்ததை நினைவில் கொள்ளுங்கள். இவையெல்லாம் மின்சார அலுவலகம் தனது பராமரிப்பிற்காக மாதம் ஒரு தினம் மின்சாரத்தை நிறுத்தி வைத்து மின் இணைப்புகள், மின் மாற்றிகள் ஆகியவற்றை அந்த நேரத்தில் பழுது பார்த்துக்கொள்வதை போன்றது. அவர்களைப் போன்று நாமும் குறிப்பிட்ட இடைவெளிகளில் சீராக உண்ணாவிரதங்களை மேற்கொள்ளலாம். அப்படி மேற்கொண்டாலும் கூட, பொதுவாகவே உணவுக் கட்டுப்பாட்டை (பசித்துப் புசித்தல்) மீறுதல் நல்லதல்ல” ஆகவே சூழ்நிலைக்கைதியாக இருப்பதை முடிந்தவரை தவிர்க்கப்பாருங்கள்.

4. பால், பாலிலிருந்து பெறப்பட்ட பொருட்கள், அவற்றால் செய்யப்பட்ட பதார்த்தங்கள், பாலினால் செய்யப்பட்ட பதார்த்தங்கள், உப்பு, மைதா ஆகியவை உண்பது குறித்து பிரபுவுக்கு கடுமையான எதிர் கருத்து உண்டு. ஆனால் ஏங்கெல்ஸ் ராஜா இவற்றைப்பற்றி எதுவும் சொல்வதில்லை. காந்திகூட பால் உட்கொள்வதை எதிர்த்தாலும், குழந்தைகளுக்கும், நோயிலிருந்து மீண்டு வருவோர்க்கும் அவற்றை பரிந்துரைக்கிறார். இதை குறித்து ராஜாவிடம் கேட்கவேண்டும். (பசிக்கும்போது விஷத்தை சாப்பிட்டாலும் செரித்துவிடும் என்று சொன்னாலும் சொல்வார் என்று தோன்றுகிறது 🙂 )

இதைப்பற்றி குறிப்பாக யாரும் கேள்வியெழுப்பவில்லை. அந்த முகாமில் எங்களுக்கு பயிற்சி கொடுத்த அக்குஹீலர்களும் பால் பொருட்களைப் பற்றி ரொம்ப பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பசித்துப் புசித்தல் என்ற கோட்பாட்டை எங்கள் மனங்களில் பதியவைப்பதற்கே அவர்களின் பெரும்பாலான சக்தி செலவாகிக்கொண்டிருந்தது. ஒருவர் மட்டும் இரவில் தூங்கப்போகும் முன் பால் அருந்தலாமா என கேட்டார். அதற்கும் பசித்தால் உட்கொள்ளுங்களேன் என்றுதான் பதில் வந்தது. நான்கு விதமான கருத்துக்களை இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வலியுறுத்துவாராம். அவை

1. பசித்தபின் உணவு உட்கொள்ளுங்கள்.
2. தாகம் எடுக்கும்போது தண்ணீர் அருந்துங்கள்.
3. சோர்வு ஏற்பட்டால் மட்டும் ஓய்வெடுங்கள்.
4. உறக்கம் வரும்போது மட்டும் உறங்க செல்லுங்கள்.

இதன் அடிப்படையில் நாம் யோசித்தாலே நம் வாழ்வு முழுமைக்கான பதில்கள் கிடைத்துவிடும். இதோடு சேர்த்து, நாம் உணவு உட்கொள்ளும் முறை பற்றியும், பால் முதலான பொருட்களைப் பற்றியும்  நாங்கள் அறிந்துகொண்டவற்றையும், அம்முகாமில் சொன்னவற்றையும் இங்கே தொகுத்து எழுதிவிடுகிறேன். தண்ணீரையும் காற்றையும் தவிர நாம் உட்கொள்ளும் அனைத்தையும் நாம் உணவாகவே கருத வேண்டும். உதாரணமாக நாம் பொதுவாக காலை உணவை ஒன்பது மணியளவில் உண்டுவிட்டு மறுபடியும் பத்து மணிக்கு உணவுண்ண செல்வதில்லை. ஏனென்றால், முதலில் உண்ட உணவு செரித்திருக்காது என்று நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் ஏழு மணிக்கு காஃபி/டீ குடித்துவிட்டு ஒன்பது மணிக்கு காலை உணவை எந்த தயக்கமுமில்லாமல் உண்கிறோம். சமயத்தில் காலை உணவுக்கு பின்னும் காஃபி/டீ அருந்துவோம். (என்னை விட்டால் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த சாதனையை நிகழ்த்த முடியும் 🙂 ) பாலை நாம் தண்ணீருக்கு இணையாக கருதுவதால்தான் இப்படி என்று நான் நினைக்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் பால் குறித்து சொல்வதை பாருங்கள்.

“வளர்ந்தபின்னும் பால் உண்ணும் ஒரே உயிரினம் மனிதனே. பசுவின் பால் எட்டுகிலோ எடையில் பிறக்கும் ஒரு கன்றுகுட்டியை ஒரே மாதத்தில் ஐம்பது கிலோவாக மாற்றத்தேவையான சத்துக்களும், வளர்ச்சித்தூண்டிகளும் அடங்கியது. அதை நாம் குடிக்கும்போது நமக்கு செயற்கையான முறையில் வளர்ச்சித்தூண்டிகள் வருகின்றன. அதிகபட்ச சத்துக்கள் உடலில் தேங்கி நோய் உருவாகிறது. புரதம் மற்றும் சுண்ணாம்புச் சத்தை பெரியவர்கள் கொட்டைகள் பருப்புகள் மூலமே பெற முடியும். சிறு குழந்தைகளுக்கு நீர்க்க வைத்த பால் கொடுக்கலாம். பெரியவர்கள் முழுமையாகவே தவிர்த்துவிட வேண்டும்.” – மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை – http://www.jeyamohan.in/382#.Vo25L_l97Dc

இப்படியாக, உணவாக கருதவேண்டிய ஒன்றை பானமாக கருதி அடிக்கடி உட்கொண்டு அதே சமயம் உணவையும் உட்கொண்டால் உடல் என்னதான் செய்யமுடியும்? உடலானது இயக்கம், பராமரிப்பு, செரிமானம் ஆகிய மூன்றுக்கும் தனது சக்தியை சரிசமமாக செலவு செய்யவேண்டியிருக்கிறது என்று அந்த முகாமில் சொன்னார்கள். நாம் இவ்வாறு பாலை அல்லது ஏதாவது உணவை பசிக்காமல் இருக்கும்போதும் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தால், நமது உடல் செரிமானத்திற்கே தனது சக்தியை பெருமளவு செய்யவேண்டியிருக்கும். இன்றைய அவசர உலகில் – அதாவது அவசர உலகம் என்று நாமாக நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு உலகில் – நாம் இயங்கிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. ஆக செரிமானத்தையும் இயக்கத்தையுமே உடல் பிரதானமாக செய்துகொண்டிருக்க, பராமரிப்பு என்ற ஒன்றையே உடலால் செய்யமுடியாமல் போகின்றது. இந்த பராமரிப்பில் ஏற்படும் குறைபாடே நமக்கு நோயாக வெளிப்படுகிறது என்பது இவர்களின் கருத்து. இதை நானும் முழுக்க ஏற்றுகொள்கிறேன். இன்னொரு முக்கிய விஷயம். பால் மட்டுமென்றில்லை, நான் முன்னர் சொன்னதுபோல், தண்ணீர் தவிர அனைத்தையுமே உணவாக கருதவேண்டும். ஆகவே குளிர்பானங்கள், பழரசங்கள், சோடா என அனைத்துமே இதில் அடங்கும். ஆகவே நாம் தண்ணீர் தவிர எதை உட்கொள்வதென்றாலும், நமக்கு “நன்றாக” பசிக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு உண்ணுதல் முக்கியம். வயிறு அமிலத்தன்மையோடு இருப்பதாக தோன்றினால், உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் தண்ணீர் மட்டும் சிறிது அருந்துவது நல்ல பலனளிக்கும் என்று ஏங்கல்ஸ் ராஜா ஒருமுறை கூறினார். மேலும் மாலை ஆறு மணிக்குமேல் சமைத்த உணவினை தவிர்த்துவிட்டு, வெறும் பழங்கள் எடுத்துக்கொள்வதும் (பசித்தால் மட்டும்) உடலுக்கு நல்லது என்று கூறினார். ஆரம்ப காலங்களில் ஆரஞ்ச் போன்ற புளிப்பு சுவை தரும் பழங்களை தவிர்ப்பது நல்லது.

என் நண்பன் பிரபு, பசி ஏற்பட்டால் மட்டுமே சாப்பிடுவது என்பதை கடந்த இரு வருடங்களாக பெரும்பாலும் சரியாக கடைபிடித்துவருகிறான். இதனால் அவனுக்கு தேவையற்ற உடல் எடை குறைந்து சுறுசுறுப்பாக இயங்க முடிவதாக கூறினான். சில சமயம் இருபத்து நான்கு மணி நேரம் வரையிலும் கூட பசி ஏற்படுவதில்லை என்று கூறினான். என்னால் அவ்வப்போது மட்டுமே பசித்து புசிப்பதை கடைபிடிக்க முடிகிறது. ஆனால் எப்போதெல்லாம் கடைபிடிக்கிறேனோ அப்போதெல்லாம் உடல் எடை உடனே குறைவதையும் உடல் லேசாக ஆவதையும் உணர முடிகிறது. ஸ்வாமி விவேகானந்தர் “பசித்திரு, தனித்திரு, விழித்திரு” என்று சொன்னார். மற்றவரோடு சேர்ந்து உண்ணாமல் “தனித்து” உண்டால் மட்டுமே என்னால் அளவோடு உண்ண முடிகிறது. அதனால் “பசித்தும்” இருக்க முடிகிறது. பசி இருக்கும்போது மந்தமில்லாமல் “விழித்திருக்கவும்” முடிகிறது 🙂

இந்த முகாமில் தண்ணீர் அருந்துவதை பற்றியும் நிறைய கேள்விகள் எழுந்தன. “ஒரு நாளைக்கு ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமா? எத்தனை லிட்டர் குடிக்கலாம்?” இது போல. முன்னர் கூறியது போல இதற்கு பதில் “தாகமெடுக்கும் போது மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும்”. தாகத்திலும் மூன்று வகை தாகத்தை பற்றி இம்முகாமில் சொன்னார்கள். தாகமானது உதட்டளவிலோ, தொண்டையளவிலோ அல்லது அதற்கு மேலுமோ தேவைப்படுகிறது. உங்களுக்கு தாகமேற்படும்போது தண்ணீர் அருந்துவதற்கு முன் இதை சற்று கவனித்துவிட்டு அருந்துங்கள். அல்லது முதலில் கொஞ்சமாக குடித்துப்பாருங்கள். தாகம் அடங்கவில்லை என்றால் மட்டும் இன்னும் கொஞ்சம், மேலும் கொஞ்சம் என்று எடுத்துக்கொண்டு தாகம் எப்போது அடங்குகிறது என்பதை கவனித்து அறிந்து அடங்கியவுடன் நிறுத்திவிடுங்கள். நம் உடலுக்கு தேவையான தண்ணீரை உடல் தானாக கேட்டு பெற்றுக்கொள்ளும். ஆகவே குறைவாக அருந்துகிறோமோ என்ற கவலை வேண்டாம். யார் கண்டார்கள்? சர்க்கரை நோயின் ஒரு அறிகுறியான “அடிக்கடி நீர் பிரிதல்” என்பது இவ்வாறு நாம் தேவையின்றி ஒரு நாளைக்கு ஆறு லிட்டர், ஏழு லிட்டர் என்று நீர் அருந்துவதால் கூட இருக்கலாம்!

 

5. தூங்குவது குறித்து எனக்கு ஒருமுறை, “இரவு 9 மணிக்கு தூங்க சென்றுவிடுங்கள்” என்று கூறியிருந்தார். அதை குறித்து சற்று விரிவாக கேட்கவேண்டும்.

“தூக்கம் மனிதனுக்கு மிக இன்றியமையாதது. இரவு பதினோரு மணியிலிருந்து அதிகாலை மூன்று மணிவரை உடலானது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் உடல் தனது பராமரிப்பு வேலைகளை முழுமையாக மேற்கொள்ள முடியும். மேலும் சமீபகாலத்தில் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கு ஒரு வகை சுரப்பி தேவைக்கும் குறைவாக சுரப்பதே காரணமென்றும், அந்த சுரப்பி இந்த பதினொன்றிலிருந்து மூன்று என்ற நேர இடைவெளியிலேயே சுரக்கும் என்றும் சோதனைகளில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகவே குறைந்த பட்சம் பெண்களுக்கு இந்த நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் இருப்பது அவசியம். இந்த ஆழ்ந்த தூக்கத்தை உறுதி செய்ய, அதற்கு ஒரு மணி நேரம் முன்னும் பின்னும் தூக்கத்தில் இருப்பது முக்கியம். ஆகவே இரவு ஒன்பது அல்லது ஒன்பதரை மணிக்குள் தூங்க செல்வது நல்லது. காலையில் நான்கு மணியை ஒட்டி எழுவதும் நல்லதே” என்று சொன்னார்கள். ஒன்பது மணிக்கு உறங்குவதென்றால் அதற்கு முன்னரே உணவை (பசித்தால்) முடித்துக்கொள்ளவேண்டும் என்பதும் அவசியமாகிறது.

அந்தமுகாமில் சிலர், இதைப்பற்றி கடுமையான கேள்விகளை எழுப்பினார்கள். “நாங்கள் நைட் ஷிஃப்ட்டில் வேலை பார்ப்பவர்கள், அப்படியிருக்க இவ்வாறு பின்பற்றுவது எவ்வாறு சாத்தியமாகும்? நாங்கள் எந்த முறைப்படி தூங்குவது?” என்றெல்லாம் கேட்டார்கள். ஏங்கெல்ஸ் ராஜா எளிமையாக “இவ்வாறு இரவில் தூங்குவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. மீறி இரவில்தான் வேலை பார்க்கவேண்டும் என்ற நிலையிருந்தால், அவ்வேலையிலிருந்து வேறு வேலைக்கு மாறுவது நல்லது. இல்லையென்றால் ஒன்றும் செய்வதற்கில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவும் மருத்துவருக்காகத்தான் செலவாகப்போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார். கேள்வி கேட்டவர்கள் இந்த பதிலால் அதிருப்தி அடைந்தார்கள் என்பது தெரிந்தது. “உலகம் போகும் போக்கில் இவ்வாறெல்லாம் ‘வேலை பார்க்க முடியாது’ என்று சொன்னால் என்ன ஆவது?” என்று சலித்துக் கொண்டார்கள்.

வேறு ஒரு சமயத்தில், நான் உடல் சோர்வினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஏங்கெல்ஸ் ராஜா “உங்களுக்கு தூக்கம் பத்தவில்லை. நன்கு தூங்கி ஓய்வெடுங்கள்” என்று சொன்னார். “எல்லா நாளும் அது எனக்கு சாத்தியமாகவில்லை” என்றபோது, “அப்படியென்றால் உணவு கட்டுப்பாட்டை கடுமையாக கடைபிடியுங்கள். தூக்கம் அல்லது உணவு இதில் ஏதாவது ஒன்றை முறைப்படுத்தினாலே போதுமானது. உங்களால் சரியாக நேரத்திற்கு தூங்க முடியவில்லையென்றால், கடும் பசி எடுக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். பசி ஓரளவு அடங்கி, வயிறும் லேசாக இருக்கும்போது உணவு உட்கொள்வதை நிறுத்திவிடுங்கள்” என்று யோசனை சொன்னார். அதை வெறும் இரண்டு நாட்களுக்கு பின்பற்றியதற்கே எனக்கு நல்ல மாற்றம் தெரிந்தது.

நாம் தூங்கலாம் என்றாலும் குழந்தைகள் உறங்குவதில்லை, ஆகவே எங்களுக்கும் உறக்கம் சரியில்லை என்று நான் அந்த முகாமில் சொன்னேன். அதற்கு “விளக்கை அணைத்துவிட்டு நாம் உறங்க சென்றால், குழந்தைகளும் (மிகச் சிறிய குழந்தைகள் கூட) தானாக உறங்க வந்துவிடும். எந்த குழந்தையும் இருட்டில் உலாவிக்கொண்டேயிருப்பதில்லை. ஆகவே கடிவாளம் உங்கள் கையில்தான் இருக்கிறது” என்றார்கள். சமீபத்தில் ஒரு தோழரின் வாழ்க்கை முறை பற்றி கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் மதியம் இரண்டிலிருந்து இரவு பத்து மணி வரை ஷிஃப்ட்டில் வேலை பார்க்கிறார். வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு பத்தேமுக்கால் மணிக்கு வந்து டிவி பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு, பின்னரும் ஒரு மணி நேரத்திற்கு டிவியில் அனைத்து செய்திகளையும் கேட்டுவிட்டுத்தான் தூங்க செல்வாராம். ஒரு எட்டு வருடங்களுக்கு முன்பு நானும் இப்படித்தான் வாழ்ந்துவந்தேன். ஆனால் இப்போது இதை கேட்க ஒரு திகில் கதையை போல இருந்தது.

6. உணவை பிரஷர் குக்கரில் சமைத்தால் நல்லது அல்ல என்று கேள்விப்பட்டேன் இதை பற்றி ஏங்கல்ஸ்இன் கருத்தை கேட்கலாம் என்று நினைக்கிறேன்.

இதைப்பற்றி கேட்கவில்லை. பொதுவாக அந்த முகாமில் உணவு தயாரிக்கப்படும் விதத்தை பற்றியோ, தவிர்க்கப்பட வேண்டிய உணவுகளைப் பற்றியோ எதுவுமே பேசப்படவில்லை. பரோட்டா, பீட்ஸா போன்ற உணவுகளை உட்கொள்ளாதீர்கள் என்றுகூட சொல்லவில்லை. ஆகவே இக்கேள்வியை கேட்பதில் எந்த பொருளுமில்லை என்று தோன்றியதால் நாங்கள் இதை தவிர்த்துவிட்டோம்.

இந்த தொடுசிகிச்சை முகாமில் ஏற்பட்ட பிற அனுபவங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

– தொடரும்

(அடுத்த பகுதி)

 

 

Advertisements

Leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create your website at WordPress.com
Get started
%d bloggers like this: